ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2018

பெரும்பகுதியானவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழந்து வேதனையுடனே வாழ்கிறார்கள்…! அதற்கு என்ன காரணம்…?


இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலேயும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம்.

உதாரணமாக நமக்குத் தேவையான பொருள்கள் வாங்க வேண்டும் என்று கடைக்குப் போகிறோம். கடைக்காரருக்குத் தெரிந்தவர்கள் அங்கே வந்தார்கள் என்றால் அவர் அவர்களுக்குத்தான் முதலில் சரக்குகளை எடுத்து கொடுப்பார்.

நான் கேட்ட சரக்கைக் கொடுங்கள்…! என்று சொல்லிக் கொண்டிருப்போம். சொல்லச்…சொல்ல… நேரம் ஆக…ஆக… அந்தக் கடைக்காரர் மேல் நமக்குக் கோபம் வந்து கொண்டே இருக்கும்.

நாம் கோபமாகப் பார்த்தவுடன் கடைக்காரர் என்ன செய்வார்…? நான் கொடுப்பதற்கு முன்னாடி “இவருக்கென்ன ஆத்திரம்…!” என்று இன்னும் சிறிது நேரம் நம்மை நிறுத்தி வைப்பார்.

நாம் பொறுமை இழந்து என்ன செய்கின்றோம்...? ஏய்யா...! அவ்வளவு நேரமாக நின்று கொண்டிருக்கின்றேன். எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாயே…? என்ற நிலை தான் வரும்.

இதைப்போல வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இதைப் போன்ற உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின்
2.நாம் எதை எண்ணினாலும் கலக்கமுடன் தான் நாம் இருக்க முடிகின்றதே தவிர
3.எந்தச் செயலையும் நல்லதென்று (நிம்மதியாக) நாம் வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.

எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் பட்டு எல்லா குணங்களிலேயும் இது கலக்கப்பட்டு அதை நுகரப்படும் போது எதனெதன் அளவைக் கூட்டிக் குறைத்து நாம் சுவாசித்துள்ளோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளிலே நோய்கள் உருபெறுகின்றது.

ஒரு விதை அது வேகமாக வளர்ந்து வரப்போகும் போது
1.தன் அருகிலே சத்தின் தன்மை குறையப்படும் போது
2.அதற்குத் தக்கவாறு தாங்கும் நிலை அற்று விட்டதென்றால்
3.தன்னுடைய முதிர்வின் பலனைத் தரப்போகும் போது சீராக இல்லாதபடி “கருகி விடுகின்றது...”

இதைப்போலத் தான் மற்ற உணர்வுகள் கலக்கும் பொழுது மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு வேண்டிய வலு இல்லாதபடி அந்த நல்ல குணங்களை வளர்க்காத வண்ணம் இது தடைப்படுத்தி ஓரளவுக்கு அது நம்மைச் சிந்தனையற்ற நிலையாக்கி விடுகின்றது.

சிந்தனைகள் கிளர்ந்தாலும் நல்லதை செயல்படுத்த முடியாத நிலைகளுக்கு அது உள்ளாக்கி விடுகின்றது. நல்ல குணங்களை வளர்ச்சியடையாது குன்றும் பொழுது உடல்கள் குன்றி… உணர்வுகள் குன்றி… அது வேதனை என்ற நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றால் நாம் எந்த மணத்தை அதிகமாகச் சேர்த்திருக்கின்றோமோ அந்த மணத்திற்கொப்ப இன்னொரு உடல் இருந்தால் அதனின் ஈர்ப்பிற்குள் சென்று அந்த உணர்வின் சத்தை எடுத்து அந்த உடலாகப் பெற்று விடுவோம்.

நம் வாழ்க்கையில் கலக்க உணர்வுகள் இப்படிச் சேர்க்கப்பட்டுச் சிந்திக்கும் செயல் இழந்து மனிதனல்லாத உடலாக மாற்றிவிடுகின்றது.
1.இதையெல்லாம் செய்வது யார்…?
2.நம் உயிரின் தன்மையே…!

ஆனால் மனிதனுடைய ஆறாவது அறிவு தீமையை நீக்கும் திறன் கொண்டது. “தீமையானது…” என்று இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்திப் நல்லதாகப் படைக்கும் நிலைகள் பெற்றவர்கள் நாம்.

இயற்கையில் வந்த ஒவ்வொரு பொருளையும் இன்று செயற்கையில் இணைக்கச் செய்து எத்தனையோ தாவர இனங்களையும் மற்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளார்கள் மனிதர்கள். உயிரினங்களயும் கூட அது எத்தனையோ புதுப் புது ரூபங்களாக மாற்றி அமைத்துள்ளார்கள்.

இந்தச் சக்தியை புற நிலைக்குத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால் தங்கள் ஆறாவது அறிவை அக நிலைக்குப் பயன்படுத்தி ஏழாவது அறிவாக உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள் மெய் ஞானிகள்.

மெய் ஞானிகள் தன் வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வினை ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுத்து
1.நம்மை அறியாது நம் நல்ல குணங்களுக்குள் கலக்கச் செய்யும்
2.தீமை செய்யும் உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளையும் நீக்கி
3.அந்த எண்ணங்களை அடங்கச் செய்வது தான் மனிதனின் கடைசி நிலை.