ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2018

குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தை ஒருவருக்கொருவர் சங்கடத்தால் வரும் தொல்லைகள்…!


வீட்டில் கணவன் மனைவி குழந்தை என்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் தாய் வேதனைப்படுவார்கள்.

தன் கணவனைப் பார்த்து பையன் சேட்டை செய்கிறான். ஆனால் நீங்கள் ஒன்றுமே அவனைச் சொல்ல மாட்டேன்… என்கிறீர்கள். அவனைக் கண்டித்தால் என்ன...! என்பார்கள். இதை எப்பொழுது சொல்வார்கள்...?

வேலைக்குப் போவதற்கு முன்னாடி இப்படிச் “சுருக்…!” என்று சொல்லி விட்டால் என்ன ஆகும்...? ஏனென்றால் வீட்டில் இருக்கும் மனைவிக்கோ தான் நியாயத்தைத் தான் சொல்கிறோம் என்ற நிலைகள் வருகிறது.

பையன் இப்படித் தப்பு செய்கிறான். அவனை எப்படியும் நல்ல வழி ஆக்குவதற்கு நீங்கள் பார்த்து மனது வையுங்கள்...! என்று சொன்னால் உடனே இது சாந்தமாகும்.

ஆனால் அவன் இப்படியே செய்து கொண்டே இருக்கிறான் நீங்கள் கேட்காமலே போய்க் கொண்டே இருக்கிறீர்கள் என்று சொன்னால்
1.இந்த உணர்வு தனக்கும் கெடுதல்
2.இதைக் கேட்டறிந்த உடனே கணவரின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அவர் சுவாசிக்கிறார் அவர் உயிரிலே படுகிறது.
4.கணவன் உடலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அந்த வெறுப்பான அலைகள் எழுந்து
5.காற்றிலிருந்து இழுத்துச் சுவாசித்து முன்னாடி வைத்துக் கொள்கிறது.

தப்பு ஒன்றும் பண்ணவில்லை. ஆனால் குடும்பத்தில் எவ்வளவு நிம்மதி இருந்தாலும்… பொருள் இருந்தாலும்… இந்த மாதிரிச் சொல்லி விட்டால் குடும்பத்திற்குள்ளே வெறுப்பு வளரும். 

வீட்டுக்கு வெளியே யாராவது ஒருவரை ஒருவர் திட்டிப் பேசுவார்கள்.  அதைக் காதிலே கேட்போம்.
1.திட்டுபவன் போக்கிரியாக இருந்தால் என்ன செய்வோம்...!
2.நாம் ஏதாவது சொன்னால் நம்மைத் திருப்பி ஏதாவது பேசிவிடுவான் என்று அப்படியே மடக்கிக் கொள்வோம். (கண்டு கொள்ள மாட்டோம்)
3.அப்படி அல்லாதபடி தனக்குப் பக்கபலம் இல்லாதவர்களாக இருந்தால் “இவனுக்கெல்லாம் என்ன திமிர்…!
4.இவனை எல்லாம் இரண்டு தட்டியே தட்டி ஆக வேண்டும்...! என்று நினைத்து அந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொள்வோம்.

ஏனென்றால் அந்த எதிர் உணர்வுகளின் நிலைகளை நாம் எண்ணிப் பார்க்கும் போது நம்மிடம் உள்ள உணர்வே “வித்தியாசமாக வரும்….!” நாம் தப்புப் பண்ணவில்லை. இருந்தாலும் எந்த உணர்வின் குணத்தை எடுத்து வளர்த்தோமோ அது அங்கே வந்துவிடும்.

அதே சமயம் வீட்டில் ஏதாவது கொஞ்சம் குறையாகச் சொன்னால் வேகமாக நமக்குக் கோபம் வரும். பொறுமையாகச் சொல்லி இந்த நல்ல வழியைச் சொல்லலாம் என்று இருக்காது.

தன் மனைவி பையனைக் கண்டிக்கவில்லை என்று சொன்னவுடனே… என்ன சொன்னாலும் இந்த அறிவு கெட்டவன் இப்படித்தான் செய்வான்…! என்று தன் பையனைச் சொல்வார்.

அதாவது வேலைக்குப் போகும் போதே மனைவியிடம் ஏதாவது சொல்லச் சொல்கிறாயா…! என்கிற அந்த உணர்ச்சி வேகத்தில் இப்படி வந்துவிடும். அப்போது நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் சந்தர்ப்பம் இப்படி உருவாக்கப்படும் போது இதே நிலை வெளியிலே தொழிலுக்குப் போனவுடனே நம் உணர்வுகளின் மணம் நம் மேலதிகாரியை நம்மையும் வெறுக்கச் செய்கிறது.

எப்படி…?

நாம் தொழில் செய்யப்போகும் போது அங்கே இந்த இருள் சூழ்ந்த நிலைகள் நம் உடலில் மணமாகும். நாம் சுவாசிக்கும் போது நம் எண்ணம் அதுவாகும். ஒரு வேலையைச் சொல்லப்போகும் போது நாம் தவறு செய்கிறோம்.

