ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2017

“எதிர் காலம் உங்கள் கையில்...!” எப்படி...?

இதைப் படிக்கும் அனைவரும் கடந்த காலத்தை நினைவில் வைக்காமல் “நிகழ் காலத்தில்.., நாம் எவ்வாறு இருக்க வேண்டும்..,? என்று எண்ணுங்கள்.

எதிர்காலத்தின் நிலையை உருவாக்குங்கள்.

நிகழ் காலமான இன்று ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று “நிகழ்ச்சி காலமாக” இதை நிகழ் காலமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது.., எதிர் காலத்தில் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய “இன்றைய நிகழ்காலமே..,” வழியாக அமைகின்றது. எதிர்காலத்தை இவ்வாறு நிர்ணயிப்போம்.

வேதனை என்ற உணர்வை இந்த நிகழ் காலத்தில் உருவாக்கிவிட்டால் வேதனையின் தன்மை கொண்டு எதிர் காலத்தில் அது தான் செயல்படுத்துகின்றது. வேதனைப்படும் நிலைக்குத்தான் அழைத்துச் செல்லும். ஆகவே,
கடந்த காலத்தை மறந்து
நாம் நிகழ்காலத்தைச் சீராக வைத்து
எதிர்காலத்தின் உணர்வை உருவாக்குவோம்.

அனைவரும் எதிர்காலத்தில் அருள் ஞானிகளாவர். அவர்களுடைய அருள் ஞானம் மக்களை அரவணைக்கச் செய்யும் என்ற இந்த உணர்வின் தன்மையை ஒளியாக்குவோம்.

என்றும் பிறவியில்லா நிலை அடைவார்கள் என்ற இந்த உணர்வுடன் வாழ்வோம். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம். அருள் ஞானத்துடன் திகழ்வோம். அருள் உணர்வுடன் வாழ்வோம். இந்த உலகையே.., “ஒளி மயமாக்குவோம்”.

இந்த உணர்வின் தன்மை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் விடும் மூச்சலைகள் இங்கே பரவப் பரவ ஒவ்வொரு மனிதனும் தெளிவாகும் நிலை வரும்.

ஆக, அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபடுவர். விஞ்ஞான வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுபடுவர். உணர்வின் தன்மை பிறவியில்லா நிலை அடைவர்.

இந்த உறுதி கொண்டு இந்த வாழ்க்கையின் பயணத்தை நாம் மேற்கொள்வோம். குரு வழியில் செல்வோம். அருள் வழி செல்வோம். அருள் வழி வாழ்க்கை வாழ்வோம்.

ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு உடலிலும் “ஒளி பெறும் உணர்வை.., ஈசனாக..,” உருவாக்குங்கள்.

ஒவ்வொருவருக்கும் இந்தத் துணிவு வேண்டும்.

மற்றவர்கள் இழித்துப் பேசும் உணர்வுகளைக் கண்டு பணிந்திட வேண்டாம்.

அவர்கள் அறியாது இருள்களிலிருந்து மீண்டிட வேண்டும் என்ற உணர்வினை வலுப்படுத்துங்கள். அவர்களை மெய்வழியில் அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் மெய் உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாறாக அவர்களின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துவிட வேண்டாம்.

இந்த மனித உடலின் வாழ்க்கையின் நிலைகளில் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நிரந்தரமாக நாம் வாழ்ந்திட வேண்டும்.