ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2017

மனிதனுக்கு ஏது ஜாதகம்…?

ஜோதிடம் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் வருகின்றதா.,,! கெட்ட நேரம் வருகின்றதா..,? என்று பலர் கூடிப் பார்க்கின்றார்கள். யாகங்கள் பல செய்கின்றார்கள்.

அவர்கள் எல்லாம் உடலுடன் இன்று இருக்கின்றனரா? அவர்கள் உடலிலுள்ள துன்பங்களைப் போக்கினார்களா?

துன்பத்தைப் போக்கினாலும் அவர்கள் செல்வத்தையெல்லாம் நிலை நிறுத்தினார்களா? செல்வம் இவருடன் செல்கின்றதா..,? உடலுடன் செல்கின்றார்களா? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

பல ஜாதகங்களையும் ஜோதிடங்களையும் பார்த்துத்தான் நல்ல நேரத்தை அமைத்துத் திருப்பூட்டுகின்றனர். திருப்பூட்டிய பின் ஒரு சிலரே அவருடைய சந்தர்ப்பம் “உயர்ந்த வாழ்க்கை” வாழ்கின்றனர்.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் ஜாதகம் ஜோதிடம் பார்த்தாலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த பின் பல புகைச்சல் பல வெறுப்புகள் பல வேதனைகள் “எல்லாமே வருகின்றது”.

எல்லாப் பொருத்தமும் பார்த்துத் திருமணம் செய்தாலும் இங்கே பகைமை உணர்வு வளர்ந்துவிட்டால் அதனால் பல நோய்களும் வந்துவிடுகின்றது.

ஒருவருக்கொருவர் வெறுத்துப் பேசும் பொழுது வெறுப்பின் உணர்வு வீட்டிற்குள் பரவப்படும் பொழுது “பாவி மகள் என் வீட்டிற்குள் வந்தாள்.., எல்லோருக்கும் நோய் வந்துவிட்டது” என்பார்கள்.

இவர்கள் பண்படுத்தும் உணர்வைத் தவறியதனால் வெறுப்பின் உணர்வைத் தனக்குள் வளர்த்ததால் அந்த உணர்வால் இவர்களுக்குள் நோயாகி விடுகின்றது.

ஆனால், “மருமகள் வந்தாள்.., அதனால்தான் என் குடும்பம் சிதைந்து விட்டது..,” என்று இவர்கள் செய்யும் தவறை விடுத்து, வந்த மருமகள் மேல் பழியைப் போட்டு “மீண்டும்.., குடும்பத்தில் சிக்கல்களையே ஏற்படுத்துகின்றனர்”.

ஜாதகம் ஜோதிடம் பார்த்துத்தான் திருமணத்தைச் செய்து வருகின்றனர். ஆனால், மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தே விடுகின்றது.

அப்பொழுது துயர்படும் உணர்வுகள் வரும்பொழுது விஷத் தன்மையான உணர்வுகள் ஆகிவிடுகின்றது.

அப்பொழுது இவர்கள் பார்த்த ஜோதிடம் எங்கே போய்விட்டது..? இவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்னவாகிவிட்டது?

பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக தெய்வத்தின் மேல் பூவை வைத்துக் கேட்பார்கள். இந்தக் கலர் பூ வந்தால்.., “எனக்கு நல்லது” என்றும் எண்ணுவார்கள்.

சிலை மீது அந்தப் பூவே வைத்தபின் இவர்கள் எண்ணம் எப்படியோ அப்படித்தான் விழுகும்.

 கலக்கமான எண்ணத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுடன் கண்ணின் பார்வை அங்கே பட்டால் உணர்வுகளுக்குள் உணர்வுகள் மோதப்படும் பொழுது அன்று அதன் வழி தான் நடக்கும்.

உதாரணமாக, அன்று வேதனையை அதிகமாக எடுத்திருந்தால் வேதனை வரும். “எப்படியும்.., இன்று நல்லதாக வேண்டும்..,” என்று எண்ணியிருந்தால் அதற்குத்தக்க நல்ல பூ வரும்.

நல்ல பூ விழுந்த பின் என்ன செய்கின்றனர். எல்லாத் தெய்வமும் ஒத்து வந்துவிட்டது ஜாதகமும் ஒன்றி வந்துவிட்டது. ஆக, திருமணத்தை நடத்தலாம் என்று வருகின்றனர்.

அத்தகைய நிலைகளில் பார்த்தாலும் திருமணமாகி வந்தபின் இவர்கள் எண்ணிய நிலைகள் கொண்டு அடக்கி ஆட்சி புரியும் நிலைகள் வரப்படும் பொழுது வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது.

