ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2018

நம் உயிரின் செயலாக்கங்களையும்… எண்ணங்களால் இயக்கப்படும் நிலைகளையும்… அதனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களையும்… “இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது…!”


1.தசரதச் சக்கரவர்த்தி (உயிர்):-
நாராயணன் மூன்றாவது அவதாரமாக சீதா ராமனாகத் தோன்றுகிறார் என்று காட்டி ஒரு உடலுக்குள் உணர்வுக்குத் தக்க எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்று காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையும் இந்த உயிரில் எண்ணங்கள் அதிகமாக… “ஆசைகள்” வரும் போது… எந்தெந்தக் குணங்களை நுகருகின்றோமோ அது எல்லாம் இந்த உயிருடன் ஒன்றிய சக்தியாக மாற்றுகிறது என்பதைத் தசரத சக்கரவர்த்தி என்று காட்டுகின்றார்கள்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் அதற்குண்டான சக்தியாக மாற்றுகிறது.
1.அதிலே இணைந்த நிலைகள் அது அது
2.தன் தன் இனத்தைப் பெருக்கத் தான் அது முயற்சிக்கும்.

அதில் இராமனுடைய தாயோ சாந்தமானது. அவளுக்குப் பிறந்ததோ சாந்தமான குணம். அவன் தான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளக் கூடியவன். இந்த உடலில் அனைவரையும் அரவணைத்து தனக்குள் வாழும் நிலை பெற்றவன் என்று இராமனின் தாய் எண்ணுகிறது.

தலைமகன் “இராமன்” அந்த நல்லவனுக்குப் பட்டம் சூட்டினால் இந்த சாம்ராஜ்யம் நன்றாக இருக்கும் என்று தசரதன் நினைக்கிறான்.

2.கைகேயி:-
இருந்தாலும் இவன் (தசரதன்) ஆசையால் நுகர்ந்த உணர்வுகள் அந்த உணர்வின் சக்தியாக உருவானது தான் கைகேயி. கைகேயி தன் மகன் பரதனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதன் கொடுத்த வரப்படி சொல்கிறது.

கைகேயி தன் ஆசையின் தன்மை கொண்டு பரதனை வளர்த்தாலும் சகோதர ஒற்றுமை கொண்ட இவன் அண்ணனே (இராமன்) சிறந்தவன் என்ற நிலையில் இருக்கின்றான்.

இங்கே இராமன் இருந்தால் பரதன் அவனுடன் இணைந்து “அவன் போக்கிற்கே போய் விடுவான்...!” என்று கைகேயி எண்ணுகின்றது. அதனால் இராமனைக் காட்டுக்கு அனுப்புகிறது.

காட்டுக்குள் 14 வருடம் வனவாசம் சென்றால் அந்த ஒரு மண்டலத்துக்குள் பரதன் சிறப்பான நிலைகள் அடைந்து விடுவான். இவனுடைய ஆட்சி நிலையாக இருந்தால் இராமன் வெறுத்து விடுவான் என்று தாய் “சூது” செய்கின்றது.

இதற்கென்று சூது உபதேசம் கொடுப்பவரின் (கூனி) நிலைகளைத் தாய் தன் செவிகளில் கேட்கிறது.
1.பிறிதொன்றின் மீது ஆசைப்பட்டு அந்த உணர்வுகளை நுகரப்படும் போது
2.அந்த ஒவ்வொரு உணர்ச்சியும் ஆசையின் நிமித்தமாகத்
3.தன்னை எப்படி மாற்றுகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஒருவர் வாழ்வதைப் பார்த்த பின் அந்த வாழ்க்கையே வாழ வேண்டும் என்று தன் மகனையே (பரதன்) அது காக்கின்றது.

நமக்குள் எடுத்துக் கொண்ட குணங்கள் எந்தெந்தச் சக்தியோ அதனுடைய இனத்தைப் பெருக்கத் தான் நம்முடைய குணங்கள் அது வரும் என்பதைத் தெளிவாக்குகின்றனர்.

இந்த உயிர் (தசரதன்) சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது அதன் சக்தியாக ஆனாலும் அது மீண்டும் தன் இனத்தையே பெருக்கும் என்பதையே தெளிவாகக் கூறுகின்றார் வான்மீகி மாமகரிஷி.

பத்தாவது நிலை அடையும் உயிர் பல உணர்வுகளை எடுத்தாலும் நல்லவனான இராமன் ஆட்சி புரிய வேண்டும் என்று எண்ணும் பொழுது சந்தர்ப்பத்தால் நுகர்ந்த ஆசையின் உணர்வுகள் அதனின் வளர்ச்சியில் வரப்படும் போது.... "எந்த நிலை ஆகின்றோம்...?" என்று காட்டுகிறார்கள்.

