மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் ஏங்கி எடுக்கக்
கற்றுக் கொள்ளுங்கள். நான் அதை எடுத்தேன்...! வரவில்லை என்று யாரும் எண்ண வேண்டாம்.
ஒரு அழுக்குத் துணியைத் துவைக்கிறோம் என்றால் அழுக்கு முழுவதும்
போகும் வரையிலும் அடுத்தடுத்து சோப்பைப் போட்டு நீக்குகின்றோம்.
ஒரு உலோகத்தை உருக்கி அதை ஒரு பொருளாக்க வேண்டும் என்ற
நிலையில் (வார்ப்பு – MOULDING) செயல்படுத்தும்போது சரியாக வரவில்லை என்றால் மீண்டும்
அதை உருக்கிச் சரியான பருவத்திற்குக் கொண்டு வருகின்றோம். இதைப்போல தான்
1.மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் திரும்பத் திரும்ப எடுத்து
2.ஆத்ம சுத்தி என்ற நிலையில் உள் செலுத்தி
3.மெய் ஞானிகளின் உணர்வைச் சீராக வளர்த்திடும் எண்ண
4.வலுவை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
அதற்குத் தான் தியானமும் அதனின் துணை கொண்டு நீங்கள் எண்ணி ஏங்கும்
பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைக் காற்றிலிருந்து எடுக்கப் பழக்குவதற்கே இந்த ஆத்ம
சுத்தி.
தையற் கலையைக் கற்றுக் கொண்டவர்கள் நம்முடன் பேசிக் கொண்டே சீராகச்
தைத்து விடுவார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ளச் செல்பவர்கள் சீராகக் கூர்ந்து
கவனித்தாலும் அதை நேராகத் தைக்க முடியாது.
1.கூர்மையான உணர்வை மீண்டும் மீண்டும் அதற்குள் செலுத்தி
2.நம்முடைய உணர்வின் நிலைகளைச் சீராக வளர்த்துக் கொண்டால்
3.அந்த உணர்வில் நாம் வேலை செய்யும் எண்ணமே அது நம்மைச் சீராக அழைத்து
செல்லும்.
உதாரணமாக கண் பார்வை இழந்தவர்கள் தன் உணர்வின் ஆற்றலால் சில
பின்னல் வேலைகளைப் பின்னிப் பழகுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கமே
சரியான அளவு கோலைப் பிடித்து அதைப் பின்னச் செய்கின்றது.
1.கண் தெரிந்து நாம் பின்னும் நிலையைக் காட்டிலும்
2.கண்ணற்றவர்கள் அதைப் பழகி அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அழகாகக்
கலரையும் இணைக்கின்றனர்
3.தெளிவாக அந்தப் பின்னலையும் உருவாக்குகின்றனர்
4.கண்ணுள்ளவர்கள் கலரைப் பார்க்கின்றோம்... கண்ணற்றவன் தடவிப் பார்த்து
அந்த உணர்வின் கலரைப் பார்க்கின்றனர்.
இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்ற அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் அந்த நிலை பெறுவதற்குத்
தான் ஆத்ம சுத்தி என்று பழகிக் கொடுக்கின்றோம்.
உங்கள் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அதை நீக்க உங்கள் எண்ணத்தால்
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் உயிருடன் இணைக்கச் செய்யும் போது
அது ஜீவன் பெற்று உங்களுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.
வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறையான உணர்வுகளோ பலவீனமான
எண்ணங்களோ உங்களுக்குள் வந்தாலும்
1.அதை மனதில் ஏற்றுக் கொள்ளாது
2.மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி
செய்து
3.அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகளைத் தணித்து
4.மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஓங்கி வளர்க்கச் செய்வதே
ஆத்ம சுத்தி.
5.இதுதான் உண்மையான தியானம்...!