ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2018

நாராயணன் திரேதாயுகத்தில் சீதா இராமனாகத் தோன்றுகின்றான்...! - எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்


மனிதனின் வாழ்க்கையில் “அவன் இதைச் செய்தான்... இவன் இதைச் செய்தான்...! என்ற வேதனையான உணர்வைக் கூட்டினால் உடலுக்குள் விஷத்தின் தன்மை அதிகமாகி நோய்வாய்ப்படும் நிலை வருகின்றது.

தன்னைப் பாதுகாக்கும் நிலை இழந்த பின்பு பழி தீர்க்கும் உணர்வு வந்தால் நமக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல உணர்வுகளையும் அது தீர்த்துக் கட்டிவிடும்.

ஆகவே நமக்குள் அறியாது நடக்கும் இதைப் போன்ற நிகழ்வுகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். ஏனென்றால்
1.இன்றைய மக்களினுடைய உணர்வுகள்
2.”தான் எதைச் செய்கின்றோம்...?” என்று தெரிவதில்லை.
3.தெரிந்து தவறு எவரும் செய்வதில்லை.

உலகில் அன்றாடம் பலதரப்பட்ட உணர்வலைகளை நுகரப்படும்போது அந்த உணர்வுகள் பதிவாகி அதை வளர்க்கப்படும் போது மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களைப் பாதுகாக்கும் நிலையே அற்று விடுகின்றது.

நல்ல குணங்கள் கொண்டு வாழ முடியாது தடைப்படுத்துகின்றது. இதைத்தான் இராமாயணம் காட்டுகின்றது.

இராவணன் சகலகலா வல்லமை பெற்றாலும் இசையில் வல்லமை பெற்றாலும் அவனுடைய ஆசை “அழகியை நுகர்ந்து” அதனை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றான்.

அனைத்து இசைகளைக் கண்டு அதில் வல்லவனாக இருந்தாலும் சீதாவை அடைய வேண்டும் என்ற நிலையில் சிறைப் பிடிக்கின்றான்.

இந்த இச்சையின் உணர்வுகள் வளரப்படும்போது அடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளால் அந்த இராவணன் கற்றுணர்ந்த உணர்வுகள் எல்லாம் எப்படி மடிகின்றது என்று அங்கே காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையும் உயிரைத் தசரதச் சக்கரவர்த்தி என்று காட்டித் தனது மகன் என்ற நிலைகளில்
1.தன்னுடன் இணைந்த எத்தனை விதமான குணங்கள் இருக்கின்றதோ
2.ஒவ்வொரு குணமும் தன் தன் இனத்தின் நிலையே வளர்க்க விரும்பும் என்று காட்டுகின்றார்கள்.

இராமனின் தாயோ சாந்தமானவள். நல்ல குணத்தால் உருவான இராமன் சாம்ராஜ்யத்தை ஆளும் தகுதி படைத்தவன் என்று தசரதன் எண்ணினாலும் தன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட மற்ற குணங்களின் உணர்வுகள் என்ன செய்கிறது.

அது (கைகேயி) தன் மகனே சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று விரும்புகின்றது. நம் வாழ்க்கையில் என்ன செய்கின்றோம்...?

நல்ல குணங்களை வளர்த்துக் கொள்கின்றோம். இருந்தாலும் கோபம் வந்துவிட்டது என்றால்... “இரண்டில் ஒன்று பார்ப்பேன்...! பார்க்கலாம்...! என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம். இதைப் போன்று தான்
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்...
2.ஒவ்வொரு குணத்தையும் நாம் நுகரப்படும் போது
3.அது உயிருடன் ஒன்றிய அந்தச் சக்தியாக இயங்குகின்றது... இயக்குகின்றது.

தினசரி ஒன்றை நம்முடன் இணைத்துக் கொண்டுதான் உள்ளோம். அந்த உணர்வின் சக்தி நமக்குள் வரும்போது அது அந்த எண்ணங்களின் அணுக்களாக உடலுக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

ஆகையினால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியாது அல்லது பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விடுகின்றோம்.

இதைத்தான் அங்கே இராமாயணத்தில் இராமனுக்குப் பட்டம் சூட்டினால் அவன் ஆட்சி புரியும் போது எல்லாம் ஒழுக்கமாக இருக்கும் என்று தசரதன் ஆசைப்பட்டாலும் அந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.

ஏனென்றால் பரதனின் தாயோ தன் மகனுக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று கேட்கின்றார்.

