ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2018

தீமைகளை அடக்கி அதன் மீது “சவாரி செய்ய வேண்டும்…!” என்றார் குருநாதர்


விநாயகனை வணங்காமல் கோயிலுக்குள் போனால் பலன் ஏதும் இல்லை என்று சொல்கிறோம். அந்த நல்ல வினை எது…? நல்ல வினையை எப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்…? நல்ல பலனை எப்படிப் பெறவேண்டும்…?
 
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.அதாவது தீமைகளை வென்ற வினைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

நாம் யார் யாரை எல்லாம் பார்க்கின்றோமோ அவர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும்.

ஏனென்றால் நாம் பார்த்தவர்கள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள். அதாவது அவர்களின் உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் இருக்கின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

எத்தனையோ பேரைப் பார்த்த அந்த உணர்வுககள் அனைத்தும் பல பல வினைகளாக நமக்குள் விளைந்திருக்கின்றது. அதற்குள் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்து நல்ல வினைகளாக மாற்ற வேண்டும்.

குருநாதரைச் சந்தித்த ஆரம்பத்தில் இதை எனக்கு உணர்த்துவதற்காக என்ன செய்தார்….?
1.விநாயகர் மேலே சவாரி ஏறி உட்கார்ந்து
2."நான் தான்டா விநாயகன்…" என்று சங்..சங்…சங்… என்று குதிக்கின்றார்,

வருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லாம் இதைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்.

ஏனய்யா…! பைத்தியத்தைக் கொண்டு இப்படி விநாயகர் மேலே ஏற விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்…? ஏன் இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாய்…? என்று கேட்டார்கள்.

அவர்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

ஆனால் குருநாதர் விளக்கம் கொடுக்கும்போது தான் அதனின் உட்பொருள் என்ன என்று அறிய முடிந்தது.

எது….?

நமக்குள் எதை அடக்க (சவாரி) வேண்டும்…? என்று உணர்த்துகின்றார்.

1.அருள் ஒளி கொண்டு உடலுக்குள் வந்த தீய வினைகளை அடக்க வேண்டும்.
2.அருள் ஒளியை நமக்குள் வினையாக்க வேண்டும்.
3.அந்தச் சவாரி செய்ய வேண்டுமடா…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் முதலிலே இந்த மாதிரி வேலைகளைச் செய்வார். ஆனால் பின்னாடி தான் உண்மைகளை எல்லாம் விளக்கிக் காட்டுவார்.

1.நான் பார்க்கின்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நான் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
3.எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுடன்
4.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நீ பெறுவதற்கு உன் எண்ணம் முயற்சியாக இருக்க வேண்டும் என்றார்.