ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2017

முருகனின் தத்துவம் - 10

நல் செயலை இடைமறித்து இயக்கும் நிலைகளை “இடும்பன் என்று காட்டினார் போகமாமகரிஷி
சாதாரண மனிதர்களான நாம் உண்மையின் தன்மையை உணர வேண்டும் என்பதற்காக மகாஞானி போக மாமகரிஷிகள் மனிதனின் உயிரைக் கடவுளாக எண்ணி மனிதனின் உடலைச் சிவமாக எண்ணி மனிதனாக உருவாக்கிய நற்குணங்களைத் தெய்வமாக எண்ணி அந்த உணர்வின் தன்மையை ஆலயமாக எண்ணினார்.

மனிதருடைய உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் பரிமளிக்க வேண்டும்.., என்ற இந்த உள்நோக்கத்துடன் முருகன் சிலையை பழனியம்பதியின் மலைமீது மேற்கே பார்க்கும்படி வைத்து நாம் கிழக்கே பார்த்து வணங்குமாறு வைத்தார்கள்.

நாம் மலைமீது ஏறி தெய்வத்தை வணங்கச் செல்கின்றோம். 

மலைமீது ஏறும் பொழுது நமது உணர்வின் எண்ணங்களை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். 

அவர்கள் காண்பித்தருளிய அருள்ஞானம் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது மகரிஷிகளின் அருளாற்றல் நமக்குள் இணைகின்றது.

நாம் மலைப்படிகளில் ஏறி வரும்பொழுது.., வேகம் இருந்தாலும் கூட நமக்குள் சோர்வும் சேர்ந்துவிடுகின்றது சோர்வடையும் பொழுது கலக்கமான உணர்வுகள் வரும்.

உடல் உறுப்புகள் சோர்வடையும்போது மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ணினோமானால் உடலில் களைப்பு வராது.

நமக்குக் களைப்பு ஏற்படும் பொழுது இடும்பன் என்ற அசுர சக்தி.., நம்மை இடைமறித்து.., நமது உயர்ந்த எண்ணங்களை அமிழ்த்து விடுகின்றது.

அப்பாடா…” என்று சோர்வடைந்து உட்காரப்படும் பொழுது என்னவெல்லாம் எண்ணங்கள் ஓடுகிறது என்று பார்க்கலாம்.

பாவிகள்…, எனக்கு இப்படியெல்லாம் துன்பம் செய்தார்களே…, நான் எத்தனை பேருக்கு நன்மைகள் செய்தேன்.., முருகா..,! என்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே…” என்று எண்ணுவார்கள்.

ளைப்பின் தன்மை கொண்டு அமர்ந்து சோர்வான எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது அது நம் நல் உணர்வின் செயலைத் தடைப்படுத்துகின்றது.

இடைமறித்து இயக்கும் இதனின் தன்மையை நமக்கு உணர்த்தும் விதமாகத்தான் இடும்பன் என்று காட்டினார் போகர்.

நாம் நமது மனித வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் பிறர் செய்யும் துயரத்தால் நமது மனம் சோர்வடைகின்றது. அப்படிச் சோர்வடையும் பொழுது நம்மை அறியாது பல அசுர உணர்வுகள் உட்புகுந்து நல்ல செயல்களைத் தடைப்படுத்துகின்றது.

தை உணர்த்துவதற்காக நல் உணர்வைத் தடைப்படுத்தும் அசுர சக்திகளுக்கு இடும்பன்..," என்று பெயரை வைத்தார் போகமாமகரிஷி.

ஆனால், அங்கே என்ன செய்கின்றார்கள்?

இடும்பன் கோயிலுக்கு வாருங்கள். அர்ச்சனை செய்தால் நன்மை தரும் என்பார்கள். இடும்ப வைத்தியர் என்று கூட இருக்கின்றார்கள். 

ஞானிகள் உணர்த்திய நிலைகளை மறந்து நல்ல குணங்களைச் சீர் கெடச் செய்யும் நிலைக்குதான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

நமக்குள் சந்தர்ப்பவசத்தால் வரும் சோர்வான உணர்வுகள்.., நம்மை இடைமறித்து எப்படி நமது உயர்ந்த குணங்களின் செயல்களைத் தடைப்படுத்துகின்றது என்பதை உணர்த்தினார் போக மாமகரிஷிகள்.

அன்று போகர் உணர்த்திய உண்மையின் தன்மைகளை எண்ணாமல் பட்டாடை தரித்துக் கணக்குப் புத்தங்களை வைத்து முருகனுக்கு பாலாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் எல்லாம் செய்தால் “எங்கள் அப்பன்.., என்னைக் காப்பாற்றுவான் என்று எண்ணுகிறோம்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். ங்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி இதனின் உணர்வைம் புருவ மத்தியில் இருக்கும் "உயிரான ஈசனுக்கு" அபிஷேகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் உட்புகும் நிலையைத் தடுக்கின்றோம். நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றலும் பெறுகின்றோம்.

இதுதான் அன்று போகமாமகரிஷி உணர்த்திய உண்மை நிலை.