ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 23, 2018

நாரதன் கனியை ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகள் உண்டு...!

உதாரணமாக ஒரு மாமரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மரம் பூப்பூத்துக் காய்க்கும் நிலையில்
1.பிஞ்சாக இருக்கும் போது துவர்க்கின்றது.
2.காயாக இருக்கும்போது புளிக்கின்றது.
3.கனியாகும் போது இனிக்கின்றது.
4.கனியான பின் அந்த உணர்வின் சத்து வித்தாகின்றது.

இதைப் போலதான் தாய் தந்தையருடைய உணர்வின் தன்மை கொண்டு தான் நாம் குழந்தைகளாக உருவாகியுள்ளோம். தாய் தந்தையர் உடலில் முதுமையாகும் போது அவர்களைக் கனியாக்க வேண்டும்.

தாய் தந்தையர் கனியாக ஆக்கப்பட வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவர்களின் உயிராத்மாக்களை
1.அந்த மகரிஷிகள் இருக்கும் பக்கம் சப்தரிஷி மண்டல எல்லையிலே
2.உந்தித் தள்ளச் செய்வது குழந்தையினுடைய நிலை.

மாமரத்தில் எப்படிக் கனியான பின் வித்தாகின்றதோ அந்த வித்தின் தன்மைதான் தன் உணர்வின் சத்தை எடுத்து அந்த மரத்தை வளர்க்கச் செய்கின்றது.

கனியின் தன்மை பெறவில்லை என்றால் அதிலிருந்து வித்துகள் வருவதில்லை. அதைப் போல ஆகாதபடி நாம் நம் தாய் தந்தையரைக் கனியின் தன்மை பெறச் செய்ய வேண்டும்.

1.அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின்
2.அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டல அலையுடன் இணைக்கச் செய்யும் போதுதான்
3.அது ஒளியின் சுடராக அது கனியாகின்றது.
4.ஆக மனிதனானபின் கடைசியில் அந்தக் கனியாகின்றது.

ஏனென்றால் நமது உயிர் விண்ணிலே தோன்றி ஒளியாகப் பூமிக்குள் விஜயம் செய்கின்றது. பல கோடி உணர்வின் சக்திகளை உயிர் எடுத்துப் பல உடல்களாகப் பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வருகின்றது.

மனிதனாக வரும்போது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி ஒளிச் சரீரம் பெறுவது தான் “கனி...!” என்பது.

ஆகையினால்தான் நாரதன் கனியைக் கொண்டு வந்து ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகளையும் சொல்லிச் சுருக்கமான நிலைகளில் மனிதர்கள் நாம் உணர்ந்தறிந்து
1.இந்த வாழ்க்கையில் மெய் உணர்வைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி
2.எல்லோரையும் மெய் ஞானத்தைப் பெறச் செய்து
3.மனித உயிராத்மாக்களுக்கு உய்விக்கும் வழியைக் காட்டினார்கள் மெய் ஞானிகள்.

ரிஷியின் மகன் நாரதன்... என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும்... காட்டியிருப்பார்கள்.

அகஸ்தியன் துருவனாக துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். அவனைப் பின்பற்றிய மனிதர்கள் சப்தரிஷி மண்டலமாக அவனைச் சுழன்று கொண்டுள்ளார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஒளியான அணுக்களே நாரதன். ஆகவே ரிஷியின் மகன் நாரதன்...!

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிவரும் பேரருள் பேரொளி உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு துருவப் பகுதியின் வழியாக நம் பூமிக்குள் வருவதை நாரதன் என்று காட்டியுள்ளார்கள்.

நாராயணன் என்றால் சூரியன். ஆகவே நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்...!