ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2018

முளைப்பாரி நிழலில் வெயிலை நாடி “நெடு…நெடு…!” என்று வளர்வது போல் யாம் கொடுக்கும் அருள் ஞான உபதேசத்தின் மூலம் “மகரிஷிகளின் உணர்வை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும்..!”


ஒரு தென்னை மரத்தின் அருகில் அடர்த்தியான நிலைகளில் அதே இனமான தென்னை மரங்கள் நிறைய இருந்தால் அதற்கு வேண்டிய சூரியனின் காந்த சக்தி கிடைக்காது.
1.அப்பொழுது அதனின் ஈர்ப்புக்குள் சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால்
2.தென்னை மரம் வளைந்து நெளிந்து சூரியனைப் பார்த்து நிற்கும்.

அந்தச் சூரியனின் காந்த சக்தி தன் மீது பட்டபின் தான் அது பூமியிலிருந்து நீரை எடுத்துக் கொள்ளும். அப்பொழுது தன் இனமான சத்தை எடுத்து அது வளரும் ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு தாவர இனங்களும் சூரியனை நோக்கி அந்த உணர்வின் ஆற்றல் இருக்கும். அந்த உணர்வின் ஆற்றல் இருப்பதால் தான் அந்த நிலை.

ஒரு செடியை நாம் நிழலில் வைத்து விட்டால் சாதாரண வெப்ப அலைகள் படுகின்றது. இன்று முளைப்பாரியை நிழலுக்குள் தான் போட்டு வளர்க்கின்றார்கள்.

1.வெயிலில் உருபெற்ற அந்தப் பயிரினங்களை
2.வெயிலற்ற நிலைகளில் நாம் வைக்கப்படும் பொழுது
3.வெயிலின் தன்மை எங்கிருக்கின்றதோ
4.அந்த நிலையை இழுத்து வருவதற்காக நெடு…நெடு… (முளைப்பாரி) என்று வளரும்.
5.அதனின் “உயரத்தில் தான்” வளர்ச்சி இருக்குமே தவிர சத்தின் தன்மை வளராதபடி இருக்கும்.
6.படைக்கும் நிலை அற்றதனால் குளிர்ச்சியாக இருக்கும்.

ஆனால் வெயிலின் அருகில் வைத்து விட்டால் அது பூராம் சாய்ந்து அந்த வெயிலின் தன்மை தனக்குள் எடுத்து அதற்கப்புறம் தான் தன் சத்தின் நிலைகள் பெற முடியும்.

அதே சமயத்தில் “குரோட்டன்ஸ்” போன்ற செடிகளை வளர்க்க வேண்டும் என்றால் நிழலில்… வெப்பத்தின் தன்மை குறைந்த இடத்தில் வளர்க்க வேண்டும். அந்த வெப்பத்தின் தன்மை எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதனின் சத்தை அது கவர்ந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது.

இயற்கையின் நிலைகள் இவ்வாறு தான் இருக்கின்றது.

அதைப் போன்று தான் நமக்குள் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறவேண்டும் என்றால் நமக்குள் மறைத்திருக்கும் அந்த ஆற்றலைத் “தட்டி எழுப்ப வேண்டும்….!”

1.உங்கள் வாழ்க்கையில் உடல் நோயினாலேயோ மன நோயினாலேயோ அல்லது
2.மற்ற எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டுத் துன்புற்றுக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகளுக்குள்
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அருள் மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களுக்குள் செலுத்துகின்றோம்.

மரம் செடி கொடிகளுக்கு உரத்தைச் சேர்த்து அதிகப் பலன்களைப் பெறுகின்றோம். அதைப் போன்று தான் அந்த மெய் ஞானத்தின் பலன்களைப் பெற மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அருள் உணர்வுகளை உங்களுக்கு உரமாகக் கொடுக்கின்றோம்.

நமது குருநாதரின் அருள் துணை கொண்டு அவர் காட்டும் அருள் வழிகளைக் கடைப்பிடித்து நீங்கள் செழிப்புடன் வளர முடியும்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வந்தாலே போதுமானது. அது உங்களுக்குள் வளர வளர அதனின் பலன்களைப் பார்க்கலாம்.