ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2018

நம் மனதிற்குள் வந்து மோதும் பல விதமான எண்ணச் சிதறல்களும்… அதைச் சமப்படுத்தும் வழி முறையும்…!

மின்சாரத்தின் (ELECTRIC) துணை கொண்டு ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எதனின் அழுத்தத்தைக் கொடுக்கின்றோமோ அதை எலெக்ட்ரானிக்காக (ELECTRONIC) மாற்றி அதற்குத் தக்க செயல்களைச் செய்து இயக்கிக் காட்டுகின்றது.

அந்தக் கம்ப்யூட்டர் இயங்குவது போலத்தான் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே மோதியவுடனே உணர்ச்சிகள் (எண்ணங்கள்) தோன்றி நம் உடல் முழுவதற்கும் பரவிக் கிடக்கும் அந்தந்த செல்களை இயக்கியவுடனே அதற்குத் தக்கவாறு நம்முடைய உடலின் இயக்கங்கள் ஆகின்றது.

ஒரு துணி நெய்யும் இயந்திரத்திலோ (SPINNING) அல்லது எம்ப்ராய்டரி (EMBROIDERING) பூ வேலைகளைச் செய்யக்கூடிய இயந்திரத்திலேயோ ஒன்றை அழுத்தி ஆணையிட்டால் (AUTOMATIC) போதும்.

அதனுடைய நேரப் பிரகாரம் (TIME) ஒவ்வொரு நிமிடத்திற்கும் மாற்றி மாற்றிப் இயக்கப்படும் போது அங்கே சரியான அமைப்புகளையோ (DESIGN) அல்லது பூ வேலைகளையோ அந்தத் துணிகளில் நெய்யும். அதைப் போன்று தான்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு
2.ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு நம்முடைய அங்கங்கள் இயக்குவதும்
3.நம்முடைய சொல்கள் வெளி வருவதும் (நம் பேச்சு)
4.கண்ணிலே எதிர் நிலையான அலைகள் உணர்வலைகளாகப் பாய்வதும் (நம் பார்வை)
5.ஒரு பொருளைப் பார்க்கும் நிலைகளும் அதனின் இயக்கமாக அமைகின்றது.
6.நாம் தவறு செய்யவில்லை என்றாலும்.. நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.

ஆனால் கண் கொண்டு நாம் ஒருவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. அப்படிப் பார்த்தாலோ அவர்கள் செய்யும் தவறான உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த உணர்ச்சிகள் “பொங்கி எழுகின்றது….!”

அந்த உணர்வலைகள் சீறிப் பாய்ந்து நம் உடல் முழுவதற்கும் படரப்போகும் போது போராகின்றது. நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-). நம்முடைய உயிரின் துடிப்பின் நிலையே அப்படித்தான் இருக்கின்றது.

உயிரணுவிற்குள் இருக்கக்கூடிய கதிரியக்கச் சக்தியும் வெப்ப காந்தமும் இரண்டும் மோதும் போது போர். அதனுடன் வியாழனின் சத்தின் எதிர் கதிரியக்கம் சேர்க்கப்படும் போது சுழற்சியாகின்றது.

1.உயிரணுவிற்குள் இப்படித் “திருகிக் கொண்டு” இருக்கும் இந்த உணர்வின் தன்மைள்
2.அந்த எதிர் நிலையான தாக்குதலாகும் போது தான் அது சீர்பட்டு
3.நேர் துடிப்பாக உயிருக்குள் துடிப்பு ஏற்படுகின்றது.
4.ஆக போர் முறைகளில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

சத்ரு... மித்ரு... என்ற இயக்கச் சக்தி இல்லை என்றால் நம் வாழ்க்கையில் சீராக ஒன்றும் செய்ய முடியாது.

நாம் ரோட்டிலே போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பஸ் வேகமாக வருகின்றது. அந்த உணர்வின் வேகத் துடிப்பை நமக்குள் ஈர்த்து நம் நல்லதுடன் மோதும் போது தான் “நமக்கு ஆபத்து...! என்று அறிந்து விலகிக் கொள்கின்றோம்.

அந்தப் பஸ்ஸின் வேகத்திற்குத் தக்கவாறு இந்த உணர்வின் இயக்கம் நம்மைக் காத்துக் கொள்ளும் உணர்வாக நம்மை உந்தித் தள்ளுகின்றது.
1.மனிதனின் வாழ்க்கையில் மோதும் உணர்வுகள் அனைத்தும்
2.இதைப் போன்று தான் இயக்குகின்றது.

