ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 26, 2017

முருகனின் தத்துவம் - 12

1. கார்த்திகேயா நமது ஆறாவது அறிவு – சேனாதிபதி நம்மைப் பாதுகாக்கும்
நமக்கு இருளில் இருக்கும் பொருள் தெரிவதில்லை. ஆனால் வெளிச்சத்தில் இன்னென்ன பொருள் இருக்கிறதென்று அறிகின்றோம்.

இதுபோன்று, நமக்குள் அறிவின் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி ஒன்றை அறியச் செய்யும் ஆற்றல் நமது ஆறாவது அறிவுக்கு உண்டு.

கார்த்திகேயா என்ற நிலை நம் உடலிலிருந்து வரக்கூடிய மணத்திற்கு உண்டு. அது என்ன செய்கின்றது?

நமக்கு ஒன்றை “இது நன்மை.., இது தீமை..,” என்ற நிலைகளை அறியச் செய்கின்றது.

“கார்த்திகேயா” என்று அறிந்து உணர்ந்து தீமைகள் புகாத நிலைகள் கொண்டு நாம் தடுக்கும் நிலை வரப்படும்போது “சேனாதிபதி” என்றும் இந்த உடலைப் பாதுகாக்கும் சக்தி பெற்றது என்றும் ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றனர். 

நமது உயிரின் தன்மை ஒளியின் தன்மையாக இருக்கின்றது. இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காணும் எண்ணங்களை நமக்குள் பெற வேண்டும் என்பதே, நமக்கு ஞானிகள் காண்பித்த நிலை.

நண்பர்களிடத்தில் பகைமை கொண்டிருந்தால் பகைமை மறைய வேண்டும். நண்பர்கள் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் அவர்கள் பொருள் காணும் திறன் பெறவேண்டும். எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்.

எங்களுக்குள் மகரிஷிகளின் அருள்சக்தி பெருக வேண்டும். எங்கள் சொல்லைக் கேட்போரின் உணர்வுகளில் இருள் நீங்க வேண்டும் மெய்பொருளின் தன்மை நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படிப்பட்ட உணர்வுகளை நமக்குள் பெருக்கினால் நமது ஆறாவது அறிவின் தன்மை சேனாதிபதி என்ற நிலைகளில் நமது அறிவு நம்மைப் பாதுகாக்கும் நிலைகளில் இயக்கும்.

ஒரு மிலிட்டரிக்குச் சேனாதிபதி எதற்கு வைத்துள்ளார்கள்..,? கெட்டது வராதபடி தடுப்பதற்குத்தான் சேனாதிபதி.

தடுக்கத் தவறினால் என்ன ஆகும்..? படைகலன்களின் பாதுகாப்பு போய்விடும். நாட்டைக் காக்க முடியாமல் போகும்.

ஒருவன் சாபமிடுகின்றான் என்று தெரிகின்றது. நம் உடலுக்குள் சாபமிட்ட உணர்ச்சிகள் தூண்டுகிறது என்று தெரிகின்றது. அப்பொழுது என்ன செய்யவேண்டும்..? 

இந்த ஆறாவது அறிவை அந்தச் சேனாதிபதியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்தினால் தீமைகள் புகாதபடி தடுக்க முடியும். அந்த ஆறாவது அறிவை.., முருகன் என்று காட்டி சேனாதிபதி..,” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.
2. மகரிஷிகளின் ஒளிச் சுடரை நமக்குள் ஏற்றி மற்றவர்கள் மேல் பாய்ச்ச வேண்டும்
பிறரின் தீமையின் உணர்வைப் பார்த்துணர்ந்து கஷ்டப்படுகின்றான்.., நஷ்டப்படுகின்றான்.., துயரப்படுகின்றான்.., என்ற வேதனையின் உணர்வு கொண்டு நண்பன் என்ற நிலைகளில் மற்றவரிடம் பழகினாலும் அவருடைய வேதனையின் உணர்வுகள் “நம்முடன் இணைந்து.., கலந்துவிடுகின்றது”.

இதுபோன்று ஒருவர் துயரப்படுகின்றான் என்றால், “அருள் மகரிஷிகளின் அருளுணர்வுகள் பெறவேண்டும்” என்ற உணர்வின் சுடரை நம்முள் ஏற்றி வைத்து உணர்வின் சொல்லை தன் உடலுக்குள் பரப்பி இந்த உணர்வின் ஒலி அலைகளை யார் துன்பத்தில் உள்ளனரோ அவர் மேல் பாய்ச்ச வேண்டும்.

பின் மகரிஷியின் அருள்சக்தி அவர் பெறவேண்டும். அவரின் உடல் முழுவதும் படர வேண்டும். அவருக்குள் இருக்கும் துயர் நீங்கள் வேண்டும். அதன் அருளானந்தம் பெறவேண்டும். அவருடைய உடலில் மகிழ்ச்சி பொங்கும் நிலைகள் உருவாக வேண்டும்.

அவருடைய செயல் வைரத்தைப்போல ஜொலிக்க வேண்டும். அவருடைய வாழ்க்கையும் வைரத்தைப்போல் ஜொலிக்க வேண்டும். என்ற உணர்வினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நமக்குள் அப்படி அருள் ஒளியின் உணர்வைச் சேர்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுக்கருவாக உருவாகி “இருள் புகாத நிலைகள் கொண்டு” அந்த உணர்வின் தன்மையை தனக்குள் பெருக்குகின்றது. 

இதன் வழி தீமைகள் வராது காக்கும் அருளுணர்வுகளை நமக்குள் பெருக்க முடிகின்றது. தீமைகள் நம் அருகிலே வராதபடி “பாதுகாப்புக் கவசமாகின்றது”.


அதற்குத்தான் ஞானிகள் ஆறாவது அறிவு முருகனை “சேனாதிபதி” என்று மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.