ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2017

முருகனின் தத்துவம் - 6

1. முருகு – முருகா.., அழகா..!
நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பல நிலைகளைப் பார்க்கின்றோம், கேட்கின்றோம்.  பல தீமையானவற்றையும் அறிய நேருகின்றது.

பார்த்து கேட்டறிந்த பின்பு தான் தீமை என்று சொல்கின்றோம். அறிய உதவுகின்றது. ஆனாலும், கேட்டுணர்ந்த அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து விட்டால் நாம் நல்ல குணங்களையும் நல்ல செயல்களையும் மாற்றிவிடும்.

ஆகவே தீமை என்று அறிந்தபின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த முறைப்படி உள்ளே நுகர்ந்து அந்தத் தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.

அதைத்தான் “முருகு என்பது. ஆறாவது அறிவு கார்த்திகேயா என்றால் வெளிச்சம். மனிதனான பின் தெளிந்திடும் உணர்வு பெற்றவன். முருகு தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவன்.

தீமைகளை மாற்றியமைக்கும் பொழுது நமக்குள் மகிழ்ச்சி வருகின்றது. அதைத்தான் அழகா என்று வர்ணிக்கின்றார்கள்.

முருகா..! அழகா..!” என்கிற பொழுது நம் உடலுக்குள் நாம் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தான் தோற்றுவிக்க வேண்டும். அதுதான் முருகனின் ஆறாவது அறிவின் தன்மைகள்.
2. “தகப்பன்சாமி.., முருகன்
ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சிவனுக்கே ஓதினான், முருகன்.  

சிவம் என்றால் நமது உடல். இந்த உடலுக்குள் நின்று இந்த ஆறாவது அறிவு (முருகன்) இது இன்னென்ன பொருள் என்று அறிவாகக் காட்டுகின்றது.

ஒரு பொருள் ஒரு பொருளுடன் மோதும்பொழுது நாதங்கள் வருகின்றது. நமது பூமி சுழல்கின்றது. அது சுழலும்போது ஏற்படக்கூடியதுதான் பிரணவம்’’. ஓ……ம்.

நாம் சுவாசித்து நம் உயிரிலே பட்டால் “ஓ..,  அந்த உணர்வின் தன்மை ஜீவ அலைகளாக இயக்குவதுதான் ஆகவே அது “பிரணவம்”. “ஓ என்று இயங்கி “ம்.., நம் உடலாக (உடலுக்குள்) ஐக்கியமாகின்றது  என்ற இந்தத் தத்துவத்தை (ஓ……ம்) உடலான சிவனுக்கு காது வழியாகச் சொல்லுகின்றான். 

ஆக நாம் சுவாசித்த உணர்வினுடைய நிலைகள் ஒலி அலைகளாகப்பட்ட பின் இந்த உணர்வின் தன்மை இந்த செவிகளிலே பட்டு சிவனுக்கே.., ஓதினான். இதுதான் தகப்பன்சாமி.., என்று கதை எழுதுவார்கள்.

இந்த மனித உடலுக்குள் ஆறாவது அறிவின் தன்மையை நாம் சுவாசித்து உயிரிலே பட்டு, இந்த உணர்வின் எண்ணத்தை மூச்சாக வெளியிட்டு, இந்த உணர்வின் காந்த அலைகளில் பட்டு, நம் செவிகளில் பட்டு, அந்த ஒலியின் தன்மை கொண்டு செயல்படுத்தும் தன்மை ஆறாவது அறிவு.  

நீங்கள் உங்கள் காதைப் பொத்திக் கொண்டு பேசிப்பாருங்கள். சிந்தனை செய்ய முடியுமா..? செய்து பாருங்கள். காதைப் பொத்திக் கொண்டு பேசினால் உங்களால் அர்த்தம் காண முடியாது.

ஆகையினாலேதான் சிவனுக்கே ஓதினான்.

தன் உணர்வின் எண்ணத்தை..,
தான் சுவாசித்து வெளியிட்ட உணர்வின் தன்மையை..,
தன் செவிகள் கொண்டு..,
அந்த உணர்வின் நிலைகளில் செயல்படுத்தும் தன்மை,

இதுதான் ஆறாவது அறிவு தகப்பன்சாமி. “நாமெல்லாம் தெளிந்து.., தெரிந்து.., தெளிவான நிலைகளில் வாழ வேண்டும்.., என்பதற்குத்தான் ஞானிகள் இதையெல்லாம் உணர்த்தினார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழி வாழ்ந்தால் அவர்கள் சென்றடைந்த எல்லையை அடைய முடியும்.