ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2018

மந்திரவாதிகள் செய்யும் கரு மை (முட்டை) செய்வினை ஏவல் போன்ற மந்திர தந்திரங்களிலிருந்து விடுபடுங்கள் – “உங்களால் முடியும்…!”

குருநாதர் எமக்கு (ஞானகுரு) ஆரம்பத்தில் சில சக்திகளைக் கொடுத்து அனுபவம் பெறச் செய்தார்.

தனியாகக் காட்டுக்குள் அழைத்துப் போய் ஒரு மரத்தைப் பார்த்து விரலை நீட்டி அவர் சொன்ன அந்தச் சொல்லை நான் சொன்னவுடன்… “மரம் அப்படியே  தூக்கி வீசி எறிகின்றது….!”

அப்படி ஆனவுடனே எனக்கு என்ன செய்கிறது...? திமிரே எனக்குள் வருகின்றது.

யாராவது வரட்டும்... ஒரு கை பார்க்கிறேன்...! எந்த மந்திரவாதி வந்தாலும் அவர்களை நான் என்ன செய்கிறேன் பார்...? என்று இந்த அகந்தை எனக்குள் வருகிறது.

விரலை நீட்டி மரத்தைத் தூக்கிப் போட்டவுடனே எனக்கு இப்படி வருகிறது. அப்போது தான் குருநாதர் சொல்கிறார். உனக்குள் அகந்தை எப்படி வருகிறது பார்த்தாயா...?
1.நீ எதைத் தூக்கி எறிய வேண்டும்...?
2.தீமை செய்வோரின் எண்ணம் உனக்குள் வராதபடி
3.அந்தத் தீமையைத் தான் தூக்கி எறிய வேண்டும்.

அந்தத் தீமையான நிலைகள் உன்னை ஆட்டிப் படைக்காதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உன் உடலில் தீமை என்ற நிலையைத்தான் தூக்கி எறிய வேண்டும்.

மரத்தை வீசி எறிந்ததும் அப்பொழுது யாரை நினைக்கின்றாய்...? உன்னை யார் எதிர்த்தாலும் அந்த மனிதனைக் கொல்ல வேண்டும் என்று தான் எண்ணுகின்றாய்.

ஆனால் அவனுக்குள் இருக்கக்கூடியது எது...? அந்தத் தீமையான செயல்…!
1.அந்தத் தீமையை அவனிடமிருந்து நகர்ந்து ஓடக்கூடிய நிலைகளில்
2.நீ எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை அங்கே பாய்ச்சி
3.அந்தத் தீமையைத் தூக்கி எறிய வேண்டுமே தவிர
4.நீ அவனை வீழ்த்தக் கூடாது…! என்று தெளிவாக்குகின்றார்.

திருநெல்வேலியில் ஒரு டாக்டர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி இது. அவர் குடும்பத்தில்  பழகின தோஷத்தில் மந்திரவாதிகள் பல வேலைகளைச் செய்தனர்.

அவர்கள் வீட்டில் பணம் வைத்திருந்தால் காணாமல் போய்விடும். என்ன தான் வீட்டை மூடி வைத்திருந்தாலும் பாத்திரங்கள் காணாமல் போகின்றது. புடவைகள் காணாமல் போகின்றது.

அப்புறம் இவர்கள் தியானத்தை எடுத்து அது ஓரளவுக்கு நிற்க ஆரம்பித்தது. இருந்தாலும் கூட மறுபடியும் என்ன செய்தார்கள்...?

வீடு பூட்டியிருக்கின்றது. வீட்டிற்குள் ஒரு முட்டை வருகின்றது. அதில் கரு மை தடவி இருக்கின்றது. அப்போது அவருக்கு மீண்டும் இந்த நினைவை ஊட்டுகின்றது.

மந்திரவாதிகள் செய்த உணர்வு காற்றிலிருக்கிறது. அதை மீண்டும் அவர்கள் எடுத்துச் சுவாசித்த அடுத்த கணம் வீட்டிலிருந்து பொருள்கள் காணாமல் போகின்றது.

