உதாரணமாக ஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்
என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது...
1.“கெட்டுப் போக வேண்டும்” என்ற எண்ணத்தின் உணர்வை நான் சுவாசித்து
2.அதற்கப்புறம் தான் என்னிடமிருந்து அது சொல்லாக வெளிவருகின்றது.
அதாவது கெட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தை நான் சுவாசிக்கும்
போது முதலில் என் உயிரிலே படுகின்றது. எதைக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணுகின்றனோ
1.இந்த உணர்வுகள் என் உடல் முழுவதற்கும் அந்தச் சக்தி போய்
2.என் உடலிலே விளைந்து திருப்பிச் சொல்லாக வருகின்றது.
என்னுடைய சொல்லை யார் ஒருவர் கேட்கின்றனரோ அந்த உணர்வுகள் அங்கே
பட்டு அவர்களிடமும் அதே உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
எதை அடிப்படையாக வைத்துக் கெட்டுப் போக வேண்டும் என்று நான் சொல்லுகின்றனோ
அதே உணர்வு கேட்போருடைய உணர்வுகள் ஏற்றுக்
கொண்டால் ஏற்றுக் கொண்ட உணர்வின் இயக்கமாக இயக்குகின்றது.
அப்போது...
1.ஏற்றுக் கொண்டபின் என் மேல் கோபம் வரும்.
2.அடுத்தவர்கள் ஏதாவது நல்லது சொன்னால் அதைச் செய்யவிடாது.
3.அந்த நேரத்தில் தன் பையனே ஏதாவது குறுக்கே வந்தாலும் அவன் மீது
கோபமாகப் பேசச் சொல்லும்.
அதே போல் வியாபாரத்தில் கடையிலே இருந்தீர்கள் என்றால் அங்கே
வருபவர் சரக்கு என்ன வேண்டும்...! என்று இரண்டு தரம் கேட்டு... மூன்றாவது தரம்
கேட்டார்... என்றால்
1.நன்றாகச் சரக்கு வாங்க வந்தாய்...!
2.”போய்யா...!” என்று தான் சொல்ல வேண்டி வரும்.
ஆகவே கெட்டுப் போக வேண்டும் என்று நான் எண்ணக்கூடிய இந்த எண்ணம்
என் உடலில் படர்ந்து என் உடலில் முதலில் விளைகின்றது. அப்புறம் கேட்கின்றவர்கள் உடல்களிலும்
அது போய் விளைகின்றது.
அப்போது என்னை எண்ணிக் கோபம் வரும் போதெல்லாம் அது அவர்கள் காரியத்தைத்
தடைபடுத்திவிடுகின்றது. ஆக “நான் சொன்ன சொல்லைத் தான் அங்கு நிறைவேற்றுகின்றார்கள்....!”
ஏனென்றால் நான் கோபமாகக் “கெட்டுப் போக வேண்டும்..!” என்று சொன்ன
சொல்லை மட்டும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களை
இயக்கி அந்த நிலையை ஏற்படுத்துகின்றது.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதே போன்று நீங்கள் ஈவு இரக்கத்துடன் இருக்கின்றீர்கள். ஒருவர்
கஷ்டப்படுகிறார் என்ற நிலையில் அவர்களைப் பார்க்கின்றீர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கின்றீர்கள்.
அவர்கள் உங்களோடு சண்டை போடவில்லை. கெட்டுப் போக வேண்டும் என்று
சொல்லவில்லை. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுகின்றார்கள். அந்தக் கஷ்டமான சொல்லைச்
சொல்லும் போது காது கொடுத்துக் கேட்டவுடனே என்ன செய்கிறது...?
அவர்களுக்கு எப்படிக் கஷ்டமானதோ அந்த உணர்வு எல்லாம் கேட்கின்றவர்கள்
உடலிலும் கஷ்டத்தை உண்டாக்குகின்றது.
அந்த உணர்வான சத்து உடலில் போய்ச் சேர்ந்து விடுகின்றது. ஐயோ பாவமே...!
என்று இரக்கப்பட்டுக் கேட்கின்றோம். அந்த உணர்வு அதுவாகிவிடுகிறோம். நாமும் கஷ்டமாகித்தான்
அவர்களுக்கு உதவி செய்கிறோம்.
ஒருவர் கெட்டுப் போக வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அந்த
கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வு நான் அதுவாகிறேன். அதனுடைய நிலை என் உடலில் விளைகின்றது.
ஆனால் மனிதனாக இருக்கக்கூடிய நாம் இன்றைய சாதாரண வாழ்க்கையில் என்ன
செய்கிறோம்...?
1.ஒரு உணவுப் பொருள் கெட்டுப் போய்விட்டது என்றால்
2.அந்தப் பொருளைத் “தூக்கி எறிந்து விடுகின்றோம்....!
3.சாப்பிடுவது இல்லை....!
நெல்லில் உள்ள உமியை நீக்கி விடுகின்றோம். அதை வேக வைத்துச் சாப்பிடுகின்றோம்.
துணியில் அழுக்குப் பட்டு விட்டது என்றால் நீக்கிவிடுகின்றோம். உடலில் அழுக்குப் பட்டால்
குளித்து விடுகின்றோம்.
புற நிலைகளுக்கு இவ்வளவு செய்யும் நாம் அகத்திற்குள் நம் உடலுக்குள்
வரும் தீமைகளையும் துன்ங்களையும் நீக்குகின்றோமா...? சற்று சிந்தித்துப் பாருங்கள்...!
இரக்கப்பட்டுக் கேட்கும் பொழுது பிறர் சொல்லக்கூடிய துன்பமான உணர்வுகள்
நம் உயிரில் பட்டு உடலில் சேர்ந்து அந்த நிலைக்கே நாம் ஆளாகி நம் உடலில் விளைய ஆரம்பித்துவிடும்.
உடலிலே விளைந்து விட்டால் அந்த உணர்வே தான் திரும்பத் திரும்ப வரும்.
மற்றவர்கள் சொன்ன கஷ்டத்தைத்தான் நாமும் திரும்பவும் சொல்ல வேண்டி வரும்.
உதாரணமாகப் பாலை வைத்துக் காபியைப் போடுகிறோம். சீனி போடுகிறோம்.
நல்ல ருசியாகச் சாப்பிடுகிறோம். ஆனால் ஒரு துளி மிளகாய்த் தூள் அதற்குள் விழுந்துவிட்டது
என்றால் என்ன செய்கின்றது...?
குடிப்பவர்கள் எல்லோரும் காபி “ஒரே காரமாக...!” இருக்கிறது
என்பார்கள். அப்பொழுது அந்தக் காபியைப் பற்றி ருசித்துச் சொல்ல முடிகிறதோ...? சொல்ல
விடுவதில்லை.
இதே மாதிரித் தான் நாம் இரக்கப்பட்டு உதவிகள் செய்தாலும்
அவர்கள் கஷ்டத்தை நாம் நுகர்ந்தோமானால் நாம் அதுவாகி விடுகிறோம். அந்தக் கஷ்டமான உணர்வு
நமக்குள் வளராமல் துடைக்க வேண்டும் அல்லவா...! அதற்கு என்ன உபாயம்...?
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ
மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்தப் பழக வேண்டும்.
பின் எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
பெறவேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் பல முறை இப்படிச் செலுத்த வேண்டும்.
1.இவ்வாறு அடிக்கடி எடுத்துத் துடைக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டால்
2.நாம் அதுவாக... “மகரிஷியாக ஆகின்றோம்....!”
3.கஷ்டங்களோ துன்பங்களோ நம்மை இயக்குவதில்லை.
செய்து பாருங்கள்.