ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2018

அகஸ்தியன் பெற்ற “அதிசயமான ஆற்றல்கள்”


இன்று நாம் போற்றித்  துதித்துக் கொண்டிருக்கும் அகஸ்தியன்  பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் தோன்றியவன். அவனுடைய தாய் தந்தையர்கள் காட்டுவாசியாக வாழ்ந்து வந்தவர்கள்.

மலைப் பகுதிகளில் வாழ்பவரைப் “புலையர்” என்று நாம் சொல்கின்றோம்.

அவ்வாறு காட்டுவாசியாக வாழ்ந்து வந்த அவர்கள் காட்டு மிருகங்களிடமிருந்து தான் தப்பித்துக் கொள்ளவும் காட்டில் வாழும் சில விஷ வண்டுகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் தாவர இனங்களின் முலாம்களைப் பூசிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு  முலாமும் ஒவ்வொரு மணத்தை உடையது. ஒரு தாவர இனத்தின் மணம் சில வண்டுகளுக்கு உதவாது. சில தாவர இனத்தின் மணத்தைப் பூசிய பின் அந்த வாடையைக் கண்டால் கொசுக்கள் வருவதில்லை.

உதாரணமாக ஒரு ஆரஞ்சுப் பழத் தோலைப் பொடியாக்கி அதை நெருப்பில் போட்டால் அந்த மணம் பட்ட பின் கொசுக்கள் இங்கே வராது. அந்த மணத்தைக் கண்டு அஞ்சிச் செல்லும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் இதைப் போலத் தான் பல பல தாவர இனங்களை தனக்குள் முலாமாகப் பூசிக் கொண்டார்கள்.

இவர் உடலில் முலாம்களாகப் பூசிய பின் இந்த மணங்கள் உடலின் வெப்பத்தால் வெளிப்படும் பொழுது நஞ்சு கொண்ட உயிரினங்கள் எதுவாக இருப்பினும் இதை நுகர்ந்தபின் அஞ்சி ஓடுகின்றது.

கொடூரமான மிக விஷத்  தன்மை கொண்ட பாம்புகள் விஷ ஜெந்துக்கள் அவைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பல பல தாவர இனங்களை முலாமாக பூசிக் கொள்கிறார்கள்.

எந்தெந்த உயிரினங்களுக்கு எந்தெந்த வாடை ஆகாதோ இரவிலே அவர்கள் தூங்கும் போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான  முலாமாகப் பூசிய பின் அந்த உயிரினங்கள் இவர்களை அணுகி வருவதில்லை.
அன்றைய காலங்களில் இருள் சூழ்ந்த நிலைகள் வரும் போது (இரவிலே) தான் காட்டு விலங்குகள் தன் ஆகாரத்தைத் தேடி வருகிறது.

மனிதனோ இரவிலே உறக்க நிலைகள் பெற்றவன். உறங்கும் சமயம் அந்த காட்டு விலங்குகள் இவர்களைக் கொன்று புசித்து விடும். இதைப் போன்ற நிலைகளுலிருந்து மீளுவதற்காக உறங்கும் சந்தர்ப்பத்தில் மற்ற தாவர இனங்களை முலாமாகப் பூசிக் கொள்வார்கள்.

இன்றும் சில சாதுக்கள் வெளியிலே சென்றால் இதே மாதிரி முலாம்களை பூசிக் கொள்வார்கள். சிலர் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள்.

அதன் மூலம் கொசு விஷ ஈக்கள் போன்ற மற்ற விஷமான உயிரினங்கள் தன்னைத் தாக்கிடாதபடி காத்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இன்றும் காட்டுப் பகுதியில் வாழ்பவர்கள் இதை போல முலாம்களைப் பூசி வருகிறார்கள்.

பண்டைய காலங்களில் பல பல தாவர இனங்களைத் தனக்குள் முலாமாக பூசினாலும் அதைச் சுவாசிக்கும் பொழுது அது அவர்கள் உடலுக்குள்ளும் பரவுகிறது.

சந்தர்ப்பத்தால் கருவுறுகிறார்கள். இவர்கள் பூசிய முலாம் அனைத்தும் இவர்கள் நுகர்ந்து நுகர்ந்து தாயின் கருவிலே வளரும் இந்த சிசுவிற்கும் (குழந்தைக்கும்) போய்ச் சேர்கிறது. குழந்தைக்குள்ளும் நஞ்சினை வென்றிடும் சக்தியாக இது வளர்ச்சி பெற்று வருகின்றது.

