ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2018

“உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுகின்றேன்... பார்...!” என்று சொல்லும் பழி தீர்க்கும் உணர்வுகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்


கோடிப் பணம் நம்மிடம் இருந்தாலும் சாதாரண நிலையில் நாம் பழகிய ஒரு மனிதன் சந்தர்ப்பத்தால் நம்மிடம் கடுமையாகப் பேசி விட்டால் மிகுந்த வேதனைப்படுகின்றோம்.

பின் அவரை எண்ணி... “என்னை இப்படிப் பேசிவிட்டாய்…! இரு.. நான் பார்க்கின்றேன்...! என்று அவர் மீது வன்மம் வைக்கின்றோம். ஆனால் அவரோ இலேசாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்.

நம்மிடம் கோடிப் பணம் இருந்தாலும் இழிவாகப் பேசுபவரைப் பார்த்தவுடனே “உன்னை அடித்து நொறுக்குகின்றேன் பார்…! என்று நாம் சொல்வோம்.

ஆனால் அவரோ நீ நொறுக்குவாயா…? என்பார்.

பார்…! எவ்வளவு திமிரா...? என்று நாம் சொல்வோம். இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகச் சேர்ந்து வளர்க்கப்பட்டு அவரையே எண்ணி ஜெபிக்கும் நிலைகள் வந்துவிடும்.

1.அப்படி ஜெபிக்கும் நிலைகள் வந்து விட்டால்
2.கோடிப்பணம் நம்மிடம் இருந்தாலும் அவர் பேசியதையே திரும்பத் திரும்ப எண்ணி நமக்குள் விளைய வைத்து
3.அவரைப் பழி தீர்க்கும் உணர்வுகளாக உடலுக்குள் விளைந்த பின்
4.உடலை விட்டுச் சென்றால்
5.யார் மீது பழி தீர்க்கும் எண்ணத்தை வளர்த்தோமோ அந்த உடலுக்குள் சென்று
6.அவரையும் வியாதியாக்கி அவர் உடலில் எடுத்துக் கொண்ட விஷமும் உயிராத்மாவில் சேர்த்து
7.நஞ்சை அதிகமாக வளர்த்துக் கொண்ட நஞ்சு கொண்ட மிருக உடலுக்குள் அழைத்துச் சென்று
8.துரிதகதியில் நம்மை மிருகமாக மாற்றிவிடும்.

அதைத்தான் கீதையிலே கண்ணன் சொல்கின்றான்...! நீ எதை நினைக்கின்றாயோ... அதுவாக நீ ஆகின்றாய்....!
1.அவரைத் தீர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்
2.அது நம் உடலிலிருக்கும் நல்ல எண்ணத்தைத் தீர்த்துக் கட்டி
3.அந்த உணர்வின் தன்மைகளை வளர்த்து மனித உடலையை மாற்றி அமைத்துவிடுகின்றது.

விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா..! என்று காட்டுகின்றார்கள். இன்று நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அந்த உணர்வின் சக்தியே உன் உடலை அழைத்துச் செல்கின்றது.

1.முந்தைய செயல் இன்றைய சரீரம்...!
2.இன்றைய செயல் நாளைய சரீரம்..! என்ற இந்த நிலை
3.விநாயகர் தத்துவத்தில் தெளிவுறக் காட்டப்பட்டிருக்கின்றது.

மிருகமாக வாழும் பொழுது சேர்த்துக் கொண்ட நல்ல வினைகளுக்கொப்ப மனிதனாக வந்திருக்கின்றோம் என்பதைக் காட்டுவதற்குத்தான் யானைத் தலையும் மனித உடலையும் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

மனித உடல் பெற்ற நிலையில் நம் வாழ்க்கையில் மெய் ஞானிகளின் உணர்வை
1.”இன்றைய செயலாக...’ அந்த நல்ல வினைகளைச் சேர்த்துக் கொண்டால்
2.நாளைய சரீரமாக அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
3.எந்த ஞானி விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தானோ அந்த அகஸ்திய மாமகரிஷியுடன் ஐக்கியமாகலாம்.