ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2017

குடும்பத்தில் “பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும்” என்று அனைவரும் எண்ணுங்கள்

அருள் ஞானிகள் பெற்ற தீமையை வென்று நஞ்சினை ஒளியாக்கிய ஞானவித்துகளை நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தொடர்ந்து உபதேசித்து வருகின்றோம்.

உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே வெளிப்படுத்துகின்றோம். கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

அவ்வாறு கூர்மையாகப் பதிவு செய்த அருள் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்று மனிதனின் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக அந்த அருள் சக்தி பெறும் நிலையாக வாழுங்கள்.

கூர்மை என்பது கண்கள் தோன்றிய பின் நல்லவை கெட்டவை என்று நுகரச் செய்கின்றது. அறியச் செய்கின்றது. ஆகவே தீமை என்று உணர்ந்த பின் தீமை புகாது தடுக்கும் இதே கண்ணின் நினைவு கொண்டு உயிரான ஈசனிடம் வேண்டும் பொழுது அங்கே தடைப்படுத்தி நம்மைக் காக்கின்றது.

நல்ல உணர்வினை உருவாக்கும் நாம் நுகரும் உணர்வுகள் எவையோ அதனை உயிரான ஈசன் அதனை அணுக்கருவாக மாற்றிவிடுகின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அடுத்து அது அணுத் தன்மை பெறாத நிலைகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

நம் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் உற்று நோக்கிக் கூர்மையாகப் பதிவாக்கும் நிலைகளில் சில தீமையான உணர்வுகள் பதிவானாலும் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று அப்படிப் பதிவான தீமையான உணர்வுகளுடன் இணைக்கப்படும் பொழுது அந்த விஷத் தன்மைகளை அது அடக்கிவிடுகின்றது.

பெண்களுக்கு அதீதமான சக்திகள் உண்டு. குடும்பத்தில் பெண்களை உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று மதித்தல் வேண்டும்.

“பெண்கள் என்ற நிலைகளில்.., அவர்களை எவ்வளவு உயர்த்துகின்றோமோ.., அவர்கள் அருள் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ.., அருள் உணர்வு பெறவேண்டும் என்று பெண்கள் அக மகிழ்ந்தால்.., அந்தக் கணவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் நல்லது”.

குடும்பத்தில் பெண்களை அழுக வைத்தால் அங்கே இருள் சூழும் நிலை வரும். “யாருக்கும்.., நிம்மதி இல்லை” என்ற நிலைகள் வரும். இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டால் ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்யவேண்டும்?

பெண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அது அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி எங்கள் குடும்பத்தில் வளரவேண்டும். “பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும்” என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதே போல நாங்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று பெண்களும் எண்ணுதல் வேண்டும்.

தன் குடும்பத்தை உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஒவ்வொரு பெண்களும் சிந்தனையுடன் நீங்கள் செயல்படுத்தினால் குடும்பத்தில் வரும் சிக்கல்கள் மறைகின்றது.

ஒன்றுபட்டு வாழும் நிலைகள் வருகின்றது. மனிதன் என்ற முழுமை அடைய முடிகின்றது. உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைய முடிகின்றது.