ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 4, 2018

தலைக் காவிரியில் அகஸ்தியர் அமர்ந்த இடத்தில் என்னை அமரச் செய்து அங்கே நீர் எப்படி உற்பத்தியாகின்றது...! என்று குருநாதர் காட்டினார்

குருநாதர் மெய் ஞானத்தின் உணர்வுகளை எமக்கு (ஞானகுரு) நேரடியாக் கொடுக்கவில்லை. சூட்சமமாகவே கொடுத்தார். ஏனென்றால் அவர் “பைத்தியம்...!” போன்று இருக்கப்படும் போது அவர் காலிலே சில வேஷ்டிகளையும் வேறு துணிகளையும் பல நிறங்களில் கிழித்து கட்டிக் கொள்வார்.

பல நிறங்கள் கொண்ட துணிகளைக் கிழித்துக் கிழித்து ஏன் அவ்வாறு கட்டுகிறார் என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் பைத்தியத்தைப் போல அவர் நடித்துக் கொண்டு இருநதார்.

ஆகையினாலே நான் கேட்டாலும் ஒரு நிமிடம் நன்றாகப் பேசுவார். அடுத்த நிமிடமும் பைத்தியக்காரர் போல எதை எதையோ சொல்வார். அவரைப் பார்க்கும் பொழுது என்னுடைய எண்ணமும் அப்படித்தான் இருந்தது.

துணிகளைக் காலில் கட்டிக் கொள்ளும் போது
1.அவர் ஒரு பரிபாஷையில ஒன்று சொல்வார்.
2.அப்பொழுது அவர் சொல்லும் பரிபாஷை எனக்கு ஒன்றுமே விளங்காது.

அதே சமயத்தில் காலில் துணிகளைக் கட்டியது போல் சில செடி கொடிகளிலும் கட்டுவார். அந்தச் செடி கொடிகளை என்னிடம் காட்டி இதற்கெல்லாம் இது எல்லாம் யாருடா சோறு போடுவது...? என்பார்.

அது சோறே சாப்பிடாது சாமி...! என்று நான் சொல்வேன். சோறு சாப்பிடாமல் அது எப்படியடா இப்படி வளர்ந்திருக்கும்...? என்று என்னென்னமோ அவர் சொல்வார். அவர் சொல்வதே எனக்குப் புரியாது.

புரியாத நிலைகள் கொண்டு ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு தெரியுமாடா... தெரியுமாடா...? என்று கேட்பார். நான் தெரியவில்லை என்றால் உடனே இரண்டு உதை கொடுப்பார். அந்த அடி வாங்கும் போது அவருடைய நினைவுதான் எனக்கு வரும். இப்படித் தான்
1.அவருடைய எண்ணத்தை எனக்குள் அது செருகச் செய்து கொண்டே வந்தார்.
2.இதெல்லாம் அவர் உடலுடன் இருக்கும் பொழுது காட்டிய நிலைகள்.

அவர் உடலை விட்டு ஒளியாகச் சென்ற பின் அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு அகஸ்தியர் வாழ்ந்த இடங்களுக்குப் போனேன்.

தலைக் காவிரியில் அகஸ்தியருடைய நிலைகள் நிறைய உண்டு. பாக மண்டலம் என்று ஒன்று உண்டு. அந்தப் பாக மண்டலத்திலே உச்சிமலை. அதிலே பார்த்தோம் என்றால் தண்ணீர் எவ்வளவு எடுத்தாலும் குறையாது.

அந்த உயரமான மலைக்குக் கீழ தான் மற்ற மலையெல்லாம் தணிந்து இருக்கின்றது. ஆனால் இந்த மலை உச்சியிலே அந்தப் பள்ளம் இருக்கின்றது. அதில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கின்றது.

அந்த நீரின் தன்மை அது எங்கிருந்து எப்படி வருகின்றது...? என்று முதன் முதலிலே அதை அறிவதற்காக என்னை அங்கே செல்ல வைத்தார்.

நான் ஜெபத்தில் இருக்கப்படும் போது அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எல்லாம் காண முடிந்தது. உயரமான பகுதியில் மேகங்கள் அங்கே செல்லும் போது
1.அந்த மலையில் இருக்கக்கூடிய காந்தம் அதாவது நீர்ப் பசை உண்டான அந்தச் சத்து
2.அந்த மேகங்களைக் கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகின்றது.
3.அங்கே மலையில் இருக்கும் சில மரங்களுக்கும் அந்த மேகங்களை இழுக்கும் இதே சக்தி வருகின்றது.

அந்த மேகங்களை இழுக்கப்படும் போது அந்த நீரைத் தனக்கு உணவாக எடுத்துக் கொண்டாலும் அந்த மரத்திலிருந்து வடிந்து அது மீண்டும் நீராக ஓடுகின்றது. அதனுடைய தன்மைகள் வேறு.

அந்த மலை இருக்கக்கூடிய இடத்தில் ஆதியிலே அகஸ்தியன் உட்கார்ந்து ஜெபிக்கும் பொழுது காற்றாகப் பறக்கும் அந்த மேகத்தை இழுத்து நுகர்ந்து அவர் உட்கார்ந்த இடத்தில் இருக்கும் பாறைகளில் எல்லாம் பதிகின்றது. பதிந்த இடங்கள் அனைத்துமே மேகங்கள் போகும் போது அதைக் கவர்ந்து அது நீராக வடியச் செய்கின்றது.

நாம் ஒரு சமையல் செய்யும் போது நீர் கொதித்து ஆவியாகப் போகின்றது. மேலே ஆவியாகப் போவதை இடைமறித்து ஒரு குளிர்ந்த தட்டை வைத்தால் அங்கே நீராகச் சொட்டுகின்றது. நாம் எந்தச் சத்தினை ஆவியாக மாற்றுகின்றோமோ குளிர்ந்த தட்டின் மூலம் குறுக்காட்டும் ஆவியாக போன சத்துகள் நீராக வடிகின்றது.

இதைப்போன்று தான் அன்று அகஸ்தியன் நுகர்ந்த அருள் சக்திக:ள் அங்கே மேகமே இல்லாத பாறைகளில் பதிந்த பின் அவனின் மணங்கள் (மூச்சலைகள்) பட்டவுடனே குவித்து மேகங்களாக மாறுகின்றது. மேகங்களாக மாறிய பின் தன் உணர்வின் சக்தியை இழுத்து இதற்குள் உறைந்தபின் நீராக மாறுகின்றது.

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய உண்மை நிலைகள். அவர் பித்தனைப் போல இருந்தாலும் அவர் காலிலே கட்டிய துணிகளும் அந்தக் கயிறும் அங்கே தெரிகின்றது. குருநாதரின் உருவமும் தெரிகின்றது.

அந்த இடத்தில் இருக்கக்கூடிய பச்சிலைச் செடிகள் சில மரங்களின் மீதும் அவர் காலில் கட்டிய அதே துணிகள் கட்டப்பட்டிருக்கின்றது.
1.அப்போது குருவின் நினைவு எனக்கு வருகின்றது.
2.அவர் முதலில் பரிபாஷையில சொன்னதெல்லாம் எனக்குப் புரியும் நிலைகளாக வருகின்றது.

ஆனால் அவர் உயிருடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் எனக்கு உணர்த்தவில்லை. இருந்தாலும் முதலில் அடி கொடுத்தார். அந்தந்த இடங்களுக்குச் செல்லப்படும் பொழுது அவரின் நினைவு வரும் பொழுது அக்காலத்தில் வாழ்ந்த மெய் ஞானிகளின் உண்மைகளை அறியும் நிலை வந்தது.

அகஸ்தியன் அவன் ஆரம்பக் காலங்களில் அவன் எங்கெல்லாம் சென்றானோ அந்த மலைகள் இருக்கக்கூடிய பகுதிகளில் எல்லாம் இதைப் போன்று நீர்கள் வரும். மைசூர் எல்லையிலும் இதே போல ஒரு இடம் உண்டு.

நாழிக் கிணறு மாதிரி இருக்கும். அதில் தண்ணீர் எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும். எடுத்தவுடன் அதே அளவு நிரம்பிவிடும். உச்சி மலை தான்.. அங்கே வேறு எதுவும் இல்லை.

அன்று அகஸ்தியன் அவன் சென்ற இடங்களெல்லாம் தான் எடுத்துக் கொண்ட ஜெப நிலைகள் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகளும் விண்ணிலிருந்து அது எப்படிப் பூமிக்குள் வருகின்றது...? என்பதை உணர்ந்தான்.

அதே சமயத்தில் வான்வீதியில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகளும் வெளிப்பட்டு வரும் பொழுது அதனின் நேர்ப் பார்வை கொண்டு குறிப்பிட்ட அட்சரேகையின் சுழற்சி வட்டததிற்குள் அது எப்படிச் செல்கிறது...? என்பதை அறிகின்றான் அகஸ்தியன்.

ஏனென்றால் நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை முறியடித்து பிரபஞ்சத்திற்குள் தணிந்த நிலைகளாக வரப்படும் போது அந்த அலைகளுக்கு மத்தியிலே செல்லும் ஒவ்வொரு கோளும் இந்தச் சக்தியை தனக்குள் நுகர்ந்து அது எப்படிச் செயல்படுகின்றது...?

அவ்வாறு கவரும் கோளுக்குள் சத்துகள் ஒன்றுடன் ஒன்று கலந்து அதனின் உணர்வின் சக்தி எப்படி மாறுகின்றது...? அந்தக் கோள் வெளிப்படுத்தும் சக்தியை அதற்கு அடுத்தாற்போல கீழ் வட்டத்திற்குள் இருக்கக்கூடிய மற்ற கோள்கள் அது எப்படிப் பருகுகின்றது...?

கடைசியாக எல்லாம் சேர்த்துச் சூரியனிடம் வரப்போகும் போது ஒன்று இங்கேயும் ஒன்று அங்கேயும் என்ற நிலைகள் நட்சத்திரங்களின் நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி இருக்கும் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இருக்கிறது...? என்ற நிலையை அகஸ்தியர் உணர்ந்தார்.

1.அந்த அகஸ்தியர் அமர்ந்த இடத்தில்
2.குரு காட்டிய நிலைகள் கொண்டு நான் அமர்ந்து தியானிக்கும் பொழுது
3.அகஸ்தியன் கண்ட விண்வெளியின் ஆற்றலையும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிய முடிந்தது.

அன்று ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை அந்த மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த நிலைகளை குரு பலத்தால் நுகர்ந்தறிய முடிந்தது. ஏனென்றால் மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளினுடைய உணர்வின் சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது.

காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண் உலகம் சென்றவர்கள். விஷம் எப்படி மற்றொன்றை வீழ்த்துகின்றதோ அதைப் போல தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தான் அந்த மெய் ஞானிகள்...!

அவர்களுடைய உணர்வை இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் நாம் பெற வேண்டும் என்றால் நம் நினைவலைகளைச் சுத்தமாக மாற்றிவிடும்... செயலற்ற நிலைகளாக ஆகிவிடும்....! நம்முடைய சாதாரண எண்ணத்தால் அதைக் கவர்ந்து இழுக்க முடியாது.

அரசர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விஷத்தை சிறுகச் சிறுகக் கொடுத்து அந்த விஷத்தின் தன்மையை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து அதன்பின் பெரும் கொண்ட விஷத்தைக் குடித்தாலும் தன் குழந்தைகளைப் பாதிக்காத வண்ணம் அன்று எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போன்று தான் குருநாதரும் எனக்குள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை பெறும்படி செய்தார்.

முதலிலே அவர் உணர்த்தும் போது வேறோரு நிலையில் தான் எனக்குக் காட்டினார். பின்பு அதன் வழியில் சிறுகச் சிறுக என்னுடைய எண்ணத்தின் ஏக்கத்தை நிலைபடுத்தச் செய்து அகஸ்தியர் சென்ற இடங்களுக்கெல்லாம் மலைப் பிரகாரங்களில் சுற்ற வைத்தார்.

ஆனால் அப்படிச் சுற்றும் போது பல பல கஷ்டங்களும் பல கடுமையான இன்னல்களும் என்னைத் தாக்கும் நிலைகளாக வந்தது. பின் அதிலிருந்து “எப்படியும் மீள வேண்டுமே...!” என்ற ஏக்கம் வரும் பொழுதுதான் அங்கே அமர்ந்து அமைதி கொண்ட நிலையில் அந்த மெய் ஞானிகளுடைய ஆற்றலை அணுகும் நிலைகள் எனக்குள் வந்தது.

1.விஷத்தை முறிக்கும் அந்த அகஸ்தியனின் மூச்சலைகளை நுகர்ந்து
2.எனக்குள் வந்த துன்பங்களையும் வேதனைகளையும் அகற்றி
3.மெய் ஒளியைக் காணும் அந்த உணர்வின் ஆற்றலை எனக்குள் பெருக்க முடிந்தது.

அப்படிப் பெருகிய ஆற்றலைத் தான் நீங்கள் துன்பம் என்று வரும் போதெல்லாம் உங்களுக்குள் உபதேசமாகச் சிறுகச் சிறுகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

இதைப் பெறவேண்டும் என்று எந்த அளவிற்கு நீங்கள் ஏக்கமாக இருக்கின்றீர்களோ அந்த அளவுக்கு அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை உங்களைச் சுவாசிக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.