ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 25, 2017

தொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்

பிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவாசித்தால் என்ன ஆகும்?

ஆகவே, தவறான செயல்களை உற்றுப் பார்த்த அடுத்த கணம் “ஈஸ்வரா..,” என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் சுழலச் செய்து அந்தத் தீய செயலின் உணர்வு உங்களுக்குள் அது வளராது அதனுடைய உணர்வைச் சமப்படுத்துதல் வேண்டும்.

ஆனால், சமப்படுத்திச் சென்றாலும் நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது அங்கே தொழில் சம்பந்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் பொழுதும் இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் செயல் அனைத்தும் நலம் பெறவேண்டும். நாங்கள் உருவாக்கும் உற்பத்தி செய்யும் பொருள்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று கண் கொண்டு அந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

அடுத்து எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இனிமை பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் மலரைப் போன்ற மணங்கள் பெருக வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணி எடுக்கும் உணர்வின் செயலாக்கங்கள் அங்கே கூடினால் தொழில் செய்யும் இடத்தில் உள்ள தொழிலாளியிடமோ அல்லது மேலதிகாரியிடமோ பேசும் பொழுது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இணைந்து வாழச் செய்யும்.

இப்படிச் சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்? நாம் ரோட்டில் வரப்படும் பொழுது தீய செயலை ஒருவர் செய்கின்றார் என்றால் அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உடலில் ஆன்மாவில் முன்னனியில் வந்துவிடும்.

அதை நுகர்ந்துவிட்டுத் தொழிலுக்கு வந்தால் நாம் சுவாசித்த உணர்வுகளே “நமக்குள் எதிரியாக வந்துவிடும்” என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது வேதனையான உணர்வைச் சுவாசித்துவிட்டுச் சென்று தொழிலில் ஒரு இயந்திரத்தை இயக்கினாலும் தவறான நிலைகளில் அது செயலுக்கு வரலாம். அது தவறான நிலைகளில் இயக்கப்படும் பொழுது பழுதாகி தடையாகவும் ஆகலாம்.

அதனால், நண்பரிடத்தில் அல்லது மேலதிகாரியிடத்தில் பகைமை ஊட்டும் நிலை வரும். ஏனென்றால், நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமையான உணர்வுகள் நல்ல நண்பர்களையே பகைமையாக்கிவிடும்.

அதனால் தொழிலையும் வெறுக்கும் நிலை வரும்.

இதைப் போன்று நம்மையறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நிமிடத்திலும் வெளியிலே செல்லும் பொழுதும் தொழிலுக்குச் செல்லும் பொழுதும் தொழிலுக்குச் சென்று தொழில் ஆரம்பிக்கும் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்திப் பாருங்கள்.

மன உறுதி கிடைக்கும். நம் சொல் மற்றவர்களை இணைந்து வாழச் செய்யும். உங்களுக்கு உதவியும் தேடி வரும். அன்பு வளரும். பண்பும் வளரும்.

அருள் ஒளி பெற்றால் இருளை அடக்கிடும் ஞானமும் வரும். தெளிந்த மனதுடன் வாழவும் முடியும். ஆகவே, இதை நீங்கள் எண்ணி எடுத்துப் பழகுங்கள்.

இதனால் உங்கள் தொழிலும் விருத்தியாகும். செல்வமும் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் “உங்களால்.., ஒரு மன நிம்மதி கிடைக்கும்.”