ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2018

தீப ஒளிச் சுடரை நமக்குள் ஏற்றச் செய்து "மோட்சத்திற்கு வழி காட்டுகின்றார்கள் ஞானிகள்...!"


ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் தன் அருகிலே இருக்கக்கூடிய மற்ற பொருள்களைக் காணச்  செய்கிறது.

இதைப் போல நமது உயிர் ஒளியாக இருக்கின்றது.
1.நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் குணத்தையும்... மணத்தையும்...
2.நமக்குள் உயிர் ஒளியாக (வெளிச்சமாக) நின்று
3.உணர்வின் வழியில் மனத்தின் வழியில் நமக்கு உணர்த்துகின்றது அறியச் செய்கின்றது.

அதாவது உயிர் நமக்குள் தீபமாக இருந்து சுடராக இருந்து
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அப்பொருளை
2.நுகர்ந்த உணர்வின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஊட்டி
3.உணர்வால் நம்மை அறியச் செய்கின்றது. 
4.மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

நமது ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிய வேண்டும் என்று நினைவுபடுத்தும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

உலகில் அசுரன் தோன்றி கொடிய செயல் கொண்டு மக்களைக் கொன்று குவித்துக் கொண்டுள்ளான். அவனை வதம் செய்யக் கிருஷ்ண பரமாத்மா கண்ணன் ரூபமாகப் பூலோகத்திலே தோன்றினான். அந்த நரகாசுரனைக் கண்ணன் வென்றான் என்று ஒரு சாரார் காட்டுகின்றார்கள்.

முருகன் வழியில் எடுத்துக் கொண்டால் முருகன் உலகில் தோன்றிய அசுர சக்திகளை அகற்றி அதைக் கொன்று குவித்தான் என்று கூறும் காவியங்களும் உண்டு.

அத்தகைய காவியங்களில் தப்பில்லை. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள மூலக் கருத்தைத் தான் நாம் பிழையாக அறிந்து கொண்டு செயல்பட்டு வாழ்ந்து கொண்டுள்ளோம்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கெட்டதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உடலாக நம்மை அமைத்துக் கொடுத்தது நமது கண்கள் தான்...!

தன்னைத் தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட “பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்ற நிலையில் கூர்மையாக உற்றுப் பார்த்து தன்னை மீட்டிடும் உணர்வுகள் வளர்ந்து... வளர்ந்து... கூர்மையாகி...! நாம் வலுவாக ஆனதற்குக் காரணமும் இந்தக் கண்கள் தான்...!

தன்னை மீட்டிக் கொள்ளும் உணர்வுகள் கூர்மையான பின் அதனின்று வலுவான நாற்றத்தைப் பிளந்து நல்ல சக்தியை நுகரும் வராகனாகின்றது.

தீமைகளைப் பிரித்து நல்லதை நுகரும் சக்தியாக வலுவான நிலைகள் கொண்டு உயிர் நம்மை மனித உடலாக உருவாக்கினாலும் அத்தகைய இருள் சூழா நிலைகள் பெற ஒவ்வொரு நிமிடமும் நமக்கு வழி காட்டியது இந்தக் கண்கள் தான்...!

இப்படியெல்லாம் நம்மை நமது கண்கள் காத்து வளர்ந்து வந்த நிலையில் மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் அசுர உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
1.தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்
2.நம் “கண்ணின் நினைவாற்றலை...” விண்ணிலே கூர்மையாகச் செலுத்தி
3.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் வலிமையாக்கி வாழ்க்கையில் வந்த அசுர சக்திகளைக் கொன்று
4..ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்தத் தீமையும் நமக்குள் இயங்காதபடி அடிமைப்படுத்திட முடியும்.

அதாவது
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் அரவணைத்தோம் என்றால் அந்தப் பேரருள் உணர்வுகள்
2.தீபத்தின் ஒளியின் இருள் விலகுவது போல் ஒளியின் சுடராக நம் ஆன்மாவில் பெருகி
3.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் பேரொளியாகி
4.என்றும் நிலையான ஒளிச் சரீரத்தை ஒவ்வொருவரும் பெற முடியும்.