ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2018

“துறவறம் என்பது எது…?” - வாழ்க்கையில் நம்மை வந்து மோதும் எந்தத் தீமைகள் மீதும் “பற்று வைக்கக் கூடாது”


ஜய கணேச ஜய கணேச பாஹிமாம்… ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷமாம் என்று இப்படி எத்தனையோ பாடல்களைப் பாடுகின்றோம்.

இருந்தாலும் அந்தக் கணேசன் எங்கே இருக்கின்றான்…? அவன் எந்த நிலைகளில் எவ்வாறு இயக்குகின்றான்…! என்ற தத்துவங்களைக் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

அவ்வாறு கொடுத்திருந்தாலும் இன்று புகழ் பாடும் நிலைகள் கொண்டு பொருள் காண முடியாத நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
1.மெய்ப் பொருள் கண்டுணர்ந்த
2.அருள் ஞானிகள் காட்டிய உணர்வுகள்
3.நமக்கு முன் பரவிக் கொண்டேயிருக்கின்றது என்பதை
4.மாமகரிஷி ஈஸ்வரபட்டர் (குருநாதர்) உணர்த்தினார்.

ஆனால் அவர் கிழிந்த வேஷ்டியையோ அல்லது ஒரு சாக்கையோ தான் ஆடையாக உடுத்தியிருப்பார்.

ஏன் சாமி… இப்படிக் கட்டியிருக்கின்றீர்கள்…! என்று நான் (ஞானகுரு) கேட்டேன்.

எல்லோரும் என்னைப் பித்தனாகத்தான் நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் எத்தகைய நிலையில் பித்தராக இருக்கின்றார்கள்…? என்ற நிலையை “நீ அதை உணர்ந்து கொள்…!” என்றார் குருநாதர்.

1.நீ இதைப் பற்றாதே…. நீ அந்த ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பற்று…!
2.இவர்களுடைய நிலைகளை நீ எண்ணாதே…. நான் கொடுத்த உணர்வின் தன்மை கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை நீ பற்று.
3.வாழ்க்கையில் உன்னை அசிங்கப்படுத்தும் நிலைகளில் யார் உன்னைக் கேவலமாகப் பேசினாலும்… சங்கடமாகப் பேசினாலும்… கோபமாகப் பேசினாலும்… வேதனையாகப் பேசினாலும்… அதையெல்லாம் பற்றாதே…..!
4.விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நீ பற்று. தீமைகளைப் பற்றற்றதாக்கு.
5.பற்றுடன் பற்ற வேண்டிய அந்த அருள் ஞானிகளின் நிலைகளை மக்கள் மத்தியிலே அதைப் பற்றும்படி நீ செய்.
6.அதன் மீது பற்றுடையவர்களாக நீ ஆக்கு…. “அதை நீ நேசி…!” என்றார் குருநாதர்

தீமைகளை அகற்றிய மகரிஷிகளின் உணர்வுகளைப் பற்றுடன் பற்றும் பொழுது வாழ்க்கையில் நம்மை வந்து மோதும் தீமைகள் பற்றற்றதாக எவ்வாறு ஆகின்றது…?

அருள் உணர்வுகளை நமக்குள் எவ்வாறு விளையச் செய்ய வேண்டும் என்பதைக் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசிக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் ஆணைப்படி நீங்கள் எல்லோரும் மகரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையைப் பெற முடியும் என்ற அந்த நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.