ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2017

விநாயகர் தத்துவம் - 14

1.விநாயக சதுர்த்தி என்றால் என்ன?
அகஸ்தியன் துருவனாகி திருமணமானபின் துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமாகி ஒளியான நன்னாளே “விநாயக சதுர்த்தி”

விநாயகர் சதுர்த்தியன்று நாம் அனைவரும் மண்ணிலே விநாயகரைச் செய்து அதற்குக் கரும்பு இனிப்புக் கொழுக்கட்டை கனி வகைகள் வைத்து நாம் பூஜித்துவிட்டு அடுத்து மண்ணிலே செய்த அந்த விநாயகரை கடலிலே கரைத்து விடுகின்றோம்.

அதனின் உட்பொருள் இந்த மனித வாழ்க்கையில் கடந்த ஒரு வருட காலத்தில் நாம் நல்லதையே எண்ணிச் செய்தாலும் நம்மை அறியாது சலிப்பு, சங்கடம், குரோதம், அவசரம் ஆத்திரம், வெறுப்பு, பயம், இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நுகர்ந்திருப்போம்.

நல்லதைக் காக்க அத்தகைய உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது. நல்லதை அந்த நேரத்தில் காத்திருந்தாலும் சுவாசித்த சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் அவை அனைத்தும் வேதனை கொடுக்கும் செயலாகும்.

அதைத்தான் தீய வினைகள் என்று சொல்வது.

இவ்வாறு, நமக்குள் சேர்த்துக் கொண்ட அந்தத் “தீய வினைகளை அகற்றிவிட்டு” நல்வினைகளை நமக்குள் சேர்க்கத் தூண்டும் நாளே விநாயகர் சதுர்த்தி.

நம் வாழ்க்கையில் நம்மையறியாது சேர்ந்துள்ள வினைகளை நீக்குவதற்காக இந்தச் சுவைமிக்க உணவுகளைப் படைத்துவிட்டு, இந்த உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று ஏங்க வேண்டும்.
2. தீய வினைகள் சேராது நல் வினைகளை நமக்குள் சேர்த்துச் சுவைமிக்கதாக ஆக்கிடல் வேண்டும்
அவ்வாறு ஏங்கி நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் அருளிய அந்த அருள் வாக்கின்படி நாம் செயல்படுவது அனைத்தும் அது சுவைமிக்கதாக ஆகவேண்டும் என்ற அந்த எண்ணத்தை நமக்குள் சேர்த்துக் கொள்ளக் கூடியதை நினைவுபடுத்தும் நாள்தான் விநாயக சதுர்த்தி.

இயற்கையிலே நாம் தாவர இனங்களின் சக்தியைப் புசிப்போமேயானால் அந்தத் தாவர இனச் சத்திற்கொப்பத்தான் நம்முடைய எண்ண அலைகளும் அதனுடைய இயக்கங்களும், அதனுடைய நோக்கங்களும் செல்லுகின்றன.

நாம் இன்று சுவையாகச் சமைத்து நமக்கு வேண்டிய நிலைகளுக்கொப்ப சமைத்து நாம் ரசித்து சுவைத்துச் சாப்பிடும் இந்த செயலை செய்யவைக்கும் வினைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டாலும் அனைத்தையும் வேக வைத்து உட்கொள்கின்றோம்.

நாம் இன்று கொழுக்கட்டை செய்துவைத்து சுவையான வினையைச் சேர்க்கின்றோம் அல்லவா. இதனை நினைவுபடுத்துவதன் நோக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.

ஒரு பருப்பை வேக வைத்துவிட்டால் அதை மீண்டும் மண்ணிலே ஊன்றினால் அது முளைக்குமோ முளைக்காது.

அதைப் போன்று ஒருவன் தவறு செய்வான் என்றால் அந்தத் தவறைக் கண்ணுற்றபின் அந்த உணர்வின் சத்து நமது உடலுக்குள் சேராவண்ணம் தடுப்பதற்கு “ஓம் ஈஸ்வரா” என்று எண்ணி, மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று அந்த ஞானிகளின் அருள் வாக்கான அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து அந்த ஞானியின் ஒளி கொண்டு, நமக்குள் அது சேர்க்கப்பட வேண்டும்.

அப்பொழுது பிறர் நமக்கு எதிரில் செய்து கொண்ட, அந்த எரிச்சலின் வேதனையான உணர்வுகள் நம்மைச் சாடவண்ணம் தடுப்பதற்கும் அதை நீக்கிவிட்டு.., “நல் வினையை நமக்குள் சேர்க்கின்றோம்.

முந்தைய வினைகளை நிறுத்திவிட்டு இன்றைய நிலைகளில் ஞானிகளின் அருள் வாக்கினை நாம் பெறக்கூடிய தகுதியினை நமக்கு நினைவுபடுத்தும் நன்னாள் இது.

ஆக, தீய வினைகளைச் சதுர்த்தி செய்து தீமையானவற்றை வேக வைத்து அருள் உணர்வுகளைச் சேர்த்து நமக்குள் சுவைமிக்கதாக மாற்றிட வேண்டும்.

அரிசியையும் பருப்பையும் வேக வைத்து அதற்குள் இனிப்பின் நிலைகளை இணைத்துச் சுவையாக கொழுக்கட்டையாகச் செய்து உட்கொள்கின்றோம்


அதைப் போன்றுதான் தன் வாழ்க்கையில் வரும் அனைத்தையுமே “சுவைமிக்கதாக மாற்றி.., சுவையாகப் படைக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு என்பதை நினைவுபடுத்துவதற்குத்தான் அங்கே விநாயகருக்குக் கொழுக்கட்டை செய்து படைக்கும் நிலையைக் காட்டுகின்றார்கள்.