மேலதிகாரி வந்தவுடன்… ஏனப்பா இந்த மாதிரி…? என்று கேட்கும்போது நம்முடைய உணர்வும் தவறு செய்த உணர்வும் வேதனை கொண்ட உணர்வும் வாசனையாக வருகிறது.

அப்போது மேலதிகாரி வந்து நம்மைக் கூர்ந்து கவனிக்கும் போது நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் வீட்டிலிருந்து வரும் பொழுது எப்படி வெறுப்பும் வேதனையும் நாம் பட்டோமோ இந்த உணர்வை அவரும் சுவாசிக்க நேர்கின்றது.

சுவாசித்தவுடன் இனம் புரியாமல் அவர் நற்குணம் கெட்டு “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகிறாய்…!” என்று சொல்வார்.
(இது எங்கிருந்து வருகிறது…? வீட்டில் உற்பத்தியாகிறது. வீட்டில் உற்பத்தியானது அங்கே போகிறது)

தெரியாமல் தவறு செய்து விட்டேன்...! ஆனால் நான் அறிவு கெட்டதனமாகப் பேசுகிறேன்…! என்று என்னை மேலதிகாரி சொல்கிறார் என்று எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிச் சொல்லித் தன்னை அறியாமலேயே இப்படி வேதனைப்படும் நிலை வந்துவிடுகிறது.

1.ஆனால் அதிகாரி நம்மிடம் மேற் கொண்டு நோகவில்லை... நொந்து பேசவில்லை.
2.நம்முடைய உணர்வே அந்த நிலையைச் செய்கிறது.

நம்மிடம் இரண்டு பேரிடம் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்றால் மேலதிகாரி என்னை அறிவு கெட்டவன் என்று திட்டுகிறார் என்று சொன்னவுடனே அவர்களும் அக்கறையாக நம்மைக் கவனிப்பார்கள்.

அப்போது நாம் சொல்லும் போது நம் உடலில் உள்ள அதே வாசனை முன்னாடி போகும். நாம் எந்த வெறுப்போடு இருக்கிறோமோ அவர்களுடைய முகமும் மாறும்.

அவர்கள் நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட இந்தச் சங்கடமான உணர்வு கலந்தவுடன் நல்லதாக வராது.

அதே போல தையல் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், வீட்டில் மட்டும் கொஞ்சம் சங்கடமாக வந்து விடட்டும்.
1.இந்தச் சங்கடமான அலைகள் பட்டவுடனே நேராக தைப்பதற்குப் பதில் கோணல் மாணலாகப் போகும்.
2.துணியைக் கத்திரிக்கும் பொழுதே அறியாமலேயே ரூட் மாறிப் போகும்.

முதலில் தைக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்னாடி எப்படி நெளிந்து போகுமோ இதே மாதிரி சுவாசிக்கும் உணர்வலைகள் கொஞ்சம் மாறுபட்டுவிட்டது என்றால் தன்னிச்சையாக மடக்கக் கூடிய இந்தக் கையையும் அது இயங்க விடாதபடி தையல் சரியில்லாமல் போகும்,

இங்கே மடக்கி இருப்பார். ஆனால் அது பாட்டுக்கு வெளியில் தைத்துக் கொண்டு போகும். வெளியில் தைத்த உடனே என்ன செய்வார்…? சீ…! என்று சொல்லி விட்டு இரண்டாம் முறை பிரித்துத் தைப்பார். செய்த வேலை வீணாகின்றது.

செ...! எப்போது பார்த்தாலும் இப்படித்தான்...!
1.வீட்டில் இருந்தாலும் சனியன்…! ஒரே தொல்லையாக இருக்கின்றது.
2.இங்கே வேலைக்கு வந்தாலும் இப்படி இருக்கின்றதே...! என்ற இந்த எண்ணம் வரும்
3.அப்புறம் வீட்டின் மேல் வெறுப்பு வளர்ந்து கொண்டே இருக்கும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் தான் நம்மை இப்படி இயக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. அதே உணர்வின் மணத்தை மற்றவர்கள் நுகரும்போது அந்த உணர்வே அங்குள்ளவர்களையும் இயக்குகின்றது. நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் அது இப்படித்தான் செயல்படுகின்றது…!

இதைப் போன்ற நிலைகள் வரும்போது இதையெல்லாம் நாம் எப்படிச் சரி கட்டுவது..? வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எமக்கு அனுபவரீதியாகக் கொடுத்த நிலைகளைத்தான் இங்கே உபதேச வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றியமைக்க அந்த மெய் ஞானிகளின் உணர்வை எப்படி எடுக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றோம். அதன் வழியில் நீங்கள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டே வந்தால் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்ககொப்ப ஞானங்கள் உங்களுக்குள் தோன்றும்.

உங்களால் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் நிச்சயம் விடுபட முடியும்…!