பரதன் இராமனுடன் பழகியதால் அவன் ஆணைப்படி நடக்க வேண்டும் என்று விரும்புபவன். அந்த நல்ல உணர்வுடன் அவன் இணைந்தவன்.

அதனால் தாய் சூழ்ச்சி செய்து அவனை இங்கே இருக்கவிடாது செய்து தன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றது. இராமன் இங்கே இருக்கக்கூடாது என்பதற்காக அவனைக் காட்டிற்கு அனுப்பிவிடுகின்றது.

இராமனுடன் இணைய வேண்டாம். சாம்ராஜ்யம் உனக்குத்தான் தான் என்று பரதனுக்குக் கொடுக்கின்றது. ஏனென்றால்
1.எந்த உணர்வின் தன்மைகள் நம் உடலுக்குள் உருபெற்றதோ
2.அந்த வித்திற்கு அந்த இனமான உணர்வின் சத்தே உணவாகச் செல்லும்.

ஆக இந்த மனித உடலுக்குள் ஒவ்வொரு நாளும் எத்தனை கலக்கங்கள் ஏற்படுகின்றது...? எந்தெந்த நிலையெல்லாம் இணங்கிச் (அடங்கி) செயல்படுகின்றது...? நாம் எடுத்து கொண்ட உணர்வின் எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது...? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

நுகரும் உணர்வுகள் உயிரில் பட்டுச் “சப்தங்களாகி...” (இசை) உணர்ச்சிகளாக உயிர் இயக்கினாலும் சுவாசித்த உணர்வுகள் உறைந்து உடலாகும் பொழுது சிவமாகின்றது.

இப்படிப் புழுவிலிருந்து மனிதனாக நம் வந்த பல கோடிச் சரீரங்களில் பல விதமான ஓசைகளை எழுப்பி இருப்போம். சுவாசித்திருப்போம்.

அதனால் தான் இராவணனை இசையில் மிகவும் வல்லவன் என்று காட்டுகின்றார்கள்.  சகலகலா வல்லவன் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றவன் என்றாலும் அவனுடைய ஆசை எங்கே வருகின்றது...?

இவனுடைய சகோதரி சூர்ப்பணகை இராமனின் அழகைக் கண்டு ரசிக்கின்றாள். அவன் இசையவில்லை என்பதால் சீதாதான் அதற்குத் தடையாக இருக்கின்றது என்ற நிலை கொண்டு தன் சகோதனிடம் சீதா தன் அழகால் ரொம்பவும் அவமதிக்கின்றாள் என்று குறையான உணர்வைத் தூண்டுகின்றாள்.

அந்த உணர்ச்சியைத் தூண்டிய பின்...  “அப்படியா...! அவளை நான் அடைந்தே தீருவேன்..!” என்று இராவணன் சொல்கிறான். அந்த விஷத்தின் தன்மை இங்கே போதித்த பின் தன் சிந்தனை இழக்கின்றான்.

சீதாவைப் பிரித்து விட்டால் இராமனை அடையலாம். ஆனால் அதே சமயத்தில் இவனுடைய ஆசைக்கு சீதாவும் இணங்கி விட்டால் “நம் காரியம் ஜெயிக்கும்...!” என்று இதையெல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.நம்முடைய எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து
2.எப்படி எல்லாம் உணர்வுகள் மாறுபடுகின்றது என்பதைத்
3.தெளிவாகக் காட்டுகின்றது நம் இராமயாணக் காவியம்.

இதைத் தெரிந்து கொண்டால் நம்மையறியாது இயக்கும்  உண்மையின் உணர்வுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்துக் கொள்கின்றான். ஆனால் இவனுடைய சகோதரன் கும்பகர்ணன் தூங்கிக் கொண்டேயிருக்கின்றான். அதாவது
1.நல்லவைகள் இல்லை என்கிறபோது - தீமை என்ற நிலைகள் வந்தவுடன்
2.நல்ல குணங்கள் எல்லாம் உறங்குகின்றது. (தெளிவாகவே காட்டுகின்றார்கள்)
3.பகைமையான குணங்கள் வரும் போது நம் நல்ல குணங்கள் என்ன செய்கின்றது...?
4.நல்லதைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் நல்லவைகள் உருவாகும் உணர்வுகளை உருவாக்காதபடி அது எதிரியாகப் பெறுகின்றது. இராவணனுடைய மகனே அவனுக்கு எதிரியாகின்றான்.

