ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2017

விநாயகர் தத்துவம் - 8

1.  சதுர்த்தி – தீமையான உணர்வுகளின் விழுதுகளை அறுத்துவிட வேண்டும்
விநாயகர் சதுர்த்தி நன்னாளில்  விநாயகர் உருவத்தைக் களிமண்ணால் செய்து பூஜித்துப்  பின் கடலில் கரைக்கின்றோம். 

இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால், நமக்குள் சேர்ந்த தீய உணர்வுகளை வளராது தடுத்து அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்.

எல்லாக் குடும்பங்களும் நலம் பெறவேண்டும், எங்கள் பகைமைகள் அழிய வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கும் பொழுது நம் உடலிலும் நம் பகைவர்களின் உடலிலும் பதிந்த தீய உணர்வுகள் அனைத்தும் கரைந்து விடுகின்றன.

ஒரு மரம் எந்த நறுமணத்தின் உணர்வுகளைக் கொண்டிருக்கின்றதோ அதனின் உணர்வின் சக்தியைக் காற்றில் இருந்து ஈர்க்கின்றது.

ஆனால்,  அதனுடைய வேரை அறுத்துவிட்டால் அது நீரைக் கவரும் திறனை இழந்து தன் ஜீவ சக்தியை இழந்து தன் இனத்தைக் கவரும் தன்மையையும் அது இழந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நமக்குள் மற்றவரின் உணர்வின் தன்மையைப் பதிவு செய்து அதனின் நினைவாற்றல் வராதபடி தடுத்து நிறுத்தும் நிலையாக..,” மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது, “தீய உணர்வுகளின் விழுதுகள் தடைப்படுகின்றன”.
2.  தீமை செய்யும் உணர்வுகளைக் கடலுக்குத் துரத்தியடிக்க வேண்டும்
இவ்வாறு தடைப்பட்டபின் நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் எல்லோரும் நம் நண்பர்கள் என்று வளரப்படும்போது நம் அனைவரிடமும் இருந்து வெளிப்பட்டிருந்த காற்றில் கலந்துள்ள தீய உணர்வுகள்  நகர்ந்து கடலின் ஈர்ப்புக்குள் சென்று.., மறைந்து விடுகின்றன”.

அப்பொழுதுதான் இந்த பூமியில் பரிசுத்த நிலைகள் பெருகி அதே சிந்தனை மக்களின் மத்தியிலும் தோன்றுகின்றது. ஏனென்றால்,
உலக மக்கள் அனைவரும் ஓரினம்
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்
நாம் ஈசனின் இயக்கத்தால்தான் இயங்குகின்றோம்.

நம்மை இயக்கும் உயிரான ஈசனுக்கு மதத்தின் பெயராலோ இனத்தின் பெயராலோ வெறுப்பையோ குரோதத்தையோ கொடுத்துவிடக் கூடாது.

ஆகவேதான் நமது உயிரான ஈசனுக்கு செய்யக் கூடிய கடமைகள் எதுவென்று உணர்ந்து, நமது வாழ்க்கையில் நல்ல குணங்களைச் சுதந்திரமாக்க அருள் ஞானிகளின் உணர்வைக் கவசமாக..,” மாற்றிட வேண்டும்.

அரசியல், மத, இன, மொழி பேதங்களால் விளைந்த தீய உணர்வுகள் இந்த பூமியில் படர்ந்து இருக்கின்றது. இவைகளில் இருந்து நாம் விடுபட்டு, நமது நல்ல உணர்வுகளைச் சுதந்திரமாக செயல்படச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செயல்பட்டுத் தீமையற்ற உலகைப் படைப்போம். தீமையற்ற உலகத்தை முதலில் நம்மிடத்தில் உருவாக்க வேண்டும். 

இதைச் செய்தோமானால் பேருலகத்தையும் படைக்க முடியும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைப் படைக்கும் திறன் பெற்றது நமது உயிர். ஆகவே உயிரை ஈசனாக மதித்து உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சிகரமாக்குவோம்.

நம் முன் படர்ந்து கொண்டிருக்கும் தீய உணர்வுகள் நமக்குள் ஊடுருவ இடம் கொடுக்காது, துருவ நட்சத்திரத்தின் துணைகொண்டு அதனைக் “கடலுக்குத்.., துரத்தியடிக்க வேண்டும்”. 

ஏனென்றால் தீய உணர்வுகளை ஈர்ப்பதற்கு இடமில்லையென்றால். அது, வேறு வழி இல்லாது, இறுதியில் கடலின் ஈர்ப்பிற்குச் சென்று மறைந்துவிடும்.

இவ்வாறு, “தீய உணர்வுகளுக்கு இங்கு இடமில்லை..,” என்று செய்வோம். 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இவ்வுலகமெங்கும் படரச் செய்வோம். அனைவரிடத்திலும் பகைமையை நீக்குவோம். மத, இன, மொழி, அரசியல் பேதங்களை அகற்றுவோம்.

அனைவரும் ஒன்றுபட்டு வாழ எல்லா மகரிஷிகளின் அருளை வேண்டிப் பிரார்த்திப்போம். இவ்வுலகில் அமைதி படர்ந்து, அனைவரும் பிறவா நிலை எனும் நிலைஎய்த வேண்டும் என்று எண்ணி நாம் தவமிருப்போம்.

இதன் வழியில் மகரிஷிகளின் அருள் வழியைப்  பின்பற்றிச் செயலாக்கி வரும் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.