அக்கால மக்கள் சூரியனைக் கடவுளாக வணங்கியவர்கள் தெரிந்தோ தெரியாமலோ...! அகஸ்தியனுடைய தாய் தந்தையரும் சூரியனைக் கடவுளாக வணங்கி வந்தார்கள். ஏனென்றால்
1.இருளை நீக்கி ஒளியைக் கொண்டு வரும் போது
2.“இது தான்” (சூரியன்) மிருகங்களிடமிருந்து காத்திடும் நிலையாக
3.“கடவுள் நம்மைக் காக்க வருகின்றான்...!” என்று சூரியனை வணங்கிப் பழகியவர்கள்.

மேலை நாடுகளில் சூரியனைக் கடவுளாக வைத்து வணங்கும் நாடுகளும் உண்டு. நம் நாட்டிலும் சூரியனைத் தான் பெரும் பகுதியாக வழிபட்டு வருகின்றோம்.

1.இதைப் போல அவர்கள் சூரியனை வழிபட்டு வரும் போது
2.இவர்கள் விஷத் தன்மை கொண்ட தாவர இனங்களின் முலாமைப் பூசியிருப்பினும்
3.சூரியனை பார்க்கும் போது சூரியனின் கதிர் வேகங்கள் தணிந்து நிற்கின்றது.
4.ஏனென்றால் அது உமிழ்த்தும் நஞ்சும் இவர்கள் பூசியிருக்கும் நஞ்சும் சமப்படும் போது
5.இவர்கள் சூரியனைத் தாராளமாகப் பார்க்க முடிகின்றது – கண்கள் கூசுவதில்லை.

சூரியனின் கதிரியக்கங்களைச் சமப்படுத்தும் நிலையாக வரும் பொழுது அகஸ்தியன் தாய் தந்தையருக்கும் இது கிடைக்கிறது. கருவிலே விளையும் குழந்தைக்கோ அதி பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறந்த அந்தக் குழந்தை (அகஸ்தியன்) தனிமையில் கிடந்தாலும் நஞ்சு கொண்ட பாம்பினங்களோ மற்ற  உயிரினங்களோ அந்தக் குழந்தை அருகில் செல்வதில்லை.

சூரியனை வணங்கி வந்த அக்காலத்தில் “இது கடவுளின் பிள்ளை... இது கடவுளால் கொடுக்கப்பட்ட பிள்ளை...!” என்று என்று அகஸ்தியனின் தாய் தந்தையரே அவரைக் கடவுளாக வணங்கத் தொடங்கி விட்டார்கள்.

இதைப் போன்ற அற்புத நிகழ்ச்சிகளும் பல காட்டு விலங்குகள் இவனிடம் அணுகாத நிலைகளும் வளர்ந்து கொண்டே வந்தது.

இவர்களோ உடலிலே முலாமைப் பூசினார்கள். அந்த முலாமின் உணர்வுகள் கருவிலே வளர்ந்த குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

சூரியனின் உணர்வின் ஆற்றல் அகஸ்தியனுக்குள் பெருகிப் பெருகி  சூரியனை இவன் நேரடியாகப் பார்த்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான்.
1.டெலெஸ்கோப்பை வைத்து இன்று நாம் எதைப் பார்கின்றோமோ அது போல
2.உணர்வின் செல்களுக்குள் மற்றததை ஒளி கொண்டு வெகு தூரம் பாய்ச்சி
3.அணுவின் தன்மையை அறியும் ஆற்றல்
4.தாய் தந்தை மூலமாகக் கருவிலேயே விளைகின்றது.

இது அகஸ்தியனுடைய சந்தர்ப்பம்

அவன் பிறந்து ஐந்து வயது ஆகும் போதே விண்ணை நோக்கிப் பார்ப்பதும் பிற துஷ்ட மிருகங்கள் இவனைக் கண்டு அஞ்சுவதும் இதைப் போன்ற பல அற்புத நிகழ்ச்சிகளும் நிகழ்கின்றன.

 கண் கொண்டு நேரடியாகவே  ஒரு அணுவின் சிதைவும்... அணுவின் கூட்டமைப்பும்... அணுவின் தன்மையையும்... அணுவின் ஆற்றலையும் அகஸ்தியன் காண்கின்றான்.