இவன் நுகரும் உணர்வுகள் எதுவோ இவனுள் இணைந்து அது செயல்படும்போது இவனுடன் ஒத்துவராதபடி
1.எந்தப் பகைமை உணர்வுகளை இவன் எடுத்தானோ
2.அது இவனுக்குள்ளேயே பகைமையாகி இவனையே எதிர்க்க ஆரம்பிக்கின்றது.

அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எதை உற்று நோக்கி எந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்குகின்றானோ அந்த ஆசையின் உணர்வுகள் தான் இங்கே வளர்கின்றது.

ஆனாலும் இராவணன் எண்ணிய உணர்வுகள் கடைசியில் அவன் ஆசை நிறைவேறவில்லை. இவன் எதன் மேல் இச்சைப்பட்டானோ அந்த உணர்வின் தன்மையை வளர்த்த பின் நல்லதைப் பெறும் நிலையே தடைப்பட்டுவிடுகின்றது என்பதனைக் காவியத் தொகுப்பாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.

உணர்வின் இயக்கங்கள் உடலாவதும்... உடலுக்குள் ஆனபின் உணர்வின் எண்ணங்கள் என்னவாகின்றது...? தீமையான நிலைகள் வந்தால் அதை அடக்குவதற்கு என்ன வழி..? என்ன உபாயம்...? என்ற நிலையை நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

"நாராயணன் திரேதாயுகத்தில் சீதா ராமனாகத் தோன்றுகின்றான்" என்று காட்டுகின்றார்கள். அதனின் விளக்கம் என்ன...?

நாராயணன் என்றால் சூரியன். திரேதா என்றால் சரீரம். சீதா என்றால் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து கொண்ட சத்து. இராமன் என்றால் எண்ணங்கள்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ (சீதா)...
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் (சூரியன் கவர்ந்தது)...
3.நம் உடலுக்குள் (திரேதா)...
4.இந்த உணர்ச்சியின் எண்ணங்களாக (சீதா இராமனாக)... வருகிறது என்ற நிலையைக் காவியமாகப் படைத்துக்
5.கருத்தினைத் தெளிவாக்கி மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்...? என்று உணர்த்துகின்றார்கள்.

இவை அனைத்தும் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கந்த புராணம் விநாயக புராணம் சிவ புராணம் விஷ்ணு புராணம் எல்லாவற்றிலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இவை எல்லாம் இன்று ஏமாற்றுபவன் கையிலே தான் சிக்கியுள்ளது. அவன் அவனுக்குகந்த நிலையைப் பயன்படுத்தி மக்களை உண்மையின் நிலையை உணராது செய்துவிட்டார்கள்.

உண்மையின் உணர்வை உணராது செய்த அந்த நிலைகளைக் கேட்கும் நாமும் இன்றைய நிலையில் எதனின் உணர்வின் சுவை (ஆசை) கொண்டோமோ... எப்படி மீள வேண்டும்...? என்று மீண்டும் அந்த ஆசையிலேயே தான் சிக்குகின்றோம்.

திருடுவது தவறு என்று தெரியும். ஒருவன் திருடன் என்றும் தெரியும். இரு உன்னை நான் உதைக்கிறேன் என்று அவன் சொல்லி விட்டால் கடைசியில் அவன் சொன்னபடி கேட்டால் தான் இங்கே வாழ முடியும் என்று அவனுக்கு அடிபணியும் நிலை வந்துவிட்டது.

தவறு என்று தெரிந்தாலும் தன் வாழ்க்கைக்கு எவ்வாறு...? என்று அதிலிருந்து மீளும் நிலையில்லாது தவறின் பாதையிலேயே செல்லும்  நிலைகள் இன்று வந்துவிட்டது. இங்கு மட்டுமல்ல. உலகெங்கும் நாடுகளிலும் இந்த நிலை தான்.

மதம் இனம் மொழி என்ற நிலைகளில் பகைமை உணர்வு வளர்க்கப்பட்டு மனித இனமே சீர்குலைந்து மனிதன் இனம் அல்லாது உணர்வுகளைத் தோற்றுவிக்கும் நஞ்சான காற்று மண்டலமாகி விட்டது.

அந்த நஞ்சிலிருந்து மீள வேண்டும் என்று விரும்புபவர்கள். குறுகிய காலம் வாழும் இந்த உடலில்
1.நாம் எதைப் பெற வேண்டும்...?
2.இந்த உடலுக்குப்பின் நாம் எதுவாக வேண்டும்...? என்று சற்று சிந்தித்து
3.இந்தத் தியானத்தை மேற் கொள்ளுங்கள்.