ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 19, 2017

மந்திரங்களை ஜெபித்தேன்.., அதனால் தெய்வம் காட்சி கொடுத்தது என்று சொல்வார்கள் - விளக்கம்

இன்று நாம் பக்தி கொண்டு சிலையைப் பார்த்து இதுதான் முருகன் என்றோ மற்றதென்றோ நாம் மந்திரத்தைச் சொல்லி அதன் உணர்வைச் ஜெபித்து “அதைப் பெறவேண்டும் என்ற ஆசையில்..,” நாம் உணர்வினைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

திரும்பத் திரும்ப அப்படிப் பதிவாக்கிவிட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின் கடைசியில் நாம் இறந்துவிடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

இன்று அந்தத் தெய்வத்தை எதன் ரூபத்தில் காட்டினரோ (காட்டுகின்றார்களோ) அதன் உணர்வின் அலையாக உடலுடன் இருக்கும் பக்தி கொண்ட ஆன்மாக்களுக்கு (நாமே) தெய்வமாகக் “காட்சி கொடுக்கும் நிலை” வரும்.

காரணம்.., நம் ஆசையைக் கூட்டி அந்த மந்திரத்தைச் சொன்னால் இதனால் இன்ன பலன் கிடைக்கும் என்று கூறுகின்றார்கள். நாமும் அதை நம்பி மந்திரங்களை ஜெபிக்கத் தொடங்குகின்றோம்.

 எந்தச் சிலையைப் பார்த்து மந்திரங்களைச் சொல்லி இந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் இந்த உடலை விட்டுச் சென்றபின் எதன் உணர்வின் அலைகள் நமக்குள் பதிவானதோ அது தான் நம் ஆன்மாவில் பதிவாகியிருக்கும்.

ஒரு பட உருவை கேமராக்களில் எடுத்து அதை அலைகளாக மாற்றி மீண்டும் நீங்கள் திரைகளில் காணும் பொழுது அதே உருவத்தைக் காட்டுவார்கள். நாம் அதைப் பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான் நாம் பக்தி மார்க்கங்களில் எதன் வழி பட்டு எதனின் உணர்வை எந்தெந்த ஆசைகளை எண்ணி அந்த உணர்வின் வழி பெறுகின்றோமோ அதே சமயத்தில் அந்தச் சிலைக்கு என்னென்னெ புஷ்பங்களைப் போடுகின்றோமோ என்னென்ன நிறங்களில் உடைகளை உடுத்துகின்றோமோ அவைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்கின்றது.

அலைகளாக மாற்றுகின்றது.

நம்முடைய கண்கள் உற்று நோக்கிய உணர்வைப் பதிவாக்குகின்றது. நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அந்த உணர்வுகள் உடல் முழுவதும் அந்த உணர்வின் அலைகள் படர்கின்றது.

“நாம் ஆசையின் நிமித்தம்.., அந்தத் தெய்வத்தை வழிப்பட்டு” அதன் வழிகளில் நாம் பெருகி வந்தாலும் இந்த உடலை விட்டு ஆன்மா செல்லும் பொழுது இன்னனோரு பக்தி கொண்ட ஆன்மா இதே போல செய்தால் இந்த ஆன்மா அங்கே சென்று “அருளாடும்”.

நீங்கள் பார்க்கலாம். அந்தத் தெய்வம் வந்தது, இந்தத் தெய்வம் வந்தது என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் சில மந்திரவாதிகள் என்ன செய்கின்றார்கள்..?

 இந்தத் தெய்வத்தை இன்னென்ன மந்திரம் கொண்டு ஜெபித்தால் “இந்தத் தெய்வத்தைக் கைவல்யப்படுத்திக் கொள்ளலாம்..,” என்று மந்திர ஒலிகளை எழுப்புவார்கள்.

அப்படி அவர்கள் ஜெபித்தார்கள் என்றால் நாமே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் வளர்த்துக் கொண்ட நிலைகள் கொண்டு நம் உயிரான்மா அவன் கையில் சிக்கும்.

அவன் கையில் சிக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்கு மாற்றாக மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.

அற்புதக் காட்சிகளாகக் காட்டுவதும் பல தீய வினைகளைச் செய்வதும் பல பொருள்களை வரவழைப்பதும் காட்சியாகவும் உங்கள் முன்னாடியே காண்பிப்பார்கள், வெளிப்படுத்துவார்கள்.

உதாரணமாக, ஒரு மனித உடலில் உருவான உணர்வினை ஒரு தாவர இனத்திற்குள் அதைப் பதிவாக்கிவிட்டால் மீண்டும் அதை எண்ணத்தில் செயலாக்கினால்.., “ஒரு இலை அப்படியே நகர்ந்து வரும்”.

ஒரு தேங்காயை வைத்து இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிய பின் இந்த உணர்வின் தன்மையை அதில் ஏற்றி அதை எண்ணத்தால் சுழலச் செய்யவேண்டும் என்றால்.., “அந்தத் தேங்காயே சுழலும்”.

இதைப் பார்ப்போர்கள் எல்லோரும் அதனைக் கண்டு வியந்து “அவரிடம் அபூர்வமான சக்தி இருக்கிறது..,” என்று செல்லத் தொடங்குவார்கள்.

இந்த வாழ்க்கையில் அவன் சொல்லைக் கேட்டால் அந்தத் தெய்வ சக்தி பெறுவோம் அதன் வழியில் செல்வத்தைத் தேடுவோம், சுகத்தைத் தேடுவோம் என்ற உணர்வுகளைத்தான் இன்று “நூற்றுக்குத் தொண்ணூறு மக்கள்.., வாழ்ந்து கொண்டுள்ளார்கள்”.

கற்றவரும் சரி.., கற்காதவரும் சரி.., தெய்வமே இல்லை என்று சொல்வோரும் சரி.., தனது செல்வத்தைக் காக்க மந்திரங்களைக் கைக் கொண்டு இதனால் தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டுதான் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டிய நிலைகள்.

ஆகவே, “கடவுள் இல்லை..,” என்று எண்ணுபவர்களும் “தெய்வம் இருக்கிறது..,” என்போரும் “தனது நம்பிக்கை” எதன் மெல் பற்று கொண்டதோ “அதுவே..,” உடலுக்குள் கடவுளாகவும் அது தெய்வமாகவும் இயக்குகின்றது என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.