நாம் நல்ல குணத்தைக் கொண்டு இருக்கும் போது ஒருவன் தவறு செய்கிறான் இருந்தால் இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டுக் குருக்ஷேத்திரப் போராகின்றது.

அதே சமயம் நம் நல்ல குணங்களுக்குள் சேர்ந்தவுடனே மேல்வலி தலைவலி வந்து விடுகின்றது. உடலுக்குள் மகாபாரதப் போராகின்றது.

இந்த பூமிக்குள் தோன்றிய அனைத்துச் சக்தியும் அது ஒன்றுக்குள் ஒன்று மோதிப் போராகும் நிலையை மகாபாரதப் போர் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி சுவாசிக்கும் போது ஒவ்வொரு அணுக்களின் செல்களிலும் எதிர் நிலையாகி அது நமக்குள் மாறுபட்டுக் கலக்கும் நிலைகள் கொண்டு நம்மை அறியாமலே உடல் வேதனையும் மற்ற நிலைகளும் ஏற்படுவது உண்டு.

உதாரணமாக நல்ல குணம் கொண்டு நாம் வீட்டிலிருக்கும் பொழுது எதிர் வீட்டிலே ஒருவருக்கொருவர் காரசாரமாக திட்டிச் சண்டை போடுகிறார்கள். அதை நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு நாம் பார்த்தாலும் அவர்கள் வெளிப்படுத்தும் சண்டையின் உணர்வுகள் நமக்குள் மோதியவுடன் ஈர்க்கும் சக்தியான காந்தம் இந்த எதிர் நிலையான வலுவை நமக்குள் ஈர்க்கின்றது.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணு செல்கள் அதை இழுத்து நம் ஆத்மாவாக மாற்றுகின்றது. பரமாத்மாவிலிருந்து இழுக்கின்றது.

நம் பூமி ஒரு பரம். விண்ணிலிருந்து வரும் சக்திகளைப் பூமி தனக்குள் எடுத்துக் கொண்டாலும் இதிலிருந்து வெளிப்படும் சக்தியை சூரியனுடைய காந்த சக்திகள் தனக்குள் கவர்ந்து பூமியின் ஆத்மாவாகப் பரமாத்மாவாக (காற்று மண்டலமாக) மாற்றுகின்றது.

சண்டை செய்வோரிடமிருந்து வெளிப்படும் சக்தியைச் சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து கொள்கின்றது. கண் கொண்டு பார்க்கும் போது அந்த அலைகளை நாம் சுவாசிக்க நேர்கின்றது.

நாம் பாசமாக இருக்கின்றோம். அங்கே ஒருவர் அடிபடுகிறார். அதைப் பார்த்ததும் சோர்வடைகின்றோம். அதே சமயத்தில் யார் அடிக்கின்றார்களோ அவரைப் பார்த்ததும் வெறுப்படைகின்றோம்.

வெறுப்பான உணர்வும் சோர்வான உணர்வும் இரண்டும் கலந்து நம் நல்ல குணங்களுடன் சுவாசிக்க நேர்கின்றது. சுவாசித்தவுடனே நமக்குள் போர் நடக்கின்றது. உயிருக்குள் பட்டவுடனே இங்கே எரிச்சலாகின்றது.

சுவாசிக்கும் உணர்வுகள் நம் உயிருக்குள் மோதும் போது நல்லது கெட்டது என்று இயக்கி அதிலிருந்து அந்த நேரம் விலகினாலும் உடலுக்குள் செல்லும் அந்தத் தீமையான உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்குள் நோய் வரக் காரணமாகின்றது.

1.நாம் சந்திக்கும் சந்தர்ப்பம்…
2.நாம் நுகர்ந்த உணர்வு எதுவோ… அது தான் நம்மை இயக்குகின்றது என்பதை
3.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்...!” என்பது போல் சந்தர்ப்பங்களை நல்லதை உருவாக்கும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் உருவாகாதபடி மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்க்கும் பழக்கம் வந்து விட்டால் அந்த ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கை வாழ முடியும். அவர்கள் அடைந்த எல்லையை நாமும் அடைய முடியும்.