ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2018

சொர்க்க வாசல் எது...? வைகுண்டம் என்பது எது...? மோட்சம் என்பது எது....?


வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் வடக்கு வாசலைத் திறந்த பின் சாமிக்கு அர்ச்சனை செய்து விட்டு வீட்டுக்குக் கொண்டு வந்து சாமிக்கு நல்ல சமையலைப் படைத்து பொங்கி வைத்து விட்டோம் என்றால் நமக்கு ஆண்டவன் சொர்க்கத்துக்கு வழிகாட்டுவான் என்று தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

இவை எல்லாம் நரக லோகத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைகள், ஏனென்றால் இந்த உடலின் பற்று தான் வருகின்றது.

“உத்தராயணம்...” என்ற நிலையில் வடக்குத் திசையில் துருவத்திலிருந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நமக்குள் பெற்று
1.நாம் பார்ப்போர் அனைவரது குடும்பங்களும் நலம் பெற வேண்டும்.
2.இந்தப் புவி முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
3.உலக மக்கள் அனைவரும் அந்தத் தெய்வீக நிலைகள் பெற வேண்டும் என்ற ஆசையில்
4.உயிருடன் ஒன்றி இதனின் உணர்வின் தன்மை வந்தால் இதுவே நம் உயிராத்மாவிற்குச் “சொர்க்கவாசலாக...” அமைகின்றது.
5.உடலை விட்டுச் சென்ற பின் அங்கே வைகுண்டம் அழைத்துச் செல்கின்றது.
6.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்
7.ஏகாந்த நிலைகள் பெறுகின்றோம்.

வாழ்க்கையில் வரும் தீமைகள் மீது பற்றற்ற நிலையாக்கி நம் உயிரைப் பற்றுடன் பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்றால் அது தான் “வைகுண்ட ஏகாதசி...!”

 வைகுண்டம் என்பது சப்தரிஷி மண்டலம். பக்தி மார்க்கத்திலும் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் பின்பற்றுவதில்லை.

இந்த உடலின் இச்சையின் நிலைக்கும் அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து காசைக் கொடுத்து விலைக்கு வாங்குகின்ற நிலைக்குத் தான் செல்கின்றோமே தவிர
1.அருள் ஞானிகள் காட்டிய வழிகளை நாம் பின்பற்றவில்லை.
2.அதன் வழி நாம் செல்லவில்லை... செல்லவும் மனமில்லை...!
3.இன்று இதைச் சொன்னாலும் கேட்பதற்கு இல்லை...
4.அன்றைக்குச் செய்தவர்கள் எல்லாம் தவறா....?
5.இவர் மட்டும் என்னமோ புதிதாக வந்து சொல்கிறாரடா....! என்று தான் நினைப்பார்கள்.

ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் குடும்பத்தைச் சார்ந்தோர் எப்படி நினைக்க வேண்டும்...?

ஏகாந்த நிலைகளில் அவர் வாழ்ந்தார் வளர்ந்தார் எத்தனையோ இன்னல்கள் அனுபவித்தார்...!
1.உடலை விட்டுச் சென்ற அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.என்றென்றும் பேரின்பப் பெரு வாழ்வாகப் பேரானந்த நிலை அடைதல் வேண்டும் என்று
4.உந்தி அங்கே விண்ணிலே செலுத்த வேண்டும் என்றுதான் நம் ஞானிகள் காட்டினார்கள்.

ஆனால் இன்று என்ன செய்கிறோம்..? இறந்த உடலைக் கொண்டு எரித்து விட்டு சாம்பலைக் கொண்டு ஆற்றிலே கரைத்து விட்டால் பாவம் போய்விடும்.

அடுத்து இந்தச் சாம்பலைக் கொண்டு போய் கங்கையில் கரைப்பதற்குப் போவார்கள். கங்கையில் கரைத்ததும் கடலில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டால் அவர் பாவம் போய்விடும் என்ற இந்தப் பதிவு தான் மனதில் இருக்கிறது.

தலைமகன் விநாயகர் கோவிலில் தீபத்தை ஏற்றிவிட்டால் அவர்கள் மோட்சம் போய் விடுவார்கள். இப்படித்தான் செய்கின்றோம்.

கங்கையில் கரைக்கச் சொன்னதன் நோக்கம் என்ன...?

“ஒளி கங்கை...!” அதாவது அங்கே விண்ணிலே சப்தரிஷி மண்டல ஒளிக்கடலில் அந்த உயிரான்மாவைக் கலக்கச் செய்து
1.மீண்டும் இருளான இன்னொரு உடலைப் பெறும் உணர்வினைக் கரைக்க வேண்டுமே தவிர
2.உடலை எரித்து அந்தச் சாம்பலை இங்கே கரைப்பது அல்ல.

ஞானிகள் சொன்ன பேருண்மைகளைச் சொன்னாலும் ஏளனமாகவே பார்க்கின்றார்கள். இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

ஆகவே யார் உடலை விட்டுச் சென்றாலும்
1.குடும்பத்தில் உள்ளோர் பாசத்தால் அழுது புலம்பி
2.உங்கள் உடலுக்குள் அந்த ஆன்மாவை இழுத்து விடாதீர்கள். (இது முக்கியம்)
3.அவர்கள் ஆன்மாவை மெய் ஒளியுடன் கலக்கச் செய்ய வேண்டும்.

மூதாதையர்களான குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்தில் கலக்கச் செய்து இந்த வாழ்க்கையில் பட்ட துன்பத்தின் உணர்வுகளை அங்கே கரைக்கச் செய்து அருள் மகரிஷியின் உணர்வை நுகரச் செய்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் மரணமில்லாப் பெருவாழ்வு என்ற நிலையை அடையச் செய்வதே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி.