ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 3, 2018

சண்டை போடுபவர்களைப் பார்க்க நேர்ந்தால் அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்...?


நாம் ரோட்டில் போய்க் கொண்டிருக்கின்றோம். ஒரு இரண்டு பேர் ஒருவருக்கொருவர் காரசாரமாகப் பேசிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பார்த்தவுடன் நமக்கும் அந்த ஆத்திரம் வருகின்றது. “இப்படிப் பேசுகின்றார்களே...!” என்ற கொதிப்பு வருகின்றது. அப்பொழுது அதை உடனே நமக்குள் வராது நிறுத்திப் பழக வேண்டும்.

ஈஸ்வரா...” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று இதை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் அந்த இரண்டு பேருக்குள்ளும் ஒத்துப் போகக்கூடிய அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணித் தியானித்து அந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.
1.இதை அவர்களிடம் சொல்லக் கூடாது
2.மனதிலே உங்கள் உடலிலே அவர்கள் தீமைகள் உருவாகாதபடி தடுத்துப் பழக வேண்டும். (இது மிகவும் முக்கியம்)

ஏனென்றால் அவர்களின் உணர்வுகளை நாம் எடுத்துக் கொண்டால் நாம் நினைக்கும் பொழுதெல்லாம் அந்தத் தீமைகள் வரும். அந்த உணர்வுகள் நிச்சயமாக உடலுக்குள் வளரும்.

முதலில் கருவாகி விட்டால் அந்த உணர்வு மீண்டும் அணுவாக ஆகும். அணுவின் தன்மை அடைந்து விட்டால் அதனின் மலமாகின்றது. அந்த மலம் நம் உடலில் “இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

அந்த அணுக்கள் உடலில் எல்லா இடங்களிலும் போனவுடன் உடல் நலம் கெடும். ஆக வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகின்றது.

நம் ஆன்மாவில் படும் இத்தகைய தீமைகளை வளராது தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படரவேண்டும் என்று இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.துருவ நட்சத்திரம் எப்படிச் சிறிதளவு விஷத்தையும் ஒளியாக மாற்றுகின்றதோ
2.அதைப் போல நம் உடலுக்குள் சந்தர்ப்பத்தால் வரும்
3.தீமையான உணர்வுகளை அது அடக்கி ஒளியாக மாற்றிவிடும்.
4.தீமைகள் நமக்குள் வராது... வளராது... எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும்.