ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2018

ஞானிகள் கொடுத்ததை அரசர்கள் மந்திர ஒலியாகப் பிரித்துக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையாகத்தான் மாற்றினார்களே தவிர “விண் செல்ல முயற்சிக்கவில்லை…!”


1.தான் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி
2.அந்த மெய் உணர்வின் சத்தை “இப்படித்தான் வளர்க்க வேண்டும்…! என்று
3.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெய் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்.

அன்று ஆண்ட அரசர்கள் அதைத் தனக்குள் ஏற்றுக் கொண்ட பின் தனது சத்தாக மாற்றிப் போர் முறைகளாக மாற்றி விட்டார்கள். அதே சமயத்தில் தன்னுடைய சுகபோகங்களுக்காக மதங்களை உருவாக்கி அதிலும் பல பிரிவுகளை உண்டாக்கி விட்டார்கள்

ஆனால் அந்த ஞானிகள் கொடுத்தது என்ன...?

1.உன்னை அறியாது இருள்கள் எப்படி வருகின்றது...?
2.இதை மாற்றியமைக்க நீ என்ன செய்ய வேண்டும்...?
3.விண்வெளியின் ஆற்றலை நீ எப்படிப் பெற வேண்டும்...?
4.மனிதன் விண் செல்வது எவ்வாறு...? என்று அந்த ஞானிகள் பல சக்திகளைக் காட்டியிருந்தாலும்
5.ஆட்சி செய்த அரசர்களோ அதைத் தனக்குச் சாதகமாகப் பற்றிக் கொண்டார்கள்.

ஞானிகள் கொடுத்ததை அரசன் தன் இச்சைக்கு ஏற்ப அவன் உணர்வின் எண்ணங்களைக் கலந்து அந்த எண்ணங்களின் அடிப்படையில் மக்களையும்  கேட்கச் செய்து மதங்களாக உருவாக்கி அவன் உணர்வின் சக்தியை மந்திர ஒலியாகப் பதியச் செய்து விட்டான்.

ஒவ்வொரு மதத்தின் மூலமாகவும் நீ இந்த மந்திரத்தைச் சொன்னால்… “அந்த ஆகம விதிப்படி... ஆண்டவன் உனக்கு இன்னது செய்வான்...! என்று மக்களுக்குள் (நமக்குள்) பதியச் செய்து விட்டார்கள்.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அந்த இறந்த மனித உடலில் இருக்கக்கூடிய உணர்வின் எண்ணங்களைக் கவர்ந்து சக்தி வாய்ந்த மனிதனாக அன்றைய அரசன் மாறினான்.

கூடு விட்டுக் கூடு பாயும் நிலைகள் என்று கடந்த காலங்களிலே அரசர்களால் விளைவிக்கப்பட்டது இது தான். அவ்வாறு செய்பவர்களைத் தான் முனிவர்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் மகா ஞானிகளும் மகரிஷிகளும் இயற்கையின் தன்மையிலே இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை வெளிப்படுத்தினர்.

அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் சாதாரண மக்கள் மத்தியிலே அது படப்பட்டு அந்த உணர்வின் ஆற்றல் இயக்கப்பட்டால் “மக்கள் யாரும் தன்னை மதிக்க மாட்டார்கள்...!” என்பதால் ஞானிகள் சொன்ன மெய்ப் பொருளை மாற்றிவிட்டு மனிதர்கள் உடலிலிருந்து வெளி வரும் உணர்வலைகளை மந்திர ஒலிகளாகப் பிரிதெடுத்து அரசன் வாழ்ந்து வந்தான்.

தன்னைக் காப்பதற்காக அந்த மந்திர ஒலிகள் கொண்டு ஏவல் செய்து அடுத்த நாட்டிற்குள் இருப்பதை “அறிதல் என்ற நிலையில் கண்டறிந்து எதிரிகளை வீழ்த்துவதும் எதிரிகளை மடக்குவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

மிளகாய்... மிளகாய்... மிளகாய்... மிளகாய்... மிளகாய்... மிளகாய்... என்று ஆயிரம் தரம் சொன்னால்
1.அந்த மிளகாய் எப்படிக் காரமான உணர்வை எடுத்து அது விளைய வைத்துக் கொண்டதோ
2.அந்த மிளகாய்ச் சத்தினை நமக்குள் வளர்த்துக் கொள்ளப் போகும் போது
3.அதை அறியும் ஆற்றலாக வரும்.

அதாவது இந்தப் பூமியில் கல் மண் இவைகளிலிருக்கும் ஒவ்வொரு காரச் சத்தும் எதிர்நிலையாகும் போது ஒவ்வொரு உணர்ச்சியின் தன்மை பொங்கப்பட்டு அந்த உணர்வின் அலைகள் மாறுபட்டு
1.அந்த மிளகாய் காரத்தின் தன்மை எப்படி அடைந்தது...?
2.காரமான நிலைகள் கொண்டு இந்தப் பாறையிலே அது எப்படி விளைந்தது...? என்பதனை
3.இந்த மந்திர ஒலியால் கண்டுணரும் தன்மையும் வந்தது.

