9/16/2018

மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் சேர்ந்தால் தீமைகள் அனைத்தையும் ஆவியாக்கிவிடும்…!


விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு நாம் எல்லோரும் ஓடியாடி வேலை செய்வோம். அன்றைக்குச் சரியான நேரத்திற்குப் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்போம்.
1.அப்பொழுது நம் பையன் எங்காவது வெளியே சென்றால்
2.இந்த நேரத்தில் எங்கடா போகிறாய்…? என்று உடனே இந்த வேதனைப்படுகின்றோம்.

அதே சமயத்தில் விரதம் என்ற நிலைகளில் இங்கே நாம் இருப்போம். பசியின் உணர்வுகள் உடலைக் குன்றச் செய்யும் போது
1.யாராவது அவசரமான வேலையைச் சொன்னால் போதும்
2.நம்முடைய எண்ணங்கள் உணர்ச்சி வசப்பட்டு
3.அவர்கள் மீது வெறுப்பின் நிலைகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோம்.

 கடன் வாங்கியாவது இந்த விநாயகரைப் பூஜித்து விட்டு அந்தக் கடனுக்கு வட்டி கொடுப்பதற்குப் பணமில்லாமல் திண்டாடுபவரும் பலர் உண்டு.

ஏனென்றால் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரைக் கும்பிட்டு அந்தப் பலன் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்கின்றனர். இதைப் போன்ற நிலைகளைத் தான் நம்மால் உருவாக்க முடிகிறதே தவிர நல்லதைச் செய்ய முடியவில்லை.

இதைப்போன்ற நிலைகளை நிறுத்தி விட்டு மெய் ஒளியின் உணர்வின் தன்மையைத் நமக்குள் வளர்த்துக் கொள்வதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

எப்படி…? அன்று மண்ணிலே செய்த விநாயகரை நீரிலே கரைக்கின்றோம். அதனின் பொருள் என்ன…?

அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மையை நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சேர்க்க வேண்டும்.
1.நம் உடலுக்குள் ஒட்டிய அந்த தீயவினைகளை - கடலிலே கரைப்பது போன்று
2.மெய் ஞானியின் அருள் ஒளிக்குள் கரைத்து விடும் நிலையைத் தான் அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

சாதாரணமாக நாம் எவ்வளவு திடகாத்திரமாக இருந்தாலும் வாழ்க்கையில் எதிர்பாராது நடக்கும் சம்பவங்கள் நம் மனதைப் பாதித்து உடலையும் கரைத்துவிடும்.

ஒரு 100 பவுண்ட் எடை இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையாக வைத்த உங்களுடைய பொருள்களை ஒருவர் தன் பொருள்களாக எண்ணி எடுத்துக் கொண்டு அந்தப் பொருள் அனைத்தையும் அவருடைய சொத்தாக ஆக்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாது உங்கள் மேல் அந்தக் கடன் பழியையும் சுமத்தி விட்டார்…! என்பதைத் திடீரென்று எதிர்பாராது சொன்னால் உங்கள் மனம் எப்படி இருக்கும்…?

அடப் பாவி… எல்லாவற்றையும் நம்பிக்கையோடு வைத்திருந்தேன்…! அவனை நல்லவன் என்று நம்பினேன். இப்படிச் செய்து விட்டானே… நாளைக்கு நான் என்ன செய்வேன்…? என்ற உணர்வில் ஏங்கி இந்த உணர்வைச் சுவாசிக்கச் சுவாசிக்க… 100 பவுண்ட் இருக்கும் உடல் தளர்ந்து எடை குறைவதைப் பார்க்கலாம்.

திடீரென்று எதிர்பாராமல் இந்தச் சொல்லைச் சொல்லிப் பாருங்கள்.
1.சொன்னவுடனே அந்த உடல் அது தளர்ந்து
2.அந்த உணர்வுகள் “ஆவியாகி…!” எடைக் குறைவதைப் பார்க்கலாம்.
3.சொல்லி ஒரு பத்து நிமிடத்திற்குள் எடை போட்டுப் பாருங்கள்…!
4.எத்தனை பவுண்ட் குறைந்திருக்கிறார் என்று தெரியும்…!

இதைப் போன்று தான் தான் மெய் ஞானியின் அருள் ஆற்றலை நாம் நுகரும்  போது அது நமக்குள் சேர்ந்த விஷத்தின் தன்மைகள் அனைத்தையும் ஆவியாக மாற்றி வெளியேற்றிவிடும். (தீமைகளை இப்படிக் கரைத்து ஆவியாக மாற்றுவது தான் விநாயகர் சதுர்த்தி…!)

நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது திடீரென்று நம் உடல் வியர்ப்பதைப் பார்க்கலாம். இதைப்போல அந்த ஞானியின் அருள் சக்தியை நான் நுகரும் போது நம் உடலிலிருந்து விஷத்தின் தன்மை வெளிப்பட்டுவிடும்.

இதைப்போல தான் விநாயகர் சதுர்த்தியை பூஜிக்க செய்தார்கள், இதைத் தான் நாம் கோவிலுக்குள் செல்லும் போது விநாயகனைப் பூஜிக்காமல் சென்றால் நற் பலன் எதுவும் இல்லை…! என்ற நிலையும் சொல்லி உள்ளார்கள்.

விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அந்த மகா ஞானிகள் வெளிப்படுத்திய அந்த உணர்வின் தன்மையைச் சிறிதளவாவது நாம் நுகர்கின்றோமா…? சிந்தித்துப் பாருங்கள்…!