3.இராவணன் (உடல்):-
இதன் வழிப்படி வரப்படும் போது இந்த உணர்வின் சத்து இந்த உடலுக்குள் இயக்கும் சக்தியாக இருப்பினும்
1.நுகர்ந்த உணர்வுகள் உடலாகின்றது.
2.அதன் வழி கொண்டு உறுப்புகளாகின்றது.
3.அந்த உறுப்புகளின் வளர்ச்சி கொண்ட இந்த உடல் தான் இராவணன்
4.இராவணன் (நம் உடல்) சகல கலா வல்லமை பெற்றவன் - எல்லா இசையிலும் வல்லவன்
5.புழுவிலிருந்து மனிதன் வரையிலும் உணர்வுக்கொப்ப இசைகள் வளர்ந்தது.
6.அந்த இசைக்கொப்ப மனித உருவைக் கொடுத்தது.
7.இராவணன் “சிவ பக்தன்... சிவனை வணங்குபவன்...!” உடலின் பற்று கொள்கின்றான். (உடல் என்றால் சிவம்)

சிவம் என்ற நிலையில் உடல் வரப்படும் போது தன்னுடன் (இராவணன்) இணைந்து செயல்படும் சகோதரி சூர்ப்பணகை. இந்தச் சகோதரி மற்றொருவரின் (காட்டில் இராமனின்) அழகைக் கண்டு ரசிக்கின்றது.

இராமனைத் தனக்குள் கவர வேண்டும் என்று எண்ணும் பொழுது… அவன் மனைவி அழகாக இருக்கின்றாள். அவளை விரட்டினால் தானே அது நடக்கும் என்பதற்காக சீதாவின் அழகைப் பற்றி இராவணனிடம் வர்ணிக்கின்றாள்.

மேலும் சீதா தன் அழகினால் “என்னை அவள் அவமதித்தாள்... அவமதித்தாள்...!” என்று சூர்ப்பணகை இராவணனிடம் குறையாகக் கூறுகின்றாள். இந்த உணர்வின் தன்மையை உற்று பார்க்கும் போது இராவணன் சீதா மீது ஆசைப்படுகின்றான்.

இந்த ஆசையின் உணர்வு அவனுக்குள் வரும் போது சகல வல்லமை பெற்று பத்தாவது நிலை அடையும் இராவணனுக்குள் பகைமை உணர்வுகளை எப்படித் தோற்றுவிக்கிறது…? என்று காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் முழுவதும் தூங்குகின்றது... அது கும்பகர்ணன். அவன் மிக மிக நல்லவன்.

நமக்குள் ஆசையின் நிமித்தமாகவோ அல்லது சந்தர்ப்பத்தாலோ தீமையான உணர்வை நுகர்ந்து விட்டால் நம் நல்ல குணங்கள் அனைத்தும் தூங்குகிறது என்று காட்டுகின்றார்கள்,

ஆக தான் நுகரும் உணர்வுகளில் எது உருவாகின்றதோ வெறுக்கும் உணர்வும் ஆசையின் உணர்வும் மாறி மாறி வரப்படும் போது இவனுள் விளையும் உணர்வே இவனுக்கு எதிரியாகின்றது. இராவணனுடைய மகனே அவனை எதிர்க்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் அவன் ஆசையின் நிலைகளை வளர்க்கப்படும் போது தீமை என்ற உணர்வு வந்தால் அதை வெறுக்கும் தன்மை வருகின்றது. ஆகவே இவனுக்குள் விஷத்தின் தன்மை கலந்து இவனுடைய செயலாக்கங்கள் அனைத்தும் எந்த இசைகளைக் கண்டானோ சோக இசையாக மாறுகின்றது.

4.இராமன் சீதா ஆஞ்சநேயர் (எண்ணங்கள் இயக்கும் நிலைகள்):-
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் எந்தச் சத்தைத் தனக்குள் எடுத்துக் கொள்கிறதோ அந்தக் குணத்தைக் காக்க இந்த உணர்வின் தன்மை ஊடுருவி அதைக் காக்கும் செயலாகச் செயல்படும்.

கவர்ந்த சத்து சீதா. சத்தின் மணம் உயிரிலே படும் பொழுது எண்ணங்கள் இராமன். இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் செயல்படுத்துவார்.

அதாவது உதாரணமாக நாம் வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலையாக மற்ற எண்ணங்களை அடக்கும்.

எதைக் கவர்ந்தோமோ அந்த உணர்வை - அந்தச் சீதா என்ற சுவையைக் காக்கும் உணர்ச்சிகளை அங்கே தூண்டும் என்பதை ஆஞ்சநேயன் என்று  காட்டுகின்றார்கள். தாவிச் செல்லும் உணர்வுகளுக்கு ஆஞ்சநேயன் என்று காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.

5.இராமாயணக் காவியத்தின் மூலம்:-
1.ஒரு உணர்வின் உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றது...? என்ற நிலையும்
2.மற்றொன்றுடன் எப்படி இயங்குகிறது..? என்ற நிலையும்
3.எண்ணங்கள் எப்படி உணர்வுகள் ஆகின்றது…?
4.உணர்வுகள் எப்படி அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது…?
5.அந்த உணர்வுகள் எப்படி உடலாக்குகின்றது…? என்ற நிலையில்
இதையெல்லாம் அன்று வான்மீகி மூடனாக இருந்தாலும் அவன் அந்தப் பட்சியின் உணர்வால் அதை அறியும் ஆற்றல் பெறுகின்றான்.

தான் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை இராமாயணக் காவியமாகப் ப்டைத்து அதன் மூலம் கருத்துக்களை மக்களுக்குக் கிடைக்கும்படி செய்தார் வான்மீகி மாமகரிஷி. 

இந்த உயிரும் (தசரதன்) உடலும் (இராவணன்) சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப (தோன்றும் எண்ணங்களுக்கொப்ப) கடைசியில் எந்தெந்த நிலையை அடைகிறார்கள் என்பதைக் காவியமாக உணர்த்தியுள்ளார்.