ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 25, 2018

இராமன் ஆஞ்சநேயர் இராமபாணம் நாராயணன் ஆதிசேஷன் லட்சுமணன் சிவசக்தி – விளக்கம்


1. இராமன் ஆஞ்சநேயர் இராமபாணம்:-
புழுவிலிருந்து மனிதனாகும் வரையில் நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலாக விளைந்து அந்த விளைந்த உணர்வின் சத்தைத் தன் உயிராத்மாவோடு சேர்க்கப்படும்போது சீதா ராமா.

இராமனுக்கு என்ன சேர்கிறது...? இராமனுக்கு முன்னாடி  ஆஞ்சநேயர். ஒரு குணத்தின் நிலையில் நாம் எந்தக் குணத்தை எடுத்துக் கொள்கிறோமோ அதிலே அந்தக் குரங்குப் பிடியாகத்தான் இருப்போம்.

பரிணாம வளர்ச்சியில் குரங்கு என்ன செய்கிறது? தன் பிடியின் தன்மையிலே தான் நிற்கும். நம் உடலுக்குள் கோடிக்கணக்கான குணங்களை எடுத்தாலும்
1.அந்தந்தக் குணத்தின் தன்மை கொண்டு தான் உணர்வின் எண்ண ஒளிகள் பாயும். 
2.”அதனின் பிடியிலே தான் நாம் இருப்போம்...!” என்ற
3.இந்த உண்மையை உணர்த்துவதற்குத்தான்
4.இராமனுக்கு முன்னாடி ஆஞ்சநேயரும் இராமன் கையிலே அம்பையும் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

நாம் எடுத்துக் கொண்ட ஒரு உணர்வின் தன்மையை (மீண்டும்) எண்ணிப் பாய்ச்சும் போது இந்த உணர்வுகள் தாக்கி அதே உணர்வின் சக்தியை உணரச் செய்கின்றது. அதைத் தான் இராமபாணம் என்பது.

சீதாராமா... பரசுராமா... பலராமா... ஜானகிராமா... என்று சொல்வதெல்லாம் ஒவ்வொரு குணத்தின் தன்மையை நாம் சிறப்புற எடுத்துக் கொண்ட உணர்வின் வித்து தனக்குள் விளைந்து உயிராத்மாவுடன் சேர்க்கப்படுவதைத்தான் “இராமன்” என்று அதை அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

2.நாராயணன் ஆதிசேஷன் – லட்சுமணன்:-
ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டியிருப்பார்கள் ஞானிகள். அதாவது விஷத்தின் இயக்கமே சூரியனை இயக்கச் செய்து ஆற்றல் மிக்கதாக அதை உருவாக்கியது.

நாராயணன்... நான் மனிதனாக இராமனாகப் பிறக்க போகின்றேன். நீ என்னுடன் “லட்சுமணனாக வா...!” என்று ஆதிசேஷனை அழைத்துச் செல்வதாகக் காவியங்களில் உண்டு.

சூரியன் தனக்குள் மோதும் விஷத்தைப் பிரித்து வெப்பம் காந்தம் என்று உருவாக்கினாலும் பிரிந்து செல்லும் கடைசி விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

இந்தக் காற்றுக்குள் இருக்கக்கூடிய அனைத்துச் சக்திகளையும் சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

NEGATIVE POSITIVE என்கிற நிலைகளில் இன்று கரண்ட் எப்படி உற்பத்தி ஆகின்றதோ இதைப்போல நான் ஒரு குணத்தை எடுத்துக் கொண்டால்
1.என் குணத்தைக் காத்துக் கொள்வதற்கும்
2.என்னை இயக்கச் செய்வதற்கும்
3.இந்தக் காற்றிலிருந்து வந்த எந்த உணர்வின் குணமாக இருந்தாலும்
4.எந்தக் குணத்தை எடுத்துக் கொண்டாலும்
5.அதே குணத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றால் இந்த விஷம் (லட்சுமணன்) தேவை.

ஒவ்வொரு காந்தத்திற்குள்ளும் விஷத்தின் ஆற்றல் உண்டு. ஒரு உணர்வின் (குணத்தின்) சத்தை நாம் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே என்ன நடக்கின்றது...?

ஒரு தேள் கொட்டினால் எப்படி “ஜிர்...” என்று உடல் முழுவதற்கும் துடிப்பின் நிலைகள் ஏறுகின்றதோ அது போல
1.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் இந்த விஷத்தின் ஆற்றலே ஊடுருவி
2.எந்த குணத்தை எடுத்துக் கொள்கின்றோமோ
3.அந்த குணத்தின் இயல்புக்குள் அதை இயக்கச் செய்து
4.அந்தக் குணத்தின் இயக்கமாக நம்மை இயக்கச் செய்கிறது.

3.சிவசக்தி:-
அதனால் தான் இராமனை ஒருத்திக்கு ஒருவன் என்று காட்டுகின்றார்கள். சீதா இராமனே தவிர இராமா சீதா அல்ல. இலட்சுமி நாராயணனே தவிர நாராயணா இலட்சுமி அல்ல. அதாவது சிவ சக்தி...!

பல சக்திகள் கொண்ட உயிரும் ஒரு சக்தி. அதே போலத் தாவர இனச் சத்தும் ஒரு சக்தி தான். இந்த இரண்டு சக்திகளும் சேரும் போது உயிர் ஈசனாகிறது - ஆண்பால். அதே சமயம் தாவர இன சத்து  பெண்பால் ஆகின்றது.

ஒரு பெண்தான் கருவுற்றுத் தனக்கும் அந்தக் கருவை வளர்க்கும். புறத்திலிருந்து எடுக்கும் இச்சக்தியின் தன்மையைப் பெண்பாலாகக் காட்டி அது திடமான உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.உடலுக்குள் இணைந்து மீண்டும்
2.சிவசக்தியாக இயங்குகிறது என்று காட்டுகின்றார்கள்.

அதாவது “உயிரினங்களின் இயல்புகளுக்கு வரும்போது...” வளர்க்கும் சக்தியின் தன்மையைக் காரணப் பெயர் வைத்து “சிவசக்தி” என்று காட்டினார்கள் ஞானிகள்.