இப்படி வரக்கூடிய காலங்களில் தான் உலோகக் காலங்களாக மாறுகின்றது. பாறையின் தன்மையை ஒரு மனிதனில் விளைய வைத்ததைப் பல ஆயிரம் ஆயிரம் கோடி முறைகள் சொல்லப்படும் போது
1.மனிதனுக்குள் ஒரு பொருளின் இயக்கம் அது எதிர்நிலையாகும் போது
2.எதிர்நிலையான இந்த உணர்வின் சக்தி எப்படிக் கார உணர்ச்சியைத் தூண்டும் நிலையாக வருகிறது என்றும்
3.அந்த உணர்ச்சிக்குத்தக்க அது உருவம் எப்படி அமைந்தது என்ற உண்மையினுடைய நிலைகளையும் அன்று அரசர்கள் கண்டுணர்ந்தார்கள்.

அதைப் போன்றுதான் மந்திரத்தைச் சொல்லி ஒரு மனிதனின் ஆத்மாவைத் தனக்குள் இழுத்து அந்த உணர்வின் தன்மையை வீரியமாக வளர்த்துக் கொண்டபின் எந்த உடல் எனக்கு ஏற்றதோ... அந்த உடலுக்குள் சென்று... “கூடு விட்டுக் கூடு பாய்ந்தார்கள்...!”

தன் உடலில் வளர்த்துக் கொண்ட இச்சைகளை இந்த உடலில் அனுபவித்த பின் இன்னொரு உடலுக்குள் சென்று இதை அங்கேயும் மாற்றிக் கொண்டார்கள்.

அரசனும் அவனை மிகவும் அணுகியுள்ளவர்களும் இதை  வளர்த்துக் கொண்டு கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

உதாரணமாக ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஏனென்றால் அவர் தன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இன்னல்கள் பல.

அந்த இன்னலை நீக்க நாம் உதவி செய்கிறோம், அந்த உதவியால் தொழில் வகையிலும் குடும்பத்திலும் அவர் முன்னேற்றம் அடைகின்றார்.  கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு எனக்கு நல்ல நேரத்தில் உதவி செய்தார் “மகராசன்...!” என்று நம்மைப் பற்றி அவர் எண்ணுவார்.

இப்படி எண்ணினாலும் கடைசியில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் பொழுது உதவி செய்தவரை எண்ணி ஏங்குவார். அந்த ஏக்க நிலையில் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா உதவி செய்தவர் உடலுக்குள் விடுகின்றது என்பதை மெய் ஞானிகள் அன்று சொன்னார்கள்.

இதை அரசன் தனக்குச் சாதகப்படுத்தி எந்தெந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கட்டுப்படுத்தலாம் என்று மனித அந்த உயிராத்மாக்களைத் தனக்குள் எடுத்து ஏவல் செய்யப் பயன்படுத்தினார்கள்.

ஏவல் செய்யப்பட்டு
1.ஒரு பொருளை மாற்றுவதும் ஒரு பொருளை இயக்குவதும்
2.ஒரு எண்ணத்தை இயக்குவதும் ஒரு எண்ணத்தை மாற்றுவதும்
3.ஒருவனை அடிமைப்படுத்துவதும் அவன் எண்ணத்தை சிதறச் செய்வதும் போன்ற வேலைகளை எல்லாம் அரசர்கள் அன்று செய்தார்கள்
(இன்றும் இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது)

அன்று ஞானிகள் சொன்ன அந்த உண்மைகளை அரசர்கள் தங்களுக்குச் சாதகப்படுத்திக் கொண்டார்கள். ஞானிகள் இதை எதிர்த்தால் அவருடைய சிரசு இருக்காது. “இது முறையற்றது...!” என்று சொல்லும் பொழுது அரசனுக்கு எதிரியாகின்றான்.

அப்பொழுது அவரை அரசன் வீழ்த்திடும் நிலை வருகின்றது. அவன் சாகும் போது வெறுப்பின் தன்மை கொண்டு இறக்கின்றான். அவ்வாறு வெறுப்புடன் இறந்திருந்தால் அந்த வெறுப்பான உணர்வுகள் அரசனை அழித்துவிடும்.

ஆக மெய் உணர்வைக் காணாத நிலைகள் இவன் எடுத்த தீய வினைகள் தீய விளைவுகளை உருவாக்கி
1.அரசர்களும் எவரும் வாழ்ந்தவர் இல்லை.
2.அரசனுடைய நிலைகள் அனைத்துமே மடிந்து விட்டது.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய உண்மைகளை உங்களுக்கும் சொல்கின்றோம்.