ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2018

பரிணாம வளர்ச்சியில் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்...!” மனிதனாக உருவான நாமும் அகஸ்தியனைப் போன்று அந்த வளர்ச்சி அடைய வேண்டும்


இயற்கையில் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி (அணுக்கள்) பல கோடி (எண்ணிலடங்காத) உணர்வின் சக்திகளாக மாறி மாறிப் பல செடி கொடி மரங்களாக மலர்கின்றது மாறுகின்றது.

அதே போல செடியில் புழுக்கள் உருவாவதைப் பார்க்கின்றோம். ஒரு பூவில் புழு உண்டாகியது என்றால்
1.அந்தப் பூவிற்கு எப்படி மொட்டுகளும் மொக்குகளும் இருக்கின்றதோ
2.அதைப் போன்ற மீசைகளும் ரோமங்களும் வளர்ந்து
3.பட்டாம் பூச்சியாக அது வளர்ச்சி அடைகின்றது.

சில பூக்களைத் தொட்டால் ஒரு விதமான பவுடர் மாதிரிக் கையில் ஒட்டிக் கொள்கின்றது. பட்டாம் பூச்சி போன்ற உயிரினங்கள் பூவிலிருந்து உருவாகும் நிலையில் அந்தச் சத்தை எடுத்து வளர்த்தால் அந்தப் பூவின் நிறமும் அமைப்பும் அப்படியே (XEROX போன்று) வரும்.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் ஒரு உயிரணு பல கோடித் தாவர இனச் சத்துக்களைத் தான் உட்கொள்கின்றது... பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

அடுத்து வண்டைப் பல்லி விழுங்குகின்றது. வண்டுகளைத் தவளைகள் விழுங்குகின்றது. பல பூச்சிகளைக் குருவிகள் விழுங்குகின்றது.

இதைப் போன்று ஒரு உயிரணு புழுவாகத் தோன்றியதிலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து பல பல கலவையின் நிலைகள் கொண்டு ஒன்றுக்கு ஒன்று இரையாகி உருமாறி உருமாறி இப்பொழுது நம்மை மனிதனாக உருவாக்கியிருக்கின்றது உயிர்.

நம்மைச் சிருஷ்டித்தது நம் உயிர். “ஆண்டவா...!” என்கிற பொழுது நம்மை ஆள்பவன் யார்...? நம்முடைய உயிர். நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையுமே இயக்கிக் கொண்டிருப்பது நம் உயிர் தான்.

இறைவா...! நாம் எண்ணிய எண்ணங்களே நமக்குள் இரையாகின்றது. அந்த உணர்வின் செயலாகத்தான் நாம் வந்துள்ளோம் என்ற உண்மையை அகஸ்தியன் அன்று தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஆனால் இப்படி மனிதனாக வந்த நாம் பரிணாம வளர்ச்சியில் அடுத்து எந்த நிலை அடைய வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா...?

அகஸ்தியரைப் பற்றி ஏற்கனவே நிறையச் சொல்லி இருக்கிறேன்.
1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் வென்றான்.
2.நம் பூமி நுகரும் பாதையை துருவத்தை எண்ணினான்.
3.துருவத்தின் வழியாகப் பூமிக்குள் வரும் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்தான்
4.அந்த ஆற்றல்கள் கல் மண் தாவர இனங்களாக எப்படி உருவாகிறது என்று அறிந்தான்
5.தாவர இனத்தை உயிரினங்கள் உணவாக உட்கொள்கிறது என்பதையும் அறிந்தான்
6.உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று இரையாகி வளர்ச்சி அடைந்ததையும் அறிந்தான்

வான இயல் புவி இயல் தாவரவியல் உயிரியல் என்று அனைத்தையும் அறிந்துணர்ந்தான். அந்த ஆற்றல்களை எல்லாம் தனக்குள் வளர்ந்துக் கொண்டான்.

திருமணமான பின் “தமக்கு எது வேண்டும்...?” என்ற நிலையில் அகஸ்தியனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகச் சேர்ந்தார்கள்.

அகஸ்தியன் தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவியும் பெறவேண்டும் என்று எண்ணினான். அகஸ்தியன் துருவ வழியில் கண்ட நிலைகளை எல்லாம் மனைவியிடம் சொன்னான். இந்த உணர்வு மனைவியிடம் வளர்ந்தது.

அகஸ்தியனின் மனைவி என்ன செய்கிறது...? தன் கணவர் உயர்ந்த சக்தி பெறவேண்டும். தானும் அவர் பெற்ற உயர்ந்த சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றது மனைவி.

மனைவி உயர்ந்த நிலை பெறவேண்டும் அது என் வழியில் இருக்க வேண்டும் என்று அகஸ்தியன் எண்ணுகின்றான்.

இதுவெல்லாம் இரண்டு பேரும் சேர்த்துத்
1.தங்கள் பார்வையில் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
2.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
3.அந்த உணர்வின் எண்ணங்களைக் கொண்டு வந்தார்கள்.
4.அந்த நல்ல எண்ணம் கொண்டு எந்தத் துருவத்தை அகஸ்தியனும் அவர் மனைவியும் நுகர்ந்தார்களோ
5.அங்கே போய் என்றும் பதினாறு என்று ஏகாந்தமாக பேரானந்தப் பேருநிலை பெற்று
6.மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
7.துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் அகஸ்தியனும் மனைவியும் துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் இந்த மனித வாழ்க்கையில் பரிணாம வளர்ச்சி அடைந்து “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைய வேண்டும்.

நம் பூமியின் வட துருவத்தில் விண்ணிலே இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுப் பிறவியில்லா நிலையை அடைவோம். எல்லோரும் அந்த நிலை பெறத் தவமிருப்போம்.