ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2018

சீதா லட்சுமி கல்யாணராமா குகன் இராவணன் சூர்ப்பணகை – நம் உடலுக்குள் தோன்றும் எண்ணங்களைப் பற்றிய விளக்கம்


உதாரணமாக சீறிப் பாய்ந்து தன் உணவுக்காகத் தாக்கும் புலியின் ஆக்ரோஷமான உணர்வின் தன்மையைச்
1.சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் அது சீதா லட்சுமியாக மாறுகின்றது.
2.புலியை உற்றுப் பார்த்து அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் சீதா இராமனாக அதே எண்ணங்கள் நமக்குள் தோன்றுகின்றது.

அதைப் போன்று தான் எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மீண்டு இன்று நாம் மனிதனாக வந்தாலும் ஒருவன் செய்யும் தவறை உற்றுப் பார்க்கும் பொழுது கோபமான உணர்வுகளை நாம் அதிகமாகச் சுவாசிக்கின்றோம்.

ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுக்களாக உருபெற்று அதனதன் செயலாக்கங்களை நம் உடலுக்குள்ளே செயலாக்குகின்றது.

காட்டுக்குள் விலங்குகளும் பட்சிகளும் மற்ற உயிரினங்களும் எப்படி வாழுகின்றதோ அதாவது...
1.ஒன்றை ஒன்று வென்று... கொன்று... விழுங்குகின்றதோ...!
2.இதே போல நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில்
3.அதைக் கொன்று குவித்துத் தன் உணவை எடுத்து வளர்க்கிறது.
4.மனித உறுப்புகளை இது சீர் குலைக்கிறது. நம் உணர்வின் நிலைகள் மாறுகின்றது.

காட்டுக்குள் இராமனும் சீதாவும் செல்லும் போது குகன் என்ற ஒரு படகோட்டியைச் சந்திக்கிறார்கள். குகன் ஆற்றில் படகை விட்டு வாழ்ந்து கொண்டிருப்பவன்.

குகன் சமாதானப்படுத்துகிறான். அந்தக் குகனை இராமன் நண்பனாக ஆக்கிக் கொண்டதாகக் காட்டுவார்கள். நம் இரத்த நாளங்களில் நல்ல உணர்வின் தன்மை இந்த ஓட்டங்கள் (இரத்த ஓட்டம்) ஓடுகின்றது என்பதை இராமாயணத்தில் தெளிவாக்கப்படுகின்றது.

அதாவது ஆறு என்பது நம் இரத்த நாளங்களில் ஓடும் இரத்தம். நம் இரத்தத்தில் நட்புள்ள உணர்வுகளைச் சேர்க்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

1.உடலுக்குள் எதை நீங்கள் அழைத்துச் செல்கிறீர்களோ அந்த உணர்வின் தன்மை வருகின்றது
2.உயர்ந்த குணங்களின் தன்மையை நாம் அதிலே ஏற்றினால்
3.உயர்ந்த செயல்களை இந்த உடலுக்குள் செயலாக்கும் என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகிறது.

காட்டுக்குள் சாந்தமான மானைக் கண்டு சீதா ஆசைப்படும் போது இவள் அழகைக் கண்டு அசுரன் (இராவணன்) அங்கே ஆசைப்படுகின்றான்.  இராமனின் அழகைக் கண்டு இராவணனின் தங்கை சூர்ப்பணகை ஆசைப்படுகின்றது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆசையின் நிகழ்ச்சிகள் வரப்படும் போது இது எவ்வாறு உணர்வின் போர் முறைகள் வருகின்றது...? உணர்வின் எண்ணங்கள் எப்படி மாறுகின்றது...? என்பதனை  இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

காடுகளில் வாழும் உயிரினங்கள் எப்படி ஒன்றுக்குள் ஒன்று போராடுகின்றதோ அதை போன்று தான் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள்ளும் போர் முறையாகி ஒன்றை ஒன்று விழுங்க எண்ணுகின்றது.

