ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2017

தீமைகள் புகாமல் நீ எந்த நேரமும் விழித்திரு – சிவன் இராத்திரி

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு உயர்ந்த குணம் கொண்டு தர்மத்தைச் செய்தாலும் பரிவுடன் உதவி செய்தாலும் நம்மால் உதவி பெற்றவனே அது திரும்பி நமக்கு எதிர்த்து நிற்பார்கள்.

“அடப் பாவி.., நான் எப்படியெல்லாம் உதவி செய்தேன்? நீ இப்படிச் செய்கின்றாயே..,” என்று வேதனைப்படும்போது அந்த வேதனையின் உணர்வுகள் உட்புகுந்து நீங்கள் செய்த நன்மைகளை மாற்றி விடுகின்றது.

ஆக, நன்மை செய்த நிலைகள் மாறி வேதனைப்படும் அந்த அணுவாக மாறி உடலுக்குள் விளையத் தொடங்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விழித்திருத்தல் வேண்டும்.

இதனை நாம் தெளிந்து அந்தத் தெளிந்த நிலைகள் கொண்டு நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும் நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும் என்றும் பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்? என்ற நிலைகளை அறிதல் வேண்டும்.

உங்களுக்குள் போற்றித் துதித்துவிட்டு அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகப் போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு. இப்படி நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு.

ஆனால், அவர் எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும் என்று போற்றும் நிலைகள் வேறு.

இதைப் போன்ற நிலைகள் “ஏமாற்றும் அல்லது ஏமாறும் நிலைகள் அல்லாது.., போற்றல்..,” என்பது எப்படி இருக்க வேண்டும்..?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் நாம் அதைப் பற்றி நமக்குள் போற்றிக் கொள்ள வேண்டும்.

“அவர் உயர்ந்தார்...,” அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால் “அவருக்குள் வளரும் உணர்வுகள்.., நமக்குள் நின்று நாமும் வளர்வோம்”.

ஆனால், எல்லா உதவியும் செய்வார்கள்.

உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்.., “பார்.., அன்றைக்கு எல்லா உதவியும் நான்தான் செய்தேன்”. இன்றைக்கு என்னைச் “சிறிதளவாவது அவன் மதிக்கின்றனா..,? பார்..,” என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.

ஆக, செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.

“தன்னை மதிக்கவில்லையே..,” என்ற உணர்வு கொண்டு தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள். பின் என்ன ஆகும்?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும். ஆக, செய்த நன்மையை நினைவு கொள்ளாது செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் இத்தகையை நிலைகளில் பகைமையை வளர்த்துக் கொண்டு நமக்குள் நல்ல அணுக்கள் வளராது தடைப்படுத்திடும் இந்த நிலைகளிலிருந்து மீட்டிடத்தான் சிவன் இராத்திரி அன்று “விழித்திரு..,” என்று காட்டினார்கள் ஞானிகள்.

மகா சிவன் இராத்திரி - ஓர் உயிரின் தன்மை உடல் பெற்ற பின் உடலுக்குள் மறைந்துவிடுகின்றது அந்த உயிர்.

அதைத்தான் இருளுக்குள் மறைந்த நிலைகளை சிவன் என்றும் உணர்வின் தன்மை ஈசன் என்றும் உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை வழி நடத்துகின்றது என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

 காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தாய் தந்தையரை எண்ணி ஓம் ஈஸ்வரா.., என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று அந்த உணர்வுகளை எங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து, நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த வேதனையோ மற்றவர்கள் மேல் உள்ள பகைமைகளயோ நமக்குள் வளராமல் மாற்றிடலாம்.

நாம் செய்த நன்மை நமக்கும் பயனளிக்கும். பிறரின் உணர்வுகள் நம்மை இயக்காது. அந்த அருள்ஞானிகளின் அருள் வட்டத்தில் நம் நினைவுகள் செல்லும் பொழுது இந்தப் புவியின் பற்று நமக்குள் வராது.


என்றுமே ஏகாந்த நிலை என்ற பேரானந்தப் பெருவாழ்வு வாழ முடியும்.