இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது என்று அறிந்து
கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.
மேலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்
எப்பகுதியில் எந்தெந்த இடங்களில் அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம்
குருநாதர் அழைத்துச் சென்றார்.
அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை அறியச்
செய்தார். அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.
அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,?
“நீங்களும்.., அதைப் பெறவேண்டும் அல்லவா”.
ஆகவே, “எல்லோரையும்.., அதைப் பெறச் செய்..,” என்றார் குருநாதர்.
ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்..,
“நான் பெரிய மகான்” நான் அதைச் செய்வேன்.., இதைச் செய்வேன்.., என்று உனது பெருமையைக்
காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.
ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி..,”
நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்.., அவர்களை உயர்த்துகின்றாய். அந்த உயர்ந்த
நிலைகளை நீ நுகர்கின்றாய்.
அவர்களும் உயர்கின்றனர்.., அப்பொழுது நீயும் உயர்கின்றாய்..,
ஆக, இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.
நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்..,
“நான் தான் இதையெல்லாம் செய்தேன்..,” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ
அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.
ஆக, “ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ
ஊட்டுகின்றாயோ “அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்” என்று ஆசைப்படுகின்றாயோ அவர்களைக்
கேட்க வைக்கின்றாயோ அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ உருவான அந்த உணர்வு “உன்னை..,
வலுவாக்கும்”.
அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும்
காக்கும் நிலை வருகின்றது.
ஆகவே, நீ இதை எவ்வாறு செய்யப் போகின்றாய்..,? எவ்வாறு வெளிப்படுத்தப்
போகின்றாய்..,? கடும் தீமைகள் எதிர்த்துத் தாக்கும் உணர்வின் உலகில் நீ வாழ்கின்றாய்.
இதிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன?
இப்படி அடிக்கடி எனக்குள் வினாக்களை எழுப்பி அந்த உண்மைகளை
உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக
ஆன அந்த ஆற்றல்களை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று அவர் காட்டிய அருள் வழியில்
தான் உங்களுக்குள் இதைத் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம், நினைவு படுத்துகின்றோம்.
அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
அவன் தீமையை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக வாழ்வது
போல் நீங்களும் அந்த நிலை பெறுங்கள்.
மனிதரால் இது சாத்தியமானதே.