அத்தகைய போராட்டத்தினால் தான் நமது உடலுக்குள் எத்தனையோ வேதனைகள் வருகிறது. இவை அனைத்தையும் சாந்தப்படுத்த வேண்டும் என்றால் அதற்குத் தேவையான வலிமை எது...? என்றும் அதை எப்படிக் கொண்டு வர வேண்டும்...? என்பதையும் வான்மீகி மாமகரிஷி இராமாயணத்தில் தெளிவாக்கியுள்ளார்.

1.நாம் அதைக் கதைகளாகப் படித்துவிட்டோமே தவிர
2.கதைகளில் சொல்லப்பட்ட உருவங்களைத் தான் நேசித்தோமே தவிர
3.அந்த உருவத்துக்குள் வான்மீகி கொடுத்த மூலக்கூறின் செயலாக்கங்கள் எப்படி என்பதை நாம் அறியவில்லை
4.பின் வந்தோரும் அதைத் தெளிவாக்கவில்லை.

சாதாரணமான மனிதரும் இராமாயணக் காவியத்திலுள்ள கருத்துகளை அறிந்து அந்தக் கருத்துக்களை நுகர்ந்து தனது செயலாக்கங்களை - தன்னைத் தான் அறிந்து கொள்ளும் நிலைக்கே காவியத்தைப் படைத்தனர் ஞானிகள்.

1.நம் எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது...?
2.எண்ணத்தால் பகைமை எப்படி வருகிறது...?
3.பகைமையான உணர்வுகள் உடலுக்குள் வளரும் பொழுது
4.நமக்குள் பல தீமைகளை அது உருவாக்குகின்றது என்று  தான் இராமாயணத்தில் காட்டப்படுகின்றது.

இராமன் கல்யாணராமனாக எப்போது ஆகின்றான்...?

மற்றொன்றின் மேல் பகைமை உணர்வைச் சாடாது தன்னுடன் அரவணைக்கும் நற் குணங்களை இணைத்துக் கொண்டால் நாம் அனைவரும் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் நமது எண்ணங்கள் கல்யாணராமனாகின்றது.

நமக்குள் எண்ணங்கள் ஒருங்கிணைக்கப்படும் போது தான் மகிழ்ச்சியின் தன்மை வருகின்றது.
1.அந்தச் சுவை (சீதா) மகிழ்ச்சியின் உணர்வை ஒளியாக மாற்றுகிறது.
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இணைகின்றது.

மகிழ்ச்சி பெறும் சத்தினை நாம் நுகர்ந்தால் அந்தச் சக்தி நம் உயிருடன் ஒன்றி இராமனுடன் இந்த உணர்வுகள் ஒன்றி ஒளியின் மகிழ்ச்சியின் உணர்வாக ஒளியாக மாற்றி அமைக்க முடியும் என்று
1.எண்ணங்களின் தலைப்புகளை முகப்புகளை (கதாபாத்திரங்கள்)
2.அந்தந்த உணர்வுக்குத் தக்க அது தெளிவாக்கப்பட்டுள்ளது.
      
இவையெல்லாம் மனித வாழ்க்கையில் காலத்தால் மறைமுகமாக இயக்கும் உணர்வுகளைப் பற்றி நாம் நுகர்ந்து அறிய உதவுகிறது.

ஆனாலும் அது அணுவாக மாறி பின் விளைவுகள் நமக்குள் எவ்வாறு செயலாக்குகிறது...? உடல் உறுப்புகளை எப்படி மாற்றுகிறது..? உணர்வுகள் எப்படி மாறுகின்றது...? உணர்ச்சிகள்  எப்படிச் செயல்படுகின்றது...? என்ற நிலையைத் தான் இராமாயணம் மகாபாரதம் விநாயக புராணம் கந்த புராணம் சிவ புராணம் போன்ற காவியங்கள் நமக்குத் தெளிவாக்குகின்றது.

 மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு அந்தக் காவியங்களைப் படித்துப் பாருங்கள்.

அதிலுள்ள மூலங்களை உங்களால் காண முடியும். பேருண்மைகளை உணர முடியும். இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலை தெள்ளத் தெளிவாக உங்களுக்குத் தெரியும்.