ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 6, 2017

விநாகர் தத்துவம் - 9

1. ஆதிமூலம்
உயிர் தான் பெற்ற பல கோடிச் சரீரங்களில் தன்னைக் காத்திடும் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து எடுத்து ஜீவ அணுவுக்குள் ஜீவ அணுவாக மாற்றியது.

பல கோடிச் சரீரங்களில் தீமையின் உணர்வுகளை வென்று வென்று இன்று.., “தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக..,” மனித உடலை உருவாக்கியது. இது விநாயகா.

இந்த உயிர் பல கோடிச் சரீரங்களில் பெற்று புழுவிலிருந்து மனிதனாக நம்மை உருவாக்கிய நிலைகளை “ஆதிமூலம்..,” என்று உணர்த்தினார்கள்.

ஆகவே, விநாயகருக்கு ஆதிமூலம் என்று பெயர் வைத்தார்கள் ஞானிகள்.
2. மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும்
விநாயகர் தத்துவத்தில் நாம் பார்ப்பது வினையாகின்றது. “மூலாதாரத்தில்.., மூண்டெழும் கனலைக் காலமறிந்து.., கருத்தறிந்து செயல்பட வேண்டும்” என்று பாடுகின்றார்கள்.

உடலின் உறுப்புக்களுக்கு மூலம் அணுக்களின் தன்மை மூலாதாரம் இங்கே “உயிர்”. நமது உயிர் “மூலம்”.

அந்த மூலத்தில் மோதும்போது “அதனுடைய ஆதாரமாகத்தான்..,” (மூலாதாரத்தில் மூண்டெழும் கனல்) அந்த உணர்வு எதுவோ அது மோதியவுடன் கனலாக எழும்புகின்றது.

ஒருவர் கோபிப்பது நம்மை வேதனைப்படச் செய்கின்றது.

மிகவும் நட்புடன் ஒருவரிடம் நாம் பழகினோம் என்றால் அவர் செய்யும் குற்றங்களை நம்மால் காண முடியாது.

ஏனென்றால் மற்றவர்களுக்கு அவர் கடுமையான செயல்களைச் செய்தாலும் அவரை நண்பனாக எண்ணிப் பாசத்துடன் பழகியிருந்ததால் அந்த உணர்வை அறியவிடாது அது இயக்கும்.

உதாரணமாக, ஒருவர் நம்மிடம் வந்து உங்கள் குழந்தை செய்த சுட்டித்தனத்தால் இப்படித் தவறாகிவிட்டது என்று கோபமாகச் சொன்னால் நாம் என்ன செய்வோம்? 

அதை ஏற்றுக் கொள்வோமா..,?

நமது குழந்தை மேல் ரொம்பப் பிரியமாக இருப்போம். நம் குழந்தை அந்தச் சமயத்தில் அவருக்குக் “கோபம் வரும் அளவிற்கு.., என்ன செய்தது..,? என்று நமக்குத் தெரியாது.

அவர் சொல்லக்கூடிய உணர்வை நம் “கண்.., பார்க்கின்றது. அந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவாக ஆகின்றது.

சுவாசித்தது மூலத்தில் (உயிரில்) மோதுகின்றது. இதில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிய வேண்டும். (அப்பொழுது அந்தக் கருத்தை அறிய வேண்டும்)

அவர் ஏன் இப்படிச் சொல்கிறார்..? அது எதனால்..,?

நம் குழந்தை என்ன செய்தது? அப்படிச் செய்ததா.., இல்லையா..,? குழந்தை செய்தால் ஏன் அப்படிச் செய்தது..,? என்ற காரணத்தை அறிந்தால் “காலமறிந்து அதை நீக்க முடியும்”.

அதை நீக்க முடியவில்லை என்றால்.., “குழந்தை செய்த வினைகள் நமக்குள் வினையாகி.., அது நாயகனாகி.., அந்தக் குழந்தைக்கு “உதவி செய்யும்.., நோக்கத்தோடு நாம் செயல்படுவோம்.

அப்பொழுது அந்தக் “குழந்தையின் குற்றத்தை.., நீக்கச் சொல்லாது”.

இது உணர்த்திய உணர்வுகள் நமக்குள் உருவாகி அவர்கள் மேல் பகைமையை உருவாக்கும். அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் அந்த பகைமையின் உணர்வுகள் இது வளரும்.

இதுதான் விநாயகர் தத்துவத்தில்.., “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும்” என்று சொன்னது.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்த்து இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களையும் பகைமைகளையும் நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோல.., துடைக்க வேண்டும்.