6/14/2018

குருவின் உயிராத்மா விண் சென்ற உணர்வும் “அப்பொழுது அவர் உணர்த்திய உண்மைகளும்....!”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி நான் (ஞானகுரு) இதை உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

விண்ணின் ஆற்றலை அவர் உடலிலே விளைய வைத்துக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அவர் உயிராத்மா எந்தெந்த நிலைகள் செயல்படுத்தியது...?

அவருடைய உயிராத்மா வெளியில் செல்லும் பொழுது மற்ற எந்த ஆத்மாக்களும் அதைக் கவர்ந்து இழுக்காதபடி இவருடைய உயிராத்மா எந்தெந்த வழிகளில் செயல்பட்டது...?
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற
2.அவர் உயிராத்மாவின் இயக்கச் சக்தியை
3.எமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டினார்.

அவர் ஆரம்ப நிலைகள் கொண்டு அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுதே இத்தகைய ஆற்றலைக் காட்டி அந்தச் சக்தியை எனக்குள் பெறச் செய்தார்.

1.உடலை விட்டுப் பிரிந்த குருநாதரின் உயிராத்மா வெளியில் எவ்வாறு செல்கிறது…? என்ற நிலையும்
2.பிரிந்து சென்ற பின் அந்த உயிராத்மாவின் செயலாக்கங்களையும்
3.சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது எப்படி ஈர்க்கப்படுகிறது…? என்பதையும்
4.தெளிவாக எனக்கு உணர்த்திக் காட்டினார்.

அதே போல் ஒரு சாதாரண மனிதனின் உயிராத்மா வெளியில் செல்லும் பொழுது அந்த உயிராத்மாவின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது...? என்று இதையும் குருநாதர் காட்டுகின்றார்.

அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் எப்படி இணைக்க வேண்டும்…? என்பதையும் காட்டினார்.

உடலை விட்டுப் பிரியும் உயிராத்மாக்களுடன் தொடர்பு கொண்டவர்களை – அதாவது....
1.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ உறவினர்களையோ நண்பர்களையோ வைத்து
2.அவர்களின் ஆத்ம சக்தியின் வலுவைக் கூட்டச் செய்து
3.மகரிஷிகளின் எண்ணத்தை அவர்களுக்குள் ஓங்கச் செய்து
4.அந்த (இறந்தவர்களின்) உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்யலாம்.

உடலை விட்டுப் பிரியும் உயிராத்மாக்கள் அவர்கள் தவமிருக்கவில்லை என்றாலும் தியானமே எடுக்கவில்லை என்றாலும் கூட அவர்களையும் இவ்வாறு விண் செலுத்த முடியும் என்று குருநாதர் காட்டுகின்றார்.

உடலுடன் உள்ளவர்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை வலுக் கொண்டு எடுத்துத் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்ட பின்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் உறவினர்கள் நண்பர்களின் அனைத்து உயிராத்மாக்களும்
2.சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் இருப்பதால் அதனின் துணை கொண்டு உங்கள் எண்ணத்தால் உந்தி விண்ணிலே செலுத்தப்படும் பொழுது “அந்த எடையற்ற உயிராத்மாக்கள்...” புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றார்கள்.

அங்கே இணைக்கப்படும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை எடுத்து அங்கே வளரத் தொடங்குகின்றார்கள். சப்தரிஷிகளாக ஆகின்றார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வை எடுத்துத் தான் உங்களுக்கு இதைப் போதிக்கின்றோம். உங்கள் முன்னோர்கள் விண் சென்றால் அதன் வழி நீங்களும் அங்கே செல்வது மிகவும் எளிதாகும்.