ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2018

உலக ஆசைகளில் பித்துப் பிடித்துப் பித்தனாக இருக்கின்றார்கள்....!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அவர் ஒரு பித்தனைப் போன்று தான் வாழ்ந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் போது “ஒன்றும் அறியாத பித்தன்...!” என்று தான் தெரியும்.

ஒரு மாமரத்தில் பிஞ்சாகிக் காயாகும் பொழுது புளிப்பின் தன்மை அடைந்தாலும் அது கனியாகும் பொழுது மற்றவர்கள் அதை ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அதைப் போன்று தான் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் நிலையில் எத்தகைய நஞ்சினையும் அவர் நுகராது அவர் இனித்த வாழ்க்கையின் நிலையைத் தனக்குள் எடுத்துக் கொண்டார். அதாவது
1.நஞ்சினை வெறுத்து
2.மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.தன்னிச்சையாக அவர் மகிழ்ந்த உணர்வுடன் இருக்கும் போது
4.பார்ப்போருக்கு அவர் “பித்தனாகவே...” காணப்பட்டார்.

பித்தான உடலுக்குள் நின்று ஒளியான சத்தின் தன்மைகளைத் தனக்குள் வளர்த்தார். அகண்ட அண்டத்தினையும் அறிந்துணர்ந்து அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றினார்.

இந்தப் பூமியில் பற்றற்ற நிலைகள் கொண்டு மெய் ஞானிகளின் உணர்வின் மீது பற்று கொண்டு அதனை அவர் வளர்த்துக் கொண்டு விண்ணுலகம் செல்லும் நிலை பெற்றார்.

ஆகவே அவர் காட்டிய நிலைகள் கொண்டு நமக்குள் எதைப் பற்ற வேண்டும்...? எதைப் பற்றற்றதாக இருக்க வேண்டும்...?

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையில் பிறரை அழித்திடும் உணர்வுகளை நமக்குள் இணைய விடாது அதை விடுத்துப் பழக வேண்டும். அதைப் பற்றற்றதாக்க வேண்டும்.

அந்த மெய் ஞானியின் உணர்வுடன் பற்று கொண்டு தீமைகள் நம்மைப் பற்றிடாது நம்மைக் காத்திடும் நிலையாக வருதல் வேண்டும். இப்படிச் சொல்லும் பொழுது “என்னைப் பித்தன்...!” என்று மற்றவர்கள் சொல்கின்றனர் என்றார் குருநாதர்.

ஆக மற்றவர்கள் என்னைப் பார்த்துப் பித்தன் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இந்தப் புவியின் ஆசை கொண்டு உடல் பற்று கொண்டு செயல்படும் போது அந்த ஆசையின் நிலைகளில் “அவர்கள் பித்தனாக இருக்கிறார்கள்...!” என்று உணரவில்லை.

நான் பித்தனாகத் தெரிந்தாலும்...
1.இந்த உடலின் தன்மைக்கோ
2.பித்து கொண்ட உடலின் உணர்ச்சிகளுக்கோ அடிமையாகவில்லை.

அதை எல்லாவற்றையும் அடக்கி அந்த மகா ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற
1.அந்தப் பித்துப் பிடியாகத்தான் நான் இங்கே இருக்கின்றேனே தவிர
2.மற்றவர்கள் காட்டும் உடலின் பித்துப் பிடியாக நான் இல்லை என்றார்.