ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2025

இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்

இன்றைய மனிதனின் தவறான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்


குருநாதர் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அருள் ஞான உணர்வை உங்களுக்குள் இணைத்துப் பெருக்கும் பொழுது உங்களுள் தீமைகளை அகற்றும் சக்தி விளைகின்றது.

 

குமாரபாளையத்தில் நாராயணசாமி என்பவர் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் ஆஞ்சனேயர் மடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மாதேஸ்வரன் மலைக்கு யாம் அழைத்துச் சென்றோம்.

 

நாராயணசாமி மற்றும் அவர்களுடைய பாட்டி குழந்தைகள் அனைவரையும் அழைத்துச் சென்றோம். போகும் வழியானது யானைக் காடு. குறுக்குப் பாதை என்று யானைக் காட்டின் வழியாக அவர்களை அழைத்துச் சென்றோம்.

 

மலைப்பாதையில் சென்று கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு எதிர்த்தால் போன்று ஒரு புதரில் இரண்டு புலிகள் நின்று கொண்டிருந்தன. யாம் அழைத்து வந்தவர்கள் புலிகளைப் பார்க்கவில்லை.

 

அவர்கள் பார்த்தால் பயந்துவிடுவார்கள் என்று  கருதி யாம் அவர்களுக்கு முன்னால் போய் நின்று கொண்டோம். யாம் அழைத்து வந்தவர்களில் 10 வயது 12 வயது சிறுவர்களும் இருந்தனர். பின்னால் வயதானவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

 

1.யாம் அவர்கள் புலியைப் பார்க்காதவாறு மறைந்து நின்று கொண்டு பிரார்த்தனை செய்தோம்.

2.எல்லோரையும் பார்த்துக் குறி வைத்துக் கொண்டிருந்த புலிகள் அவைகளுக்கு எதிரான உணர்வுகளைக் கண்டவுடன்

3.இரண்டு புலிகளும் தாண்டிக் குதித்து ஓடின. எதையோ கண்டு பயந்ததைப் போன்று விருட்டென்று ஓடி மறைந்தன.

 

புலிகள் ஓடுவதைக் கண்டு யாம் அழைத்து வந்தவர்கள் வெகுவாகப் பயந்து போனார்கள். அதன் பிறகு, அங்கிருந்து அவர்களை அழைத்துச் சென்றோம். அப்பொழுதெல்லாம் அவர்களுக்குக் காட்சிகள் கிடைக்கும்படிச் செய்தோம்.

 

மாதேஸ்வரன் மலைக்கு அவர்களைப் பழக்கத்திற்காகக் கூட்டிச் சென்றோம். இயற்கை எப்படிச் செயல்படுகிறது? என்ற நிலைகளை யாம் அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை எல்லா இடங்களுக்கும் செல்லச் செய்து பலரைச் சந்திக்கும்படிச் செய்தார்.

 

காட்டிற்குள்ளும் மனித வாழ்க்கையிலும் என்ன இருக்கின்றது…? என்பதைத் தெரிந்துதான் சொல்கின்றோம். ஆனால் உங்களுக்கு இதைச் சொல்கின்றோம் என்றால் சாமி கதை சொல்வதாக…” எண்ணக் கூடாது.

 

இயற்கை எப்படி இயங்குகின்றது? வாழ்க்கையில் வரக்கூடியது அனைத்தும் என்ன செய்கின்றது? என்பதை குருநாதர் எம்மை அனுபவரீதியாக உணரும்படி செய்தார்.

 

1.காட்டிற்குள் சென்றால் மிருகங்கள் கட்டுப்படும்.

2.ஆனால் மனிதர்களிடம் பழகும் பொழுது அவர்களிடம் இருந்து தப்பிப்பதே கடினம் தான்.

 

அதனால் நாம் இன்று பெரும் காட்டினுள் வாழ்கின்றோம். இங்கே நமது உணர்வுகள் கொண்டுதான் நாம் எதையும் மாற்றி அமைக்க வேண்டும். 

 

ஆகையால் ஒருவர் தவறு செய்கிறார்…!” என்று எண்ணும் பொழுது நமக்குள் தவறின் உணர்வுகளே விளைகின்றது. கவே

1.ஒருவரிடம் தவறு என்று உணர்ந்த அடுத்த நிமிடமே அவருடைய தவறான உணர்வு நம்மிடம் இல்லாதபடி

2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

3.இதனால் அவருடைய உணர்வு நம்மைத் தாக்குவதில்லை.

 

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வை தம்முள் பெருக்கித் தீமைகள் வராது காக்கும் நிலையாக உணர்வை ஒளியாக மாற்றும் நிலையாக ஞானிகள் காண்பித்த அருள் வழியில் வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவரும் தம்முள் அறியாது சேர்ந்த சாப வினைகளை பாவ வினைகளை தீய வினைகளை நீக்கி அருள் ஞானிகளின் அருள் சக்தி பெற்று

1.உங்களுடைய பார்வையில் மற்றவர்களுடைய தீமைகளை நீக்கிடும் நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று

2.நீங்கள் இவ்வாழ்க்கையில் பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக பிறவியில்லா நிலையினைப் பெறும் நிலையாக

3.பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.