சாதாரணமாக உயிரினம் முட்டை இடுகின்றதென்றால் அது “இன்ன முட்டை” என்றும் அதில் எப்படி அணுவின் தன்மை உருவானது என்றும் அவன் கண்டுணர்கின்றான்.

நமது பூமியில் உருவான தாவர இனத்தின் மணங்களைக் காணும் போது “இன்ன செடியிலிருந்து வந்த மணம்” என்று அதைப் பிரித்து சொல்லும் தன்மை ஐந்து வயதிலேயே அகஸ்தியனுக்கு வருகிறது.

இதையெல்லாம் காணும் பொழுது தாய்க்கோ பேரானந்த நிலை வருகிறது. குழந்தை தன்னிச்சையாக எங்கே சென்றாலும் அச்சமின்றிச்  செல்லுகின்றான்.  இவனைப் பார்க்கும் மற்றவைகள் தான் அஞ்சுகின்றது.

ஆனால் இவன் தாய் தந்தையரோ மற்றவர்களோ முலாம் பூசாமல் போனால் மற்ற விலங்குகள் அவர்களைக்  கொன்றுவிடும்.

இருந்தாலும் இவர்கள் உடலிலே பூசிய முலாம்களின் நஞ்சு சிறுகச் சிறுகச் சேர்ந்து நஞ்சின் தன்மை அதிகரித்து உடல்கள் மடிந்து விடுகிறது. அகஸ்தியன் ஐந்து வயது வருவதற்குள் இந்த இரண்டு பேரும் மடியும் தருணம் வந்து விடுகிறது.

மடியும் போது ஐந்தே வயதான இந்த இளம் பிஞ்சு உள்ளத்தை இந்த காட்டுக்குள் விட்டுச் செல்லுகின்றோமே என்ற ஏக்க உணர்வு அதிகமாகின்றது.

செயலற்ற நிலைகள் வரும் போது தாய் தந்தை இருவரும் ஒருமித்த நிலையில் குழந்தையை எண்ணி ஏங்கியே அந்த உயிரான்மாக்கள் பிரிகின்றது.

வெளி வந்த பின் எந்தக் குழந்தை மேல் பற்று வைத்தனரோ அகஸ்தியனுக்குள் இந்த இரண்டு ஆன்மாக்களும் புகுந்து விடுகிறது.

அவர்களுடைய வாழ்க்கையில் எதையெல்லாம் வளர்த்தார்களோ அந்த உணர்வின் ஆற்றலைத் தன் குழந்தையைக் காத்திடும் உணர்வாக அந்த உடலுக்குள் புகுந்த பின் இயக்கத் தொடங்கினார்கள்.

தன் தாய் தந்தை மடிந்ததை எண்ணி அகஸ்தியனும் ஏங்குகின்றான். தன் அன்னை தந்தை தன்னைப் பேணிக் காத்ததை எண்ணி “தன் அன்னையைப் பார்க்க வேண்டும்...!” என்ற ஏக்கத்தில் சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

கடவுள் என்று தாய் தந்தையர் உற்றுக் காண்பித்த அந்த உணர்வு கொண்டு சூரியனை உற்று நோக்கும் போது அங்கு நடக்கும் அதிசயங்களைக் கண்டுணர்கின்றான் அகஸ்தியன்.

அதை அவன் உடலிலே விளைய வைத்து ஒவ்வொன்றும் அறிவின் தன்மையாக 
1.விண்ணின்  ஆற்றலை அறியும் ஆற்றலாக
2.அவனின்று வெளி வந்த உணர்வுகளச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்துள்ளது
3.இதிலிருந்து அலைகளாக இன்றும் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது.

நான் (ஞானகுரு) இப்போது பேசுகின்றேன் என்றால் குருநாதர் அந்த அகஸ்தியன் வெளிபடுத்திய உணர்வை எடுக்கும் வழியை உணர்த்தினார்.

அதனின் உணர்வின் துணை கொண்டு அதை அறியும் ஆற்றல் பெற்றேன். அறிந்த பின் உங்களுக்குள்ளும் இதை உணர்த்திக் கொண்டிருக்கின்றோம்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் வெளிப்பட்டதாக இருந்தாலும் நாம் ஒவ்வொருவருமே இன்று காண முடியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எப்படிக் காண்பித்தாரோ  அதைப் போல
2.அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணுலக ஆற்றலை எல்லோரும் கண்டுணர்ந்து
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் முழுமை பெற முடியும்.