ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2018

“பாரதம்...” மகாபாரதமாக எப்படி ஆனது...?


பூமி தான் ஓடும் வேகத்தில் சூரியனிலிருந்து வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க காந்த அலைகளுடன் உராயப்படும் போது தான் பூமி  உருவாகிச் சுழல்வதற்கே சக்தி வருகின்றது.

சுழற்சியின் சக்தி வரப்போகும் போது தான் பேரண்டத்திலிருந்து வந்து நம் பிரபஞ்சத்திற்குள் விளையும் மற்ற நட்சத்திரங்கள் கோள்களின் சக்தியை வட துருவம் கொண்டு ஈர்க்கும் சக்தி பெறுகின்றது.

வட துருவத்தின் வழியாக வரும் சக்திகளும் தென் துருவத்தில் இருந்து வரக்கூடிய வெப்ப அலைகளும் இரண்டும் மோதி பூமியின் சுழற்சியினால் உள்ளுக்குள் கலக்கச் செய்கின்றது.

அதே சமயம் சுழற்சியில் எதிர் நிலைகள் மோதி உராயும் தன்மை வரப்படும்போது அந்த இயக்கச் சக்தியினுடைய ஆற்றல்களை உமிழ்த்தி வெளிப்படுத்துகின்றது.
1.பூமி தன் உணர்வின் ஆற்றலால் எதிர் நிலைகள் கொண்ட விஷத் தன்மைகளுடன் மோதும் பொழுது
2.புறத்திலே “ஓ.....ம்.... ஓங்காரமாக...” அதீத வெப்பமாகின்றது.

பிரபஞ்சத்திலிருந்து வரும் அந்த விஷமான சக்திகள் பூமியின் வெப்ப வட்டத்திற்குள் சிக்கிய பின் அந்த விஷத்தின் தன்மை பிரிக்கப்பட்டு அதிலிருந்து வரும் தனிக் காந்தம் பூமிக்குள் ஈர்க்கும் சக்தியாக வந்து சேருகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனித உணர்வின் தன்மைகளுக்குள்ளும் அந்த இயக்கச் சக்தியினுடைய நிலைகள் இருக்கிறது என்பதை அன்று மெய் ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள்.

1.ஒன்றுடன் ஒன்று மோதி இயக்கும்
2.அத்தகைய இயக்கத்தின் தத்துவத்தை
3.ஆற்றல் மிக்க அந்தச் சக்தியின் தன்மைகளை உணர்த்தும் விதமாகக் காட்டப்பட்டது தான் “மகாபாரதம்....!”
ஒரு எல்லைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலைகளை “மகாபாரதப் போர்...” என்று காட்டினார்கள். இந்தப் பூமியின் தன்மையும் அவ்வாறு தான் சிருஷ்டியானது.

அதாவது “இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகள்...” இதைத் தோற்றுவித்ததனால் பாரதம்...! என்ற நிலையும் இந்தப் பாரதத்துக்குள் உருப்பெற்ற இந்தத் தத்துவ இயக்கத்தில் ஓர் அணுவின் இயக்கம் எவ்வாறு என்ற நிலைகளை மகாபாரதம் என்று காட்டினார்கள்.

(அவர்கள் காட்டிய) அந்த உணர்வு கொண்டுதான் நாம் இப்போது இயங்குகின்றோம். இப்போது நாம் பேசுவதும் போர் முறை தான்.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிருடன் உராயப்படும்போது
1.அந்த உராயும் தன்மை கொண்டு உடல் சூடாகின்றது
2.உஷ்ணத்தின் தன்மையால் காற்றாகின்றது
3.அதனால் தான் நமது உடலே ஜீவன் பெறுகின்றது.
(உயிர் வெளியேறினால் இந்த உடலில் உஷ்ணம் இருக்காது)

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை எந்த மணமோ இந்த மணம் பிரணவத்தின் (ஜீவன்) தத்துவத்தை அடைகின்றது.

ஒவ்வொரு உணர்வின் சக்தியையும் நாம் தெள்ளத் தெளிவாகத் தெளிந்து உணர்வதற்காகத்தான் அன்று காவியக் காப்பியங்களாக மெய் ஞானிகள் நமக்குத் தெளிவுற எடுத்துக் காட்டினர்.

மெய் ஞானிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தனக்குள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட அந்தத் தத்துவத்தின் நிலைகளைத் தான் இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் விண்ணுலகின் ஆற்றலைத் தன்னுள் அறிந்து தனக்குள் வளர்த்து வெளிப்படுத்திய உணர்வின் எண்ண ஒளிகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் படர்ந்துள்ளது.

அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகளைத்தான் உங்களுக்குள் கலக்கச் செய்கின்றோம். அந்த மெய் ஞானிகள் பெற்ற சக்திகளைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான் இந்த உபதேசமே.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் விண்ணும் மண்ணும் போற்றும் மகா ஞானிகளில் ஒருவராக “நீங்களும் இருப்பீர்கள்...!”