ஒன்றுபட்டு வாழும் நிலைகள் மாறிவிடுகின்றது. பகைமை ஆகிவிடுகின்றது. அப்பொழுது அந்த ஜாதகம் காக்கின்றதா..,? பூ வைத்துக் கேட்ட அந்தத் தெய்வம் காக்கின்றதா..,?

ஆகவே, “உங்களுடைய எண்ணங்களை உயர்த்தி வரப்படும் பொழுது.., அதுவே தெய்வமாகின்றது”.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஜாதகம் மனிதனுக்கு அல்ல.

இயற்கை தாவர இனங்களுக்கு உண்டு. “கிரேதா..,” என்ற நிலையில் செடி கொடி இவைகளுக்கும் சூரியன் மற்ற கோள்களுக்கும் ஜாதகம் உண்டு.

தனக்குள் கிரகித்து உணர்வின் தன்மை சேர்த்துக் கொள்ளும் நிலைகளுக்கு அது உண்டு. அது எந்த உணர்வு கொண்டு உடல் பெற்று அதன் உணர்வின் மணத்தால் நுகர்ந்து செல்லும் மற்ற உயிரினங்களுக்கும் ஜாதகம் உண்டு.

ஆனால், மனிதனோ தீமைகளை அகற்றிவிட்டு உணர்வினை ஒளியாக மாற்றும் இந்தச் சக்தி பெற்றவனுக்கு ஜாதகம் என்பது இல்லை.

அடுத்து நியுமராலஜி என்று இந்தப் பெயரை இப்படி மாற்றி வைக்க வேண்டும் அப்படி வைக்க வேண்டும் என்றும் அதனால் நன்மை கிடைக்கும் என்று தாய் தந்தை வைத்த நல்ல பெயரை மாற்றிக் கொள்கின்றார்கள்.

அதே சமயத்தில் வாஸ்து சாஸ்திரம் என்ற நிலைகளில் வீட்டில் வாசலையோ சுவரையோ இப்படி மாற்றினால் சரியாக வரும் என்று அதற்காக கட்டிய வீட்டை இடித்து மாற்றவும் செய்கின்றார்கள்.

பணத்தைச் செலவழித்து மாற்றியமைத்துச் சிறிது காலம் நன்றாக இருந்தாலும் அடுத்த கணம் சொந்தத்தில் பிரியப்பட்டவர் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்?

“அடப் பாவி மகனே..,” எப்படி இருந்தான்..,? இப்படிப் போய்விட்டானே..,” என்ற வேதனை உணர்வை அதிகமாகத் தனக்குள் எடுத்துக் கொள்வார்கள்.

எந்த வாஸ்து சாஸ்திரத்தைப் பார்த்துவிட்டு அதன்படி கட்டினார்களோ அந்த வீட்டிற்குள் இத்தனை வேதனை உணர்வுகள் பரவப்படும் பொழுது தன் உடலுக்குள்ளும் பெருகிவிடுகின்றது.

அடுத்து இதே உணர்வின் வேதனை தொழிலிலும் பரவிவிட்டால் வாஸ்து சாஸ்திரம் வந்து காக்குமா..,? காக்க முடியாது.

ஆகவே, அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்த்துத் தீமையான உணர்வுகளை நமக்குள் வராதபடி தடுத்தால் முடியும். ஆனால், இந்த நிலைக்குச் செல்வார் யாரும் இல்லை.

வாஸ்து சாஸ்திரங்கள் பார்த்துச் சில கட்டிடங்கள் கட்டி அவருக்குக் கூலி இவருக்குக் கூலி என்று எல்லோருக்கும் கொடுத்துச் செலவழித்த பின் “இதிலே எதாவது நன்மை வருமா..,?” என்று இப்படி நாம் சுற்றிக் கொண்டுள்ளோம்.

இந்த உடலின் இச்சைக்கு இனி பொருளைத் தேடி மீண்டும் பொருளைச் சேமிக்கலாம் என்ற நிலைக்குத்தான் செல்கின்றனர். ஜாதகம் ஜோதிடம் பார்த்து அதன் வழியில் நன்மை கிடைக்கும் என்ற “அந்த ஆசையிலேயே தான்” செல்கின்றனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கும். அதன் வழியில் தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற உணர்வை உருவாக்க முடியும்.

இந்த உடலில் வாழும் பொழுது பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்றை நாம் பற்றுடன் பற்றிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் வராதபடி நாம் பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.

அந்த அகஸ்தியன் கண்ட உணர்வை அவன் ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக ஆன பின் அவனைப் பின்பற்றிச் சென்ற ஞானிகள் எத்தனையோ பேர் உண்டு.

அவர்கள் அனைவருமே இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர். நம்முடைய எல்லை அது தான்.