இவையெல்லாம் இன்னொரு உடலில் உள்ள இந்த ஆவியின் தன்மைகள் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கின்றது. அவர்களும் ஆன மட்டுக்கும் பார்த்தார்கள். எல்லா மந்திரவாதிகளிடமும் போய் முடிந்த மட்டுக்கும் பார்த்து வந்தார்கள். ஒன்றும் ஆகவில்லை.

என்னிடம் (ஞானகுரு) அந்த டாக்டர் வந்தார். சாமி...! நீங்கள் இத்தனையும் சொல்கிறீர்கள். நீங்கள் இதைத் தடுக்கலாம் அல்லவா…!

எங்கள் பணமெல்லாம் போய்க் கொண்டே இருக்கின்றது. கட்டிக் கொள்வதற்குக் கூட சேலை இல்லை. கை கால் எல்லாம் எரிச்சலாக இருக்கிறது. என்ன செய்வது…! என்றே ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இதை நிறுத்தலாம் அல்லவா…! என்று எம்மிடம் கேட்கின்றார்கள்.

ஏனென்றால் தியானத்தைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்பவர்கள் சில பேர் இத்தகைய வினாக்களை எழுப்புகின்றனர்.

சாமி இத்தனையும் சொல்கிறார்…! ஏன் மந்திரவாதிகளை எதிர்த்துச் அவர் செய்யக்கூடாதா...? நான் தான் தியானம் செய்கிறேன் அல்லவா...! எனக்குச் சாமி இதைச் செய்யக்கூடாதா...? என்று வினாக்களை எழுப்புகிறார்கள்.

அதைத் தடுக்க வேண்டும் என்றால் நான் (ஞானகுரு) என்ன செய்ய வேண்டும்...? அந்தக் கடுமையான “ஒடியன்... மந்திரத்தை...” நான் ஜெபிக்க வேண்டும். அந்த உணர்வின் தன்மை எடுத்து அவர்களை நன் காப்பாற்றலாம்.

எப்படி...?

என்னிடம் இருக்கின்ற நல்ல குணங்களை வைத்து அவர்களைக் காப்பாற்றுவதற்குப் பதில் மந்திரத்தை வைத்து நான் தடுக்க வேண்டும்.

அதாவது..... குருநாதர் சொல்லிக் கொடுத்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் எடுக்காதபடி நிறுத்திக் கொண்டு மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்...!

இவ்வளவும் செய்த பின்பு நான் நல்லதைச் சொல்ல முடியுமா...!

அப்புறம் அந்த டாக்டரிடம் சொன்னேன்…! நீங்கள் எதுவாக இருந்தாலும் அந்த மந்திரவாதிகள் சொல்லை எடுக்க வேண்டாம். எனக்கு இப்படிச் செய்துவிட்டான் என்று எண்ணும் போது மீண்டும் மீண்டும் மந்திரவாதியின் உணர்வுகளைத் தான் நீங்கள் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.  

அதிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களைப் பாதுகாக்கும் சக்தியாக அது வரும் என்று சொல்லி அவர்களை மாற்றினேன். இது நடந்த நிகழ்ச்சி.

இதைப் போன்ற மந்திர தந்திர நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகவும் உண்மையின் இயக்கத்தை நீங்கள் அறிந்து தீமைகள் புகாது காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் இதைச் சொல்கிறோம்.

ஏனென்றால் மக்கள் எத்தனை நிலைகளில் அவதிப்படுகின்றார்கள் என்று குருநாதர் தெளிவாகக் காட்டினார். பல வகையிலும் பல அனுபவங்களைக் கொடுத்தார். (சும்மா சாதாரணமாக நான் உங்களிடம் சொல்ல வரவில்லை.)

ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக “எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால் எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது. நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து என்ன செய்யலாம்...?

யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும். “உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால் உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

ஆகவே யாம் (ஞானகுரு) இப்பொழுது என்ன செய்கிறோம்...?
1.உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சி நல்லதாக வேண்டும் என்று தான் யாம் தவமிருக்கின்றோம்
2.இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.