ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2018

கிரேதா... திரேதா... துவாபரகா.. கலி... கல்கி யுகங்கள் – நாம் அடைய வேண்டிய நிலை “கல்கி...!”


தாவர இனங்கள் அனைத்தும் கிரேதா யுகம் தான். ஒரு உயிரணு தோன்றினாலும் அது எதை எதை எல்லாம் கவர்ந்ததோ அதுவும் கிரேதா யுகம் தான். எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிர் மனிதனாக வளர்த்தாலும் அதுவும் “கிரேதா யுகம் தான்...!” (கிரேதா என்றால் கிரகிக்கும் நிலை)

உயிரால் வளர்க்கப்பட்டு இந்த உடல் உருவான பின் தாவர இனச் சத்தின் மணங்கள் உயிரிலே பட்டு எண்ணங்களாக இயக்கப்படும் பொழுது அது “திரேதா யுகம்...!”

திரேதா யுகத்தில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோமோ
1.அந்தச் சத்தின் தன்மை கொண்டு உடல் இயக்கப்படுகின்றது.
2.ஆகவே நம் உடல் திரேதா யுகம். (திரேதா என்றால் ஒரு உடலுக்குள் எண்ணங்கள் இயக்கும் நிலை)

இந்த உடல் வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்த்த உணர்வுகளை நுகரப்படும் போது இது நல்லது இது தீமை என்ற உணர்ச்சிகளை நமக்குள் தோற்றுவிப்பது நமது உயிரே.

தீமை என்ற உணர்வை உணர்ந்தபின்
1.நம் உடலில் உள்ள அணுக்கள் இந்தத் தீமையில் இருந்து தப்புவதற்கு
2.அதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
3.அது “துவாபரகா யுகம்...!” (உடலுக்குள் தன்னைக் காக்கும் உணர்ச்சிகள் தோன்றுவது துவாபரகா)

அதைத் துவாரகா யுகம் என்றும் சொல்வார்கள். இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகள் கண்களாகத் தோன்றுகின்றது. அதன் வழி இந்த உடலைக் காக்கும் சக்தி வருகின்றது.

இருப்பினும் இந்த உடலுக்குள் நாம் சுவாசிக்கும் சாந்தம் ஞானம் விவேகம் என்ற உணர்வுகள் கொண்டு நாம் இயக்கி வந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளையும் நுகர நேர்கின்றது.

அத்தகைய குணங்கள் நம் உடலுக்குள் சென்று நன்மை செய்யும் குணங்களை அந்த உணர்வுகளை அழித்து விடுகின்றது.
1.அதாவது தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.
2.இது தான் கலி யுகம் என்பது.

இப்படி ஒவ்வொரு உயிரும் பல உடல்களைப் பெற்று ஒன்றை ஒன்று வென்றிடும் நிலையில் எதன் வலு பெற்றதோ அதன் உணர்வின் தன்மை பெற்ற பின் கலி யுகம் தான்.

ஒரு வேதனைப்படும் மனிதனைப் பார்த்து அவன் வேதனையை நாம் நீக்க விரும்பினாலும் அந்த வேதனை என்ற விஷத் தன்மைகள் நம் இரத்தத்தில் கலக்கப்பட்டு நாம் சிந்தித்துச் செயல்படும் நல்ல அணுக்களை அது வீழ்ச்சியடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் நம் உடல் உறுப்புகளில் வேதனை என்ற விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது 
1.உடல் நலிகின்றது.
2.உணர்வுகள் நலிகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலும் குறைகின்றது.
4.இதைப்போன்று ஏற்படும் போதும் கலி என்ற நிலைகள் அடைகின்றது.

இப்படி உருமாற்றமாகும் விஷத்தின் வலிமையிலிருந்து வென்று இந்தக் கலியை கடந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானது. அது கல்கி யுகம்.

தாய் கருவில் விஷத்தை அடக்கும் நுண்ணிய அணுவின் தன்மையைப் பெற்ற இந்த அகஸ்தியன் தனது வளர்ச்சியில் வலு கொண்ட உணர்வுகள் கொண்டு தீமைகளை அகற்றினான்.

திருமணமான பின் கணவனும் மனைவியும் இருபாலரும் சேர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றார்கள்.

நமது துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து தாவர இயலாக மாற்றினாலும் அதனின் வளர்ச்சியில் உயிர் இனங்களைத் தோற்றுவித்து உடலை வளர்க்க இச்சைப்பட்டு எத்தனையோ கோடி உணர்வுகளைக் கடந்து மனிதனாக உருவாக்கியது.

அப்படி மனிதனான நிலையில் அகஸ்தியன் அதே துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வரும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றினான்.

ஒரு பாம்பு தன் உடலில் உள்ள விஷத்தை மற்றோர் உடல் மேல் பாய்ச்சி அந்த உடலைச் செயலற்றதாக்கி அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மையான பின் அதை இரையாக எடுத்து விழுங்குகின்றது.

விஷம் கொண்ட பாம்பினங்கள் அனைத்தும் இவ்வாறு தான் தன் உணவினை எடுக்கின்றது. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு விதமான விஷத் தன்மை உண்டு.

இதை எல்லாவற்றையும் கலந்து பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மைகளைப் பெருக்கப்படும் போது எல்லா விஷத்தையும் ஒன்றாக்கி நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனான பின் பற்பலவிதமான விஷத்தை அகற்றி அந்த ஒளியென்ற உணர்வினை ஒவ்வொரு அறிவாகத் தெளிந்து கொண்டவன் அகஸ்தியன்.

1.எந்தத் துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் விண்ணிலிருந்து சக்திகள் வருகின்றதோ
2.அதையே அகஸ்தியன் நேரடியாக உணவாக உட்கொண்டு
3.அதனின்று வரும் நஞ்சினை அடக்கித் தனக்குள் அந்த அகத்தின் தன்மையைச் சீர்படுத்தி
4.தன் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய அனைத்து அணுக்களையும்
5.உயிரைப் போன்றே உணர்வின் அறிவின் ஒளியாக உருவாக்கினான்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. உடல் மட்டும் தான் கருகுகின்றது.

ஆக அழியாத நிலைகள் கொண்ட அந்த உயிரைப் போன்றே தன் உணர்வின் அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஓர் ஒளியின் தன்மையாக மாற்றி ஒளியான உடல் பெற்றவன் அகஸ்தியன்.

மனிதனாக இருக்கும் பொழுது கணவனும் மனைவியும் சேர்ந்து தன் இனக் குழந்தைகளை உருவாக்குகின்றனர்

அதைப் போல அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக்கப்படும் போது உயிரைப் போன்றே ஒளியின் உணர்வை உருவாக்கும் திறன் பெறுகின்றனர்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும் என்ற உணர்வுகள் இயக்கி இணை பிரியாத நிலைகளில் வாழ்ந்ததனால் இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

காரணம் துருவத்தின் வழியாகப் பூமி நுகரும் உணர்வுகளை அதிலுள்ள நஞ்சை நீக்கிய அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த விஷத்தையே ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டனர்.
1.அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரமும்
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலமும்.
3.அது தான் கல்கி யுகம்.

மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவருமே அவர்களைப் போன்றே ஒளியின் தன்மை பெற்று அந்தக் கல்கி யுகத்திற்குச் செல்ல வேண்டும்.