ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 21, 2018

தீமைகளைத் திரும்பத் திரும்ப எண்ணாமல் “விட்டுவிட்டோம்...” என்றால் தீமைகள் நமக்குள் வளரவே முடியாது...!


சந்தர்ப்பத்தால் ஒருவர் மேல் நமக்கு வெறுப்பாக வருகின்றது. அப்போது அவர் உணர்வை நமக்குள் பதிவாக்கிக் கொள்கின்றோம். அதே சமயத்தில் அவரும் நம் மீது வெறுப்பு அடைகிறார். இரண்டுமே நமக்குள் பதிவாகின்றது.

1.நாம் கோபமாக இருக்கின்றோம் என்பது தெரிகின்றது.
2.நம் மேல் அவர் கோபமாக இருப்பதும் தெரிகின்றது.
3.அவர் கோபிக்கின்றார் என்று தெரிகின்றது... எதனால் கோபித்தார்...? என்கின்ற வகையிலும் தெரிகின்றது.
4.அதாவது வெளிச்சத்தில் “பொருள்கள் தெரிவது போல்” இது எல்லாமே தெரிகின்றது.

மகாபாரதத்தில் கௌரவர்கள் பஞ்ச பாண்டவர்கள் என்று தனித் தனியாகக் காட்டுகின்றனர். பாண்டவர்கள் ஐந்து பேர். கௌரவர்கள் நூறு பேர்.

கௌரவர்கள் என்ன செய்கின்றார்கள்...? அவர்கள் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை.
1.தான் எடுத்த காரியத்தை சாதிப்பது...! இது தான் கௌரவர்களுடைய வேலை.
2.”நாங்கள்  ஜெயிக்க வேண்டும்....” என்று எண்ணத்திலேதான் செயல்படுகிறார்கள்.

அதாவது நாம் எடுத்துக் கொண்ட அந்தக் குணம் அதனின் இயல்பை விட்டுக் கொடுப்பதில்லை.

அந்த மாதிரித்தான் நமக்குள் இருக்கக்கூடிய (உணர்வுகள்) அந்தப் பிடிவாத குணம்
1.ஒருவருக்கு நாம் தாழ்பணிவதா…? என்கிற நிலை வருகிறது (நமக்கே இது தெரியும்)
2.நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று தெரிகின்றது
3.நமக்கு விட்டுக் கொடுப்பதற்கு மனம் இல்லை.
4.நாம் விட்டுக் கொடுத்தாலும் அவர் விட்டு கொடுப்பதற்கு மனம் இல்லை.

அப்போது விட்டுக் கொடுக்காமல் இருக்கக் காரணம் என்ன...? ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் என்ன செய்யும்...?

அந்தச் செடியில் (தாய்ச் செடி) இருக்கின்ற சத்தை ஏற்கனவே சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது. அதில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் அந்தச் சத்தைப் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு அது இழுக்கின்றது.

அதற்குள் சேர்கின்றது. அந்த உணர்வுக்கொப்ப அந்தச் செடி விளைகின்றது. பின் தன் இனத்தை விருத்தி செய்கின்றது.

அதே போன்று தான் ஒரு மனிதன் உடலில் அந்தப் பிடிவாத குணம் விளைகின்றது என்றால் அந்த வித்துதான் சொல்லாகப் போய் பாயும்.

அந்த உணர்வுகள் பாயும் பொழுது உயிர் அதை நுகர்கின்றது. நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் அதனின் வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

வித்தாகப் பதிவாக்கப்படும் போது “கோபிக்கின்றான்” என்று தெரிகின்றது.
1.அவர் உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழலும் பொழுது
2.பதட்டமும் கோபமும் இன்னும் கொஞ்சம் நமக்கு அதிகமாக வரும்.
3.ஏனென்றால் நுகர்ந்த அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது.

அப்புறம் என்ன செய்கின்றோம்...?

ஒரு கோழி கருவாக (கருவுற்று) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த நேரத்தில் என்ன செய்கின்றது...?
1.உருவான கரு “முட்டையாக...!” முழுமையாவதற்கு கேறிக் கொண்டே இருக்கிறது.
2.அந்த உணர்வின் ஒலிகளை எடுத்துக் கொண்டே இருக்கிறது.
3.கேறவில்லை என்றால் முட்டை கூகையாகிப் போகும்.
(கேறுதல் என்றால் சப்தமிடுதல். கூகை - கூமுட்டை அதில் குஞ்சு உருவாகாது)

அதைப் போன்று தான் ஒருவன் நம்மைத் திட்டுகிறான் அல்லது கோபத்தில் ஒன்றைச் சொல்லி விட்டான் என்றால் “சரி போகட்டும்...!” என்று அதை “விட்டு விட்டோம்...” என்று சொன்னால் அது நமக்குள் சுத்தமாக விளையாது.

எது...?

"இப்படித் திட்டிக் கொண்டே இருக்கின்றானே..." அவன் எப்படி இப்படிப் பேசலாம்...? நம்மை அவன் இப்படித் திட்டலாமா...? என்று நாம் திரும்ப திரும்பச் சொன்னோம் என்றால் அவன் எந்தக் கெடுதலை எண்ணிச் சொன்னானோ அது நமக்குள் விளைகின்றது.

அதாவது ஒரு தடவை திட்டியிருந்தாலும் அது நமக்குள் பதிவானாலும் அதை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது கோழி கேறுவது போன்று ஆகி
1.கோபித்துப் பேசிய உணர்வுகள் நமக்குள் ஒரு முட்டையாக முழுமை அடைந்து விடுகின்றது.
2.அது வெடித்து கோபத்தை ஊட்டும் அணுவாக வெளி வந்து
3.அவன் கோபித்துப் பேசியது போல் நம்மையும் பேச வைக்கும்.

அதனின் வளர்ச்சியில் ஒருவரிடம் பதிவு செய்து விட்டால் அடுத்து அவரைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வருகின்றது. மனதை அடக்கினாலும் முடியவில்லை...!

மற்றவர்கள் சொன்னாலும்... எங்கேங்க....? கோபத்தை என்னால் அடக்கவே முடியவில்லை. அவனைப் பார்த்ததும் எனக்குக் கோபம் பயங்கரமாக வருகிறது என்பார்கள்.

அதை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய வழியில் “ஆத்ம சுத்தி” என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

யார் எதைச் சொன்னாலும் அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி கவர்ந்த அந்த அருள் சக்திகளைக் உடலுக்குள் பரவச் செய்தால் திட்டுபவரின் உணர்வுகள் நமக்குள் வராது.

திட்டுபவனை மீண்டும் மீண்டும் எண்ணினால் கெடுதல் செய்யும் உணர்வுகள் நமக்குள் விளைந்து நம்மையும் கெடுக்கும். கெடுதலான செயல்களைச் செய்ய வைக்கும்.

1.தீமைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய மகரிஷிகளை எண்ணினால்
2.கெடுதல் செய்யும் உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்கும்.
3.கெடுதல்கள் செய்பவர்களையும் இந்த உணர்வுகள் போய்ச் சிந்திக்கச் செய்யும்.
4.கெடுதல் செய்யும் அந்த எண்ணத்தையே அவர்களுக்குள் மாற்றிவிடும்.

செய்து பாருங்கள்...! உங்கள் அனுபவம் பேசும்...