யாம் உபதேசிக்கும் உணர்வினைக்
கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும். இதற்கு முன் உங்களுக்குள்
பதிவான தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகளை அடக்குவதற்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிப்பது.
ஏனென்றால், “சாமி இப்பொழுது
சொன்னார்.., அப்பொழுதும் சொன்னார்.., அப்பொழுது சொன்னதைத்தான் திரும்பச் சொல்கின்றார்.
சொன்னதைச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றார் என்று சொல்வார்கள்.
ஆனால், “திரும்பத் திரும்பச்
சொல்கிறார்..,” என்று அப்படிச் சொல்பவர்களிடம் “சாமி என்ன சொன்னார்..,?” என்று கேட்டால்
திருப்பிச் சொல்லத் தெரியாது.
உங்கள் சாமி.., “நிறைய..,
சொன்னதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்” என்று அந்த ஒரு சொல்லில் சொல்லி
நிறுத்திவிடுவார்கள்.
மைசூர்பாகு இனிப்பு கிளறுகின்றீர்கள்
என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சீராகக் கிளறவில்லை என்றால் அனைத்தும் ஒன்றாகிக்
“கட்டி.., கட்டியாகிவிடும்”.
பின் சுவை ஏது? வருமா..,?”
ஒரே மாதிரி மாவையும் விட்டு
நெய்யையும் விட்டுச் சீராகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது அதில் விட்ட
இனிப்புப் பாகும், நீரும் ஒன்றாகச் சேர்த்து இந்த வெப்பத்தின் தணலால் நீர் ஆவியாகி
“நெய்யின் தன்மை அதற்குள் ஊடுருவும் பொழுது.., அங்கே சுவை கொடுக்கும்”.
இதைப் போன்று தான் ஒவ்வொரு
பொருளும் செய்யும் பொழுதும் ஒரு மருந்தே காய்ச்ச வேண்டும் என்றால் அந்தப் பக்குவம்
வேண்டும்.
உதாரணமாக குழம்பை வைக்கின்றார்கள்
என்று வைத்துக் கொள்வோம். அது வெந்து கொண்டிருக்கும் பொழுது பெண்களுக்குத் தெரியும்.
குழம்பு வெந்து கொண்டிருக்கும்பொழுது
சில பக்கம் உறைந்தது இல்லாதபடி (கட்டியாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளாமல்) கரண்டியை அந்தந்த
சமயங்களில் பக்குவமாகக் கிளறுவார்கள்.
அது சீராகச் செய்பவர்களுக்குத்தான்
தெரியும்.
சமையல் செய்து கொண்டிருப்பார்கள்.
மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்தச் “சரியான நேரம் வந்து.., குழம்பைக்
கிளறுவார்கள்”.
அப்படிக் கிளறும் பொழுது
குழம்பின் சுவை “ருசியாக..,” இருக்கும்.
அதே சமயத்தில் அடுப்பின்
பக்கத்திலேயே அமர்ந்து சமையல் செய்து கொண்டிருப்பார்கள். அடுப்பு எரிவதை “அதிகமாக வைத்தால்..,”
குழம்பைச் சீக்கிரம் வைத்துவிடலாம் என்று செய்வார்கள்.
இந்தச் சூட்டின் தன்மை
வரப்படும் பொழுது இதற்குள் என்ன செய்யும்? மற்றதுடன் கலந்து கட்டி கட்டியாகச் சேர்த்து
ஒன்றாக உறைந்துவிடும். ஆக, குழம்பில் போடப்பட்டுள்ள “காய்க்குள்.., உப்பின் தன்மை சேராது”.
இது எடுத்துக் கொண்ட சத்திற்குள்
உப்பு உறைந்துவிடும். இது தனித்துவிடும். அப்பொழுது காயில் பார்த்தால் உப்பு இருக்காது.
சில நேரங்களில் “காய்..,
உப்பை இழுத்துக் கொள்ளும்”. குழம்பின் சாறுகளில் உப்பின் தன்மை இருக்காது.
இதில் வேக வைக்கும் நெருப்பின் அந்தக் கொதிநிலைகள்
எவ்வளவோ அதற்குத்தக்கதான் சுவை வரும்.
ஒரு சிலருக்கு அந்தப் பருவ
நிலைகள் தனக்குள் பதிவு செய்து கொண்ட பின் தன்னை அறியாமலேயே அந்தக் “கூட்டுக் கலவையின்
தன்மை வருவதற்காக..,” சரியான நேரத்தில் சரியானபடி கிளறுவார்கள்.
அதன் தன்மை நன்றாக இருக்கும்.
அதே மாதிரி அவர்கள் சாதம்
வைக்கின்றார்கள் என்றால் முதலில் அடுப்பின் வெப்பத்தைச் சீராக்குவார்கள். அந்த வெப்பத்திற்குத்தக்கவாறு
சாதத்தைக் கிளறிவிடுவார்கள். சரியாக இருக்கும்.
ஆனால், அப்படிக் கிளறிவிடும்
பருவத்தைத் தவறிவிட்டால் “நறுக் அரிசி” என்று சொல்வார்கள். அப்படி வந்துவிடும். அதாவது
ஒரு பக்கம் வேகும். ஒரு பகுதி சுத்தமாக வெந்திருக்காது. சாப்பாடும் ருசி இருக்காது.
வீட்டுல் கொஞ்சம் மனக்
கலக்கம் உள்ளவரும், கொஞ்சம் வெறுப்பான நிலையில் உள்ளவரோ, தன் குழந்தைகள் சேஷ்டை செய்கின்றானே
என்று எண்ணுபவர்களோ, அவர்கள் அந்த எண்ணத்துடன் சமையல் செய்வதைப் பாருங்கள்.
போட்டவுடன் இந்த அரிசியிலேயே
வித்தியாசம் தெரியும்.
நல்ல அரிசியைப் போட்டிருப்பார்கள்.
இவர்களின் இந்த உணர்வுக்குத் தக்கவாறு நெருப்பு எரிப்பார்கள். அடுத்துத் தண்ணீர் கொதித்து
வருவதற்கு முன்னாடி அரிசியைப் போடுவார்கள்.
இந்த உணர்வுகள் பாய்ந்தபின்
இந்த உணர்வில் எந்த அளவிற்கு மேக்னட் இருக்கின்றதோ அந்த “நம் உடலில் உள்ள இந்த உணர்வுகள்”
(அதாவது முதலில் சொன்ன மாறுபட்ட உணர்வுகள்) அந்த நீருக்குள் உள்ள காந்தப்புலனுடன் கலந்தபின்
“இந்த அரிசியையே.., சுவை மாற்றும்”.
ஒரே கடையில் நீங்கள் அரிசி
வாங்கிப் பாருங்கள். அந்த அரிசியை நான்கு பேரிடம் கொடுத்துச் சமைக்கச் சொல்லிப் பாருங்கள்.
“வெறும் சாதம் தான்.., அதிலே வேறு ஒன்றுமே போட வேண்டாம்”.
அவர்கள் சமையல் செய்து
முடிக்கும் பொழுது “எப்படி இருக்கின்றது..,?” என்று பாருங்கள். நான்கு விதமாக இருக்கும்.
இதெல்லாம் காந்தப் புலனறிவால் இயக்கப்படக் கூடிய நிலைகள்.
ஆனால், நாம் சொல்வோம் அவர்கள்
“கை ராசி..,” என்று. அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டு அது சமைக்கும்
பக்குவத்தில் அதிலுள்ள காந்தப் புலனுடன் இணையும் பொழுது அதற்குத்தக்க தான் இயக்கமாகி
அங்கே “சுவை வருவதும்.., சுவை அற்ற நிலை” ஆக்குவதும்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத்
தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஆக, நாம் சந்தர்ப்பத்தால்
எடுத்துக் கொண்ட ஒரு தீமையான உணர்வைச் சுத்தப்படுத்தாதடி அன்று சமையல் செய்தால் நிச்சயம்
அங்கே குறைபாடுகள் வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
“சமையலுக்கு மட்டுமல்ல..,”
உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் ஆனாலும் நாம் ஈர்த்து வெளிவிடும் உணர்வுகள் இணையும்
தன்மை கொண்டு அதற்குத்தக்க தான் காரியங்கள் நல்லதாவதும் கெட்டதாவதும்.
யாம் உங்களுக்குத் திரும்பத்
திரும்ப உபதேசிப்பதன் நோக்கமே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்குள்
வந்து மோதும் எத்தகைய நிலைகளாக இருந்தாலும் (கோபம், ஆத்திரம், பயம், வேதனை, சலிப்பு,
சோர்வு, எரிச்சல்) அதற்குள்ளும் “அருள் உணர்வுகளை இணைக்கும் பருவத்தை” ஏற்படுத்துகின்றோம்.
உங்களுக்குள் உள்ள அனைத்து
குணங்களுக்குள்ளும் அருள் வித்துகளைப் பதிவாக்குகின்றோம். பதிவானாதை நினைவாக்கும் பொழுது
உங்கள் நினைவாற்றல் மகரிஷிகளின் பால் செல்லும். உங்களைச் சீர்படுத்தும் எண்ணங்கள் உதயமாகும்.
அதன்படி நடக்கும் பொழுது
உங்கள் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும். எனக்கு குருநாதர் எல்லாவற்றையும் இப்படித்தான்
அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.
குருநாதர் காட்டிய அருள்
வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த உணர்வே அருள் வழியில்
உங்களை அழைத்துச் செல்லும். இதில் ஒன்றும் சிரமமில்லை.
மகிழ்ந்து வாழும் அருள்
சக்தி பெறுவீர்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.