ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2017

சிவன் இராத்திரி - நீ விழித்திரு...!

இன்றைய சாங்கிய சாஸ்திரங்களில் சொல்வது போல் “விரதம் இருந்து.., உணவு உட்கொள்ளாதபடி இருந்தால்.., என்ன நடக்கின்றது?”

உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு உணவு கொடுக்கவில்லை என்றால் அவைகள் சோர்வடைகின்றது. அப்படிச் சோர்வடையப்படும் பொழுது விஷத் தன்மை என்ற நிலைகள் “தீய அணுக்களே” நமக்குள் வளரத் தொடங்குகின்றது.

நல்ல அணுக்கள் அது வளரும் சக்தி இழக்கப்படுகின்றது.

ஆனால், ஞானிகள் காட்டிய நிலைகளோ தீய அணுக்களுக்கு உணவு செல்லாது தடைப்படுத்திட வேண்டும். இதற்குப் பெயர் தான் விரதம் என்பது.

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும். அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகள் அனைவரும் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

தீமைகளை வளர்க்காது தடைப்படுத்திடவும் நல்ல உணர்வின் தன்மைகளை நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்கள் அனைத்திற்கும்  கொடுப்பதற்காகவும் தான் ஒவ்வொரு மாதத்திலும் இதைப் போன்று நந்நாளை உருவாக்கிக் கொடுத்தார்கள் ஞானிகள்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். அவர்களுடைய துன்பங்களை எல்லாம் நாம் கேட்டறிந்துள்ளோம். நமக்குள் அந்த அணுக்களின் தன்மை பதிவாகியிருக்கும்.

பதிவான அத்தகைய தீய உணர்வுகள் நமக்குள் வளராது தடுப்பதற்குத்தான் “சிவன் இராத்திரி அன்று விழித்திரு” என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

“விழித்திரு..,” என்றால் ஒருவர் துயரப்படும் பொழுது உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எது எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வலைகளை நமக்குள் காலை நான்கு மணிக்கெல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் “யார் யாரையெல்லாம் நாம் சந்தித்தோமோ..,” அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே சமயத்தில் நாம் உலகில் உள்ள எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம். பத்திரிக்கை வாயிலாகவோ, டி.வி. மூலமாகவோ உலக மக்கள் உணர்வுகளை நாம் நுகர நேர்கின்றது.

ஆகவே, உலக மக்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அவர்கள் எல்லா நலமும் எல்லா வளமும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு காலையில் 4 மணியிலிருந்து ஆறு மணிக்குள் எண்ணினால் நம் வாழ்க்கையில் சந்தித்த நல்லதோ கெட்டதோ சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்திருந்தால் “அந்த அணுக்களுக்கு ஆகாரம் போகாது தடைப்படுத்தப்படுகின்றது”.

காலை 6 மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அழைத்துச் சென்றுவிடுகின்றது. நம் ஆன்மா சுத்தமடைகின்றது.

மகா சிவன் இராத்திரி.., பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக உருவாக்கிய உயிர் நாம் நம் உடலுக்குள் மறைந்துள்ளது. மனிதனான பின் நமக்குள் பல கோடி குணங்கள் நமக்குள் மறைந்துள்ளது.

சிவனுக்கு அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் அதையெல்லாம் செய்தால் மெச்சி அவன் நமக்குச் செய்வான் என்ற நம்பிக்கையில் தான் நாம் ஆலயங்களுக்குள் செல்கின்றோம்.

ஆனால், ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி சிவன் யார்? நம் உடலே சிவம்.

இந்த உடலான சிவனுக்கு உயர்ந்த உணர்வின் குணங்களை நாம் நுகர்ந்தால் அபிஷேகம் ஆகின்றது. அந்த அருள் உணர்வுகள் மகிழ்ச்சி பெறும் உணர்வாக ஆராதனையாக மாறுகின்றது. தெளிந்த மனதை நமக்கு ஊட்டுகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குச் சுவைமிக்க அமுதாகக் கிடைக்கின்றது. அது மகிழ்ந்து வாழும் உணர்வுகளை உணர்ச்சிகளை உந்துகின்றது.

அதன் வழி கொண்டு சிவனான இந்த உடலில் அந்த அரும்பெரும் சக்தியாக மகிழ்ந்து வாழும் நிலை உருப்பெறுகின்றது என்பதைத்தான் உருவத்தை அமைத்துத் “துவைதம்” (திடப்பொருள்) என்று சிலையை வைத்துக் காட்டினார்கள்.

அதில் உணர்த்தப்பட்டுள்ள நற்குணங்களை “அத்வைதம்” (சூட்சமம்) என்றும் அப்பொழுது (அந்தச் சிலையை உற்றுப் பார்த்து) நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இயக்கப்படும் பொழுது “விசிஷ்டாத்வைதம்” என்றும் மிகத் தெளிவாகக் காட்டினார்கள்.

 “உயர்ந்த குணங்களை.., நமது உடலாக்க வேண்டும்..,” என்பதுதான் ஆலயத்தின் பண்புகள்.

இந்த உடலுக்குள் (இருளுக்குள் - இராத்திரி) இயங்கி அந்த உயர்ந்த உணர்ச்சிகளை உந்தி அதன் வழி நமக்குள் நுகர்ந்தறிந்து தீமைகளை நீக்கும் நிலை பெறுகின்றோம்.

இந்த உணர்வின் இயக்கமாக நாம் எப்படி உருப்பெறுகின்றோம் என்பதை உணர்த்துவதற்குத்தான் அன்று சிவன் இராத்திரி அன்று “விழித்திரு” என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

இதை வகுத்துத்தான் சிவன் ஆலயத்தில் இவ்வாறு வைத்தார்கள்.