ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2018

நண்பன் மேல் பகைமையானால் நல்லதை எண்ணுகின்றோமா..? அவனுக்குத் தீமை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…!


ஒரு நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினால் அவன் உணர்வை நுகர்ந்து அந்த நண்பனுக்கு உதவி செய்கின்றோம்.

ஆனால் நண்பன் மேல் சிறிது வெறுப்பாகி விட்டால்… “எனக்குத் தீங்கு செய்தான்.. அவனுக்கு எப்படி நன்மை செய்வது…? என்ற உணர்வை எண்ணி விட்டால் அவனுக்குத் தீமையைத் தான் செய்வோம்.

தீமை செய்யும் உணர்வை நுகரப்படும் போது நமக்குள் அந்த தீமையை விளைவிக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகின்றது.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு நண்பன் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.தீமையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்…!”
3.அதாவது தீமையில் விடுபடும் உணர்வின் அணுக்கள் தனக்குள் தீமையை நீக்கும் சக்தியாக உருவாகின்றது.

உதாரணமாக நீங்கள் கோபமாக இருக்கும் போது ஒரு கணக்கைப் பாருங்கள்….! சரியாகப் பார்க்க முடிகின்றதா..? ஒரு துணியின் தரத்தைப் பாருங்கள். ஒரு பொருளின் தரத்தைப் பாருங்கள். கோபமாக இருக்கும் போது தரத்தை உங்களால் நிர்ணயிக்க முடியாது.

கோபமாக இருக்கும் போது நண்பர் என்றாலும் கூட அவரைப் பார்க்கப் போகும் போது நண்பர் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் உடனே அவரிடம் கோபமாக… நீ இந்த நேரத்தில் ஏன் ஐயா வம்பு செய்து கொண்டு இருக்கிறாய்…! என்று பேச ஆரம்பித்து விடுவீர்கள்.

1.நண்பர் ஒரு நல்லதைச் சொல்வார்….
2.அட நீ போய்யா.. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு…!
3.இந்த நேரத்தில் வந்து நீ ஏன் வம்பு செய்கிறாய்…? என்று தான் சொல்வோம்.
4.அப்போது அந்த உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் அதுவாகின்றோம்.
5.இதைத் தான் கீதாச்சாரத்தில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்று தெளிவாகக் கூறப்பட்டது.

ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்குகின்றது.. அதை உடலாக்குகின்றது. மீண்டும் நினைவாக்கும் போது அதையே செயலாக்குகின்றது.

நான்கு நாளைக்கு ஒருவரை தமாஷாக நீங்கள் கேலி செய்து பாருங்கள் அந்த உணர்வுகள் விளைந்து கொண்டே வரும். அவர் என்ன செய்வார்..?

சும்மா இவர் தமாஷ் செய்து கொண்டே வருவார் என்று நம் மீது வெறுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ப்பார். அது ஒரு நாளைக்கு என்ன செய்யும்..?

1.நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்…
2.பொறுத்துக் கொண்டே இருக்கிறேன்…
3.இரு உன்னை என்ன செய்கிறேன்…? என்று அது கடும் விளைவுகளை உண்டாக்கும்.
4.கேலி செய்ததில் வளர்ச்சி அதனுடைய முதுமைக்குக் கொண்டு வரும்.

 இதைப்போல தான் ஒருவர் சண்டை போடுவதை நாம் சாதாரணமாக வேடிக்கைதான் பார்க்கின்றோம். நமக்குள் பதிவாகின்றது. நாளடைவில் இதை அடுத்தவரிடத்தில் சொல்வோம்.

“அவன் மோசமான ஆள்…!” என்று அவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்போம். அந்த உணர்வு நமக்குள் அணுவாகிப் போனால் நம்மையும் மோசமான ஆளாக மாற்றக்கூடிய அளவிற்கு இந்த உணர்வுகள் வளர்ந்து விடும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

எதைப் பார்த்து மோசம் மோசம் என்று எண்ணுகின்றோமோ அவர்கள் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே பட்டுக் கண் கரு விழி இங்கே பதிவாக்கி அந்த உணர்வை நுகரும் போது தான் அதை (மோசம் என்பதை) அறிகின்றோம்.

ஆகவே அந்த நேரத்தில்
1.மகரிஷியின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்.
3.நல்லதை நுகரும் சக்தி அவருக்குள் வளர வேண்டும் என்று எண்ணி
4.அதனுடன் நாம் இந்த நிலையை இணைத்து விட்டால் அது அடங்குகின்றது
5.நமக்குள் அந்தத் தீமையை வளர்க்கும் தன்மை குறைக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்குள் மகரிஷிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளைப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கப்படும் போது அறியாது வரும் இருளை நீக்கி விட்டு மெய்ப் பொருளைக் காணும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.

இயற்கையின் நிலைகளைத் தெளிவாக்குவதற்காக ஞானிகள் எத்தனையோ காவியங்களைக் கொடுத்துள்ளார்கள். காவியத்திற்குள் இருக்கும் அந்தக் கருத்தினை நாம் நுகரப்படும் போது அந்தக் கருத்தே நமக்குள் உணர்வின் சக்தியாக விளையத் தொடங்குகின்றது.

அதையெல்லாம் நாம் உணர்வதற்காகத்தான் ஞானிகள் ஆலயத்தை உருவாக்கினார்கள். மனிதனின் வாழ்க்கையில் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…!