ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2017

குரு அருளைத் திருவருளாக மாற்றி அருள் பெறும் மக்களாக அனவரையும் உருவாக்குங்கள்

குருநாதர் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது ஒரு கீரியும் நல்ல பாம்பும் போர் செய்து கொண்டிருக்கின்றது.

இது அதைத் தாக்க எண்ணுகின்றது. ஆனால், அது இதைத் தாக்க எண்ணுகின்றது.

பாம்பு சீறித் தாக்கினாலும் கீரி அதனிடம் சிக்குவதில்லை. கீரி தாவிச் சென்று அந்தப் பாம்பைத் தான் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று அதனின் விஷத்தன்மையைப் பாய்ச்சுகின்றது.

ஒரு மணி நேரம் போர் முறையாக இருக்கின்றது. நின்று பார்க்கும்படிச் சொல்கின்றார் குருநாதர். ஆனால், மனிதன் அருகே நிற்கின்றான்.., “தன்னைத் தாக்கிவிடுவான்” என்று இல்லை.

“எதிரியை வீழ்த்திவிட வேண்டும்..,” என்ற உணர்வுகளில் தான் இரண்டும் போர் செய்கின்றது.

அங்கே நின்று வேடிக்கை பார்க்கின்றேன். பாம்பு மனிதனைக் கண்டால் சீறித் தாக்கும் அல்லவா..,? இல்லை. எதனின் நிலைகளில் தன் எதிரியைத் தாக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அதிலேயே தான் இருக்கின்றது.

“அருகில் சென்று நில்..,” என்கிறார் குருநாதர். அதனுடைய போர் முறையில் தான் இருக்குமே தவிர உன்னைத் தாக்காது.., என்று அருகில் சென்றே பார்க்கும்படி செய்கின்றார் குருநாதர்.

போர் செய்யும் பொழுது தவறி அந்தப் பாம்பின் விஷத்தன்மை கீரியின் உடலில் தாக்கிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை ஆனபின்.., “கிறு..கிறு..,” என்று சுழல்கின்றது.

சுழன்று சுற்றி வரப்படும் பொழுது விஷத்திலிருந்து விடுபடும் அந்த மணத்தை எப்படி நுகர்கின்றது? என்று உணர்த்துகின்றார் குரு.

அந்த மணத்தை நுகரப்படும் பொழுது விஷத்தை முறிக்கும் தாவர இனங்கள் இருக்கும் பக்கம் இருக்கும் அந்தத் திசையை நோக்கிப் போகின்றது.

கீரியின் மேல் விஷம் தாக்கப்பட்ட பின்.., “முதலில் முடியாது” இருக்கின்றது. அந்த மணத்தை நுகர்ந்து.., “போகப் போக.., வேகம்..,” அதிகமாகின்றது.

அதைப் பின் தொடர்ந்து “போய்ப் பார்..,” என்று சொன்னார் குருநாதர்.

கீரியின் பின்னால் நான் சென்றேன்.

முதலில் மெதுவாகப் போனது. அந்தச் செடியின் அருகிலே செல்லும் பொழுது ரொம்பவும் வேகமாகப் போனது. போய் அந்தச் செடியின் மீது பிரள்கின்றது.

பிரன்டபின் அதற்குள் இருக்கும் நஞ்சின் உணர்வுகள் மாறுகின்றது. நான் கீரி எந்தச் செடியின் மீது பிரள்கின்றது என்று பார்ப்பதற்கு முன்னாடி “திருப்பி ஓடி வருகின்றது”.

ஓடி வந்த பின் மீண்டும் அந்தப் பாம்பைத் துரத்தி இரண்டும் சண்டையிடுகின்றது. பழி தீர்க்கும் உணர்வாக அது செயல்படுத்துகின்றது. பாம்பை இரண்டாகக் கத்திரித்து விட்டது.

பாம்பு சீறித் தாக்கினாலும் எப்படித் தன்னைப் பாதுகாத்து இந்த உயிரினங்கள் எப்படி உருவாகின்றது? அதிலிருந்து ஒவ்வொன்றும் எப்படி படிப்படியாகத் தன் வளர்ச்சியில் வருகின்றது? விஷத்தை முறிக்கும் அந்த ஞானம் எப்படி வந்தது? இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

அந்த விஷத்தின் தன்மை அதன் உணர்வுக்குள் பட்டபின் அதிலிருந்து தப்பிக்கும் அந்த உணர்வின் ஞானம் கீரிக்கு வருகின்றது.

இப்படித்தான் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றும் நுகர்ந்து கொண்ட பின் தீமைகளைப் போக்கி தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து “இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது..,” என்பதை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

அதே சமயத்தில் இத்தகையை விஷத் தன்மை கொண்ட நிலைகளிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் அதனுடன் இணைந்து அத்தகைய “விஷத்தை முறித்திடும் தாவர இனங்கள்.., எப்படி உருவானது..,?” என்ற நிலையையும் காட்டுகின்றார்.

குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டி இப்படி அறிந்து வந்த உண்மையைத்தான் உங்களுக்குள்ளும் இதை உருவாக்குகின்றோம்.

சந்தர்ப்பத்தில் நீங்கள் செல்லப்படும் பொழுது மணத்தால் நுகர்ந்து இந்தச் செடியின் தன்மையை அறியும் பருவம் உங்களுக்குள்ளும் வரும்.

இதைப் போல உணர்வுகளை நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் பெருகும். நீங்கள் வைத்தியமாகவும் பார்க்கலாம்.

இப்பொழுது உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவான பின் இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பெருக்கிக் கொண்டால் ஒரு விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை “உங்கள் பார்வையால் அது போக வேண்டும்..,” என்றால் அந்த விஷத்தின் தன்மை இறங்குவதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நீங்கள் நண்பர்களுக்குள் பழகுகின்றீர்கள். “வெகு தொலைவில்..,” இருந்தாலும் நண்பருக்கு நோய் என்று சொன்னால் அந்த நோய் நீங்க வேண்டும் என்று “உணர்வைச் செலுத்தினால்” அங்கே விஷத்தன்மைகள் குறைவதைப் பார்க்கலாம்.

இதைப் பரீட்சித்துப் பாருங்கள்.

உங்களுக்குள் இதனின் ஞானத்தின் வழி கொண்டு “தீமைகளை அடக்கிடும்.., தீமைகளைப் போக்கிடும்.., மெய்ப்பொருளை உணர்ந்திடும் அந்த ஆற்றலை..,” உங்களுக்குள் பெருக்க முடியும்.

உங்களை நம்புங்கள்.

சாமியை நம்புகின்றோம் சாமியாரை நம்புகின்றோம். ஜோசியத்தை நம்புகின்றோம் மந்திரத்தை நம்புகின்றோம் நல்ல நேரம் வருகின்றதா..,? கெட்ட நேரம் வருகின்றதா..,? ஜாதகம் பார்த்துத் திருப்பூடுகின்றோம்.

ஆக, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்த எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றனர்..,? எத்தனை பேர் மரணமடைகின்றனர்?

சாமிக்கு அபிஷேகமும் ஆராதனையும் அதே சமயத்தில் பாவத்தைப் போக்க எத்தனையோ யாகங்களைச் செய்கின்றார்கள். அவர்கள் எல்லாம் மடியாமல் இருக்கின்றார்களா..,?

துன்பங்கள் போய்விட்டதா.,? சற்றுச் சிந்தியுங்கள்.

ஆக, நம் எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றது? இந்த உடலில் இச்சைக்குத்தான் நாம் செயலாக்கிக் கொண்டுள்ளோம்.

துன்பம் வரும் பொழுதெல்லாம் உபதேச வாயிலாகக் கேட்டுணர்ந்த உணர்வுகள் கொண்டு உங்கள் எண்ணத்தை “விண்ணிலே செலுத்துங்கள்”.

அந்த மகரிஷிகளின் ஆற்றலை நுகருங்கள். துன்பங்கள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள். அதன் வலிமையைக் குறைக்கச் செய்யுங்கள்.

வலிமையைப் பேருக்கிய அந்த அணுவின் தன்மை வளரத் தொடங்கினால் நாளடைவில் தீமைகள் வந்தால் அந்த விஷத் தன்மைகளை வலுவிழக்கச் செய்யும்.

நம் உடல் எவ்வாறு உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றுகின்றதோ அதைப் போல நஞ்சின் தன்மை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் ஆற்றலை நீங்கள் பெறவேண்டும்.

அதை “எல்லோரும் பெறுவீர்கள்” என்ற நம்பிக்கையில் தான் இதைப் பாய்ச்சுகின்றேன். குரு அருளைத் திரு அருளாக மாற்றி “அனைவரும் அருள் பெறும் மக்களாக” நீங்கள் உருவாக வேண்டும்.

உங்கள் பார்வையில் இருளைப் போக்க வேண்டும்.
உங்கள் பார்வையில் துன்பங்கள் போக்க வேண்டும்.
உங்கள் பார்வையில் பிணிகள் போக வேண்டும்.
உங்கள் சொல்லில் பிறருடைய இன்னல்கள் நீங்க வேண்டும்.
உங்கள் செயல்கள் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்.
உங்கள் செயல்கள் மற்றவர்களை உயர்த்தும் நிலைகள் வரவேண்டும்.

அந்த உயர்ந்த நிலைகள் உங்களுக்குள் வளரப்படும் பொழுது அந்த உயர்வான நிலைகள் உங்களுக்குள் வளர வேண்டும்.

அந்த வளர்ச்சியை நீங்கள் எல்லாம் பெறவேண்டும் என்று “குரு அருள்.., எமக்கு உபதேசித்த உணர்வை” உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.