ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 21, 2017

முருகனின் தத்துவம் - 7

1. முருகன் வள்ளி தெய்வானை
முருகனுக்கு இரண்டு சக்திகள் இச்சாசக்தி, கிரியாசக்தி என்பது அன்று ஞானிகள் சொன்ன பேருண்மையினுடைய நிலைகள்.

நம் உடலிலிருந்து வரக்கூடியது ஆறாவது அறிவு. இந்த ஆறாவது அறிவால் தன் இயக்கும் உணர்வின் சக்தியை வள்ளி என்றும் “வலிமை மிக்கவள்” என்றும் காரணத்தைக் காட்டுகின்றார்கள்.

அதாவது வள்ளி வலிமை மிக்க சக்தி (வல்லி). வல்லவன் என்பதை சக்தியாகக் காட்டும்பொழுது பெண்பாலாக வல்லவி, வல்லி, “வள்ளி என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

மனிதனாக வருவதற்கு முன் நாம் பல கோடிச் சரீரங்களைக் கொன்று புசித்தவர்கள் தான் வேட்டையாடி வளர்ந்தவர்கள் தான் என்றும் காட்டுகின்றார்கள்.

ஒன்றை ஒன்று வேட்டையாடும் பொழுது அந்த வேட்டையின் தன்மைகளில் தப்பித்து இவை அனைத்தும் உணர்வின் தன்மை விளைந்து தன்னைப் பாதுகாக்கும் உணர்வாகத்தான் “இந்த மனித உடலை உருவாக்கியது.., என்ற நிலையை “வேடுவனின் மகள் வல்லி.., என்று காட்டப்பட்டது.

நாம் பல கோடிச் சரீரங்களை வேட்டையாடி அந்த உணர்வில் விளைந்த சக்தி தான் வல்லி என்ற காவியங்களைப் படைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்.

வள்ளி திணைக்காட்டிலே காவல் இருக்கின்றாள். தான் விளைய வைத்ததை மற்ற குருவிகள் கொத்திச் சாப்பிட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கின்றாள் என்று காவியத்திலே காட்டுகின்றார்கள்.

இந்த மனித உடலின் தன்மையை நாம் எத்தனையோ  கோடிச் சரீரங்கள் எடுத்து இந்த நிலையான நல்வினையை நமக்குள் சேர்த்திருக்கின்றோம்.

அந்த நல்ல வினைகளைத்தான் அங்கே திணையாகக் காட்டுகின்றார்கள். ஆகவே அந்த நல்வினைகளைக் காக்கக்கூடிய நிலையாக வள்ளியைக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுது வள்ளி தினைக்காட்டில் காவல் இருக்கும்போது குருவியை எப்படி விரட்டுகின்றாள்? இதைப் போல நம் உடலில் வளர்த்த நல்லுணர்வைக் காக்கக்கூடிய சக்திகளை.., நாம் சுவாசிக்கும்போது.., நம் உயிரிலே பட்டவுடன் தெய்வஆணை.  

நாம் சுவாசித்தது.., இந்த உடலில் தெய்வமாக மாறி.., அந்த ஆணைப்படிதான்.., நம்மை செயலாக்குகின்றது. இதுதான் வள்ளி - தெய்வயானை.
2.வள்ளி திருமணத்திற்கு விநாயகர் உதவி செய்கின்றார்
வள்ளி திருமணத்தில் இன்னொன்றையும் காட்டியிருக்கிறார்கள்.

முருகனின் அண்ணன் விநாயகர் அந்ஆதிமூலத்திலிருந்து தோன்றிய “ஆறாவது அறிவான சக்தியைத்தான்.., நமக்குள் இது காப்பாற்றும் அலைகளாக இருக்கின்றது,  ‘’இதை நீ கல்யாணம் செய்து கொள்’’. 

உன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய உணர்வாக எடுத்துக்கொள் என்று உடலிலிருந்து அந்த சக்தியைக் காட்டினார்கள்.

வள்ளி திருமணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகிறார்கள். பச்சையாகவே காட்டுகிறார்கள். அதை உணர்ந்து கொள்வார் யாருமில்லை.

இந்த உடலின் தன்மையை, அப்படியே பாகம் பாகமாகப் பிரித்து, தெளிவான நிலைகளில் காட்டியிருக்கிறார்கள்.. ஆகையினாலே இதைப் போல இந்த ஆறாவது அறிவின் தன்மை நாம் பிரம்மாவை சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது.

ள்ளி திணைக் காட்டில் காவலிருக்கிறாள் என்றால் நாம் பல கோடி நிலைகளில் எடுத்த இந்தத் திணைக் காடாக இது நம்மைப் பாதுகாக்கின்றது ஆறாவது அறிவு.

இதை எதைக் கொண்டு நாம் நுகர்ந்து நமக்குள் இயக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக்கப்படுகின்றது. 

தன்னைப் பாதுகாக்கும் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை நுகர்ந்து உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றிய நிலையில் ஒளியின் சரீரம் பெற்றவர்கள் தான் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலை கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.., வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அதை நுகர்தல் வேண்டும். நம் எல்லை அது தான்.