ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2018

தீபாவளி அன்று அதிகாலையில் புத்தாடை அணிகின்றோம் – விளக்கம்


கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள் என்பார்கள். கண்ணன் என்றால் நம் கண்கள்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து மகரிஷிகளின் அருள் அக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும். நம் கண்ணின் நினைவுகள் விண்ணிலே இருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து எத்தனை பேர் மீது பகைமை கொண்டோமோ அதை எல்லாம் மறக்க வேண்டும்.

அந்த வைரத்தைப் போல எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலித்திட வேண்டும். அதைப் போல நாங்கள் பார்க்கும் அனைவரது சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

எல்லோரும் இப்படி அதிகாலையில் எண்ணும் பொழுது பகைமை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த அசுரக் குணங்களைக் கொல்கின்றது. (நரகாசுரனைக் கொன்ற நாள்)

தீமைகளை இழுக்கக்கூடிய சக்தி இங்கே இல்லை என்றால் அந்த பகைமை உணர்ச்சியைத் தூண்டிக் கொண்டிருக்கும் உணர்வலைகளைக் காலையில் ஆறு மணிக்கு சூரியன் இழுத்து மேலே கொண்டு சென்று விடுகின்றது.

இரண்யன் எனக்கு எதிலேயுமே இறப்பு இல்லை என்று வரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றான். அதைத் தான் காவியத்தில் அன்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இரண்யனுக்குக் கொடுத்த வரப்படி மனிதர்கள் நாம் ஈர்க்க மறுத்த அந்த நஞ்சான உணர்வுகள் வெளியில் வந்தவுடனே சூரியனே எடுத்து வைத்துக் கொள்கின்றான்.

ஏனென்றால் அது அவன் கொடுத்த வரம் தானே…! இது இல்லை என்றால் சூரியன் இயங்காது….!

ஒவ்வொரு அணுக்களிலேயும் இந்த விஷம் இல்லை என்றால் உணர்ச்சிகள் இயங்காது. எந்தக் குணமும் அது இயங்காது. ஆகவே
1.எல்லாவற்றையும் இயக்குவதற்கு நானே தான் மூலம்…!
2.அதே சமயத்தில் அதை இயக்கினாலும் அதை அடக்குவதற்கும் நானே தான் மூலம்…!
3.அப்பொழுது என்னால் தான் என்று “நான்…!” என்ற அகந்தை வருகின்றது.
4.”அதற்கு வலு கூட்டக் கூடாது…! என்பதற்குத்தான்
5.நமக்குள் அந்தப் பகைமை உணர்வுகள் உட்புகாதபடி தடுக்க வேண்டும் என்று
6.தீபாவளி அன்றைக்கு ஞானிகள் தெளிவாகக் கொடுத்தார்கள்.

அதிகாலை நான்கு மணியில் இருந்து ஆறு மணி வரையிலும் ஒவ்வொருவரும் இந்த ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து விட்டு தலையை முழுகிவிட்டு நல்ல புத்தாடையை மேலே போடுகிறோம் என்றால் என்ன அர்த்தம்…?

1.அருள் மகரிஷிகளின் உணர்வை - அந்த அருள் ஒளியை
2.நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிய வேண்டும்.
3.இது தான் புத்தாடை என்பது.
4.இது வலு கூடினால் என்ன செய்கின்றது…? தீமைகள் அகலுகின்றது.

அதைத்தான் நாராயணன் மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்றார்கள் ஞானிகள்.

பிளந்தான் என்றால் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்தவுடன் நமக்குள் இருக்கும் பலவிதமான தீமை செய்யும் உணர்வுகள் பிரிந்து ஓடிவிடுகின்றது. தீமைகள் இங்கே தனக்குள் வராதபடி தடுத்து விட்டான். அந்தத் தீமைகளை வளர்க்கவில்லை.

நன்றாக யோசித்துப் பாருங்கள். ஞானிகள் எப்படி காவியத்தைப் படைத்து நமக்குத் தெளிவாக்குகின்றார்கள் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1.நமக்குள் எந்த அருள் உணர்வுகளை அரவணைத்தோமோ அந்தப் பேரருள் உணர்வுகள்
2.தீபத்தின் ஒளியின் இருள் விலகுவது போல் ஒளியின் சுடராக நம் ஆன்மாவில் பெருகி
3.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் பேரொளியாகி
4.அந்த அறிவின் தன்மையாக நம்மை இயக்கத் தொடங்கும்.