ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2018

அதிகாலையில் துருவ தியானம் எப்படிச் செய்ய வேண்டும்...? “மேக்னடார் சக்தி...”


துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்.

நாங்கள் பார்க்கும் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும். இந்த மாதிரி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பன்னிரண்டு மாதமும் இப்படிச் சுத்தப்படுத்துவதற்குண்டான வழியைத்தான் நம் ஞானிகள் சொல்லி இருக்கின்றார்கள். நாம் யாராவது இப்படி நினைக்கின்றமா...?

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால்
1.உடனே “ஈஸ்வரா.....!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் அவர் உடல் முழுவதும் படர வேண்டும்  
4.அவர் உடல் சீக்கிரம் நலமாக வேண்டும் என்று அந்த இடத்தில்
5.இந்த மாதிரி எண்ணி உஷாராக இருக்க வேண்டும்

அதே மாதிரி என் பையன்.. “சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்... கேட்க மாட்டேன் என்கிறான்...! என்றும் என்னிடம் காசை வாங்கிச் சென்றவன்.. “திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறான்... கொடுக்க மாட்டேன் என்கிறான்...!” என்றும் இப்படி எண்ண வேண்டியதில்லை.

“நஷ்டம்...நஷ்டம்...” என்றால் நஷ்டமே தான் வந்து கொண்டு இருக்கும். “கஷ்டம்...கஷ்டம்..!” என்றால் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டு தான் இருக்கும்.

நம்மிடம் பணத்தை வாங்கிச் சென்றவனுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். திருப்பிக் கொடுக்கும் அந்தச் சக்தி அவனுக்கு வர வேண்டும் என்று அதிகாலையில் இதே மாதிரி எண்ணி உறுதிப்படுத்திப் பாருங்கள்.

அவனும் நன்றாக இருப்பான். நாமும் நன்றாக இருப்போம்.

எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.

 என் பையன் நன்றாக கல்வியில் ஞானம் பெற வேண்டும். அவன் கருத்து அறிந்து செயல்படும் திறனும் எல்லோரும் போற்றும் நன்மை பெற வேண்டும். அவனுக்கு அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம்மை அறியாத சந்தர்ப்பம் தான் தீயவைகள் நடக்கக் காரணமாகின்றது. தீமை என்ற உணர்வு நமக்குள் வராதபடி நிவர்த்தி செய்வதற்கு எத்தனையோ வகையான வழிகளை ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள்.

நல்லது செய்ய இப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் “துருவ தியானம்” என்பது.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நாம் கவரும் பொழுது
1.நம் ஆன்மாவில் இருக்கும் நம்மை அறியாது புகுந்த தீமையான உணர்வுகள்
2.அவைகள் வலு பெறாதபடி அனாதையாகி விடுகின்றது.
3.அனாதையான உணர்வுகளைச்  சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று கடலுக்கடியில் அமிழ்த்தி விடுகின்றது.
4.நம் ஆன்மா சுத்தமாகின்றது... ஜீவான்மா சுத்தமாகின்றது உயிரான்மா ஒளியாக மாறுகின்றது.
துருவ தியானம் என்றால் என்னமோ ஏதோ என்ற நிலையில் நாம் உட்கார்ந்து “இப்படித் தான் செய்ய வேண்டும்... அப்படித்தான் செய்ய வேண்டும்...! என்று நினைக்க வேண்டியதில்லை.

படுக்கையிலிருந்து எழுந்தவுடனே அப்படியே “டக்...” என்று உட்காருங்கள்.
1.”ஈஸ்வரா...” என்று உங்கள் உயிரை நினையுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள்.

அப்படியே ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஏங்கி இருங்கள். மூன்றாவது நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
1.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணுங்கள்
4.உடலில் உள்ள அத்தனை அணுக்களுக்கும் இந்த நினைவு “மேக்னடார்... ஆகின்றது...!”

அதாவது எந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைக்கின்றமோ அதைத்தான் ரேடியோ டி.வி கவரும். அதைப் போல எங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் அந்தச் சக்தியைக் கவரும் நினைவாற்றலைக் கொண்டு வருகின்றோம். (மேக்னடார் என்றால் கவரும் சக்தி)

அப்போது எல்லாம் அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரும் பொழுது தீமை செய்யும் அணுக்களுக்குச் சாப்பாடு இல்லாமல் தடைப்படுத்தப்படுகின்றது. அவைகள் சோர்வடைந்து விடுகின்றது. தீமை செய்யும் அணுக்கள் ஜீவன் பெறுவதில்லை.

எப்படித்தான் இருந்தாலும்.....
1.இந்த உடல் நம்முடன் வருகின்றதா...?
சேர்த்த செல்வங்கள் நம்முடன் வருகின்றதா...? இல்லையே...!

இன்றைக்கு நாம் எந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வுக்கொப்பத்தான் நம் உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணத்திலிருந்தால் அதனின் கணக்கு நமக்குள் ஜாஸ்தியாகக் கூடும்.

1.”நீ வாப்பா...!” என்று
2.அது நம்மை நேரே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே கூட்டிக் கொண்டு போகும்
3.உடலில் சேர்த்த நஞ்சையெல்லாம் கரைத்துவிடும்
4.பேரானந்தப் பெரு நிலை நாம் அடைவோம்...!