நம் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளும் எப்படிச் சூரியனைச் சுழன்று வருகின்றதோ இதைப்
போல பேரண்டத்தில் ஒவ்வொரு நிலையும் இயங்கிக் கொண்டுள்ளது.
1.ஆதியிலே ஆரம்ப நிலைகள் சூரியனாகத் தோன்றிய அந்த நிலையை மையமாக வைத்துத்தான்
2.நமது பிரபஞ்சம் சுழன்று கொண்டு வருகின்றது.
அப்படிச் சுழன்று வந்தாலும் மற்ற பேரண்டத்தில் இருந்து வரக்கூடிய விஷத் தன்மையை
நம் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் இருபத்தியேழும் இருபத்தியேழு குணம் கொண்டிருந்தாலும்
அந்த விஷத்தை வீழ்த்தி நமது பிரபஞ்சத்திற்குச் சமமான நிலைகளாக அது இயக்கச் சக்தியாக
மாற்றுகின்றது.
அதாவது நம் எண்ணத்தால் மற்றொன்று தன்னை அணுகாதபடி செயல்படுத்துகின்றோம் அல்லவா…!
இதைப் போல இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களும் தன்னுடைய கதிரியக்கச் சக்தி கொண்டு பேரண்டத்திலிருந்து வரக்கூடிய
விஷத் தன்மையை முறித்து நம் சூரியக் குடும்பத்திற்குப் பாதுகாப்பானதாக மாற்றி அனுப்புகின்றது.
அதை எல்லாம் கோள்கள் கவர்ந்து எடுத்து அந்த உணர்வின் சத்தைக் கலக்கி மற்ற சத்துக்களைத்
தனக்குள் கலந்து அது வெளிப்படுத்தும் நிலையைச் சூரியன் தனக்குள் எடுக்கின்றது.
அவ்வாறு எடுக்கும் அந்த உணர்வின் சக்திக்குள் இருக்கும் விஷத் தன்மையைச் சூரியன்
பிரித்து வெப்ப காந்தங்களாக மாற்றிச் சக்தி வாய்ந்த நிலையாக ஒரு இயக்கத் தன்மையாகப்
பெறுகின்றது.
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் “நட்சத்திரங்கள்…”
2.நாம் எண்ணக்கூடிய எண்ணம் எதை எதையெல்லாம் எண்ணி நுகர்கின்றோமோ எத்தனை விதமான
குணங்கள் இருந்தாலும் அதையெல்லாம் நம் உடலாக அது “கோளாக…” மாறிவிடுகின்றது.
3.அந்தக் கோளிலிருந்து விளைந்த சத்தை நம் உயிர் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்களாக
மற்றதை இயக்கும் உணர்ச்சியின் தன்மையை அது பெறச் செய்கின்றது. உடலுக்கு நம் உயிர் “சூரியன்…”
பிரபஞ்சம் எவ்வாறோ அதே போலத்தான் நம் உடலின் தன்மையும் இயங்குகின்றது. விண்வெளியிலிருந்து
வரக்கூடிய நிலையை இருபத்தியேழு நட்சத்திரங்களும் மாற்றிக் கோள்களுக்கு அதை உணவாகக்
கொடுத்துக் கோள்கள் படைத்து வெளிப்படுத்துவதை சூரியன் தனக்குள் அது இயக்கச் சக்தியாக
மாற்றுகின்றது. அதைப்போலத்தான் நம் உயிரின் தன்மையும் மாற்றுகின்றது.
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
2.இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் நமக்குள்
எடுத்துச்
3.சமப்படுத்தும் நிலையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
நவக்கோள்கள் என்பது நவக்கிரகமாகக் காண்பித்து ஒன்றையொன்று பார்ப்பதில்லை என்று
வைத்திருப்பார்கள். ஏனென்றால் ஒவ்வொரு கோளின் சக்திக்கும் அது தனக்குள் ஒன்றுக்கொன்று
ஒத்துக் கொள்ளாது. ஆனாலும் அப்படிப்பட்ட எதிர்நிலையான நிலைகளைச் சூரியன் தனக்குள் சமப்படுத்தி
அதை இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
ஒவ்வொரு குணங்களின் நிலையும் நமக்குள் ஒத்துக் கொள்ளாத நிலை வரும் போது தான்
எதிர்மறையான நிலைகளாகி நமக்குள் மனக் கலக்கமும் பல நோய்களும் உருவாகின்றது.
1.அதை எல்லாம் நமக்குள் சமப்படுத்துவதற்கு
2.நவக் கோள்களின் சக்தியை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்றைய மகரிஷிகள் அனைவருமே அவர்கள் உடலிலே இதையெல்லாம் சமப்படுத்தி சூரியன்
எப்படிப் பிரகாசிக்கின்றதோ இதைப்போல தன் உடலுக்குள் வரக்கூடிய உணர்வுகள் அனைத்தையும்
ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலையாக ஒளியாகச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் இருக்கின்றனர்.
அந்த இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும்
எடுத்துத் தன் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியினை வளர்த்து
ஒளியாக மாற்றியவர்களை நாம் அறிந்து கொள்வதற்காகச் “சப்தரிஷி - ஏழாவது நிலை” என்று உருவகப்படுத்திக்
காட்டினார்கள்.
அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதனுடன்
இணைத்து இந்த உணர்வின் தன்மையை நாம் உயிருடன் சுவாசிக்கச் செய்யப்படும்போது இவை அனைத்தும்
ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக நம்மை மாற்றுகின்றது.
அவ்வாறு மாற்றச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு இதை உங்களுக்கு
உபதேசிக்கின்றோம்.
ஒரு பலகாரம் சுடும் பொழுது பல பல பொருள்களைப் போட்டு ஒரு சுவையின் தன்மையாக
உருவாக்குகின்றோம். இதைப்போல இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும் நவக் கோளின்
சக்தியையும் எடுத்து
1.சமப்படுத்தும் நிலையாகச் சுவையாக மாற்றி
2.அதை அறியும் ஆற்றலாகவும் ஒளியாக மாற்றும் நிலையாகவும்
3.மெய் ஞானிகள் கற்றுணர்ந்த அதே உணர்வின் தன்மையை நாமும் பெறவேண்டும்.
யாம் (ஞானகுரு) இதை உபதேசிக்கும் போது
நீங்கள் எந்த அளவுக்கு ஈர்ப்பு கொண்டு இதைச் சுவாசிக்கின்றீர்களோ இது அனைத்தையுமே உயிரான
குருவின் நிலைகள் கொண்டு குருக்ஷேத்திரப் போராக மாற்றுகின்றது.
அதாவது நம் உடலுக்குள் இருக்கின்ற நிலையும் நாம் சுவாசித்த அந்த மகா ஞானிகளின்
உணர்வு இரண்டையும் கலக்கச் செய்து
1.அதனின் ஜீவ சத்தியாக நமக்குள் ரசமாக வடித்து
2.ஒளியின் சுடராகப் பேரொளியாக நம் உடலிலே விளையச